என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Cadres"

    • ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது.
    • உடன்பிறப்புகள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ்க் கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் வெளிநாட்டிலிருந்து எழுதும் மடல்.

    ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் இலண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலமாகவும், வேலைவாய்ப்புகளை 15% வழங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்கிற ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களை உடன்பிறப்புகள் அறிந்திருப்பீர்கள்.

    ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்தி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியைப் பெறுகிற வகையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் ஆகஸ்ட் 30 அன்று ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினேன். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "2021 முதல் இதுவரை 10 இலட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 32 இலட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன" என்பதையும், இதுவரை நான் பயணம் மேற்கொண்ட ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களையும் அவற்றில் முழுமையடைந்த திட்டங்கள், செயல்பாட்டில் உள்ள திட்டங்கள், உருவாகியுள்ள வேலைவாய்ப்புகள் என அனைத்தையும் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்து, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தினரின் உள்ளன்பான வாழ்த்துகளையும் பெற்று விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்திற்கு வந்தேன்.

    அங்கு எமிரேட்ஸ் விமான சேவையின் 25-ஆம் ஆண்டு விழா கேக் வெட்டும் நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது. மாண்புமிகு துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களும் உடனிருந்தார். எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, நானும் என் துணைவியாரும், அரசு அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களுடன் விமானத்தில் துபாய் வழியாக ஆகஸ்ட் 30 சனிக்கிழமை இரவு ஜெர்மனியில் NRW எனப்படும் நார்த்ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தலைநகரான டசெல்டோர்ஃப் விமான நிலையத்தில் தரையிறங்கினோம்.

    தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக உங்களில் ஒருவனான என் வழிகாட்டுதலின்படி முன்கூட்டியே ஜெர்மனி நாட்டிற்கு வந்திருந்த மாண்புமிகு தொழில் - முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான தம்பி டி.ஆர்.பி.ராஜா விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றார். NRW மாநில அரசின் சார்பாகத் தூதரக விவகாரங்கள் மற்றும் அரசு முறை வரவேற்புப் பிரிவைச் சார்ந்த திருமிகு அன்யா டி வூஸ்ட், பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பாளர் திரு.அபிஷேக் துபே, ஃப்ராங்க்பர்ட் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் பொறுப்பில் உள்ள திரு.விபா காந்த் ஷர்மா ஆகியோர் மகிழ்வுடன் வரவேற்றனர்.

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் நிலையில், ஜெர்மனி நாட்டில் உள்ள இந்திய அதிகாரிகளின் வரவேற்பு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அந்த மகிழ்ச்சியுடன் டசெல்டோர்ஃப் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது ஓர் இன்ப அதிர்ச்சி.

    அந்தப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று வரவேற்பளித்தனர். குழந்தைகள் பதாகை ஏந்தி அன்பைப் பொழிந்தனர். அவர்களின் பாசம் மிகுந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு, குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுவிட்டு, கொலோன் நகரில் உள்ள 120 ஆண்டு பெருமையுள்ள எக்ஸல்ஸியர் ஹோட்டலுக்கு வந்தோம்.

    புகழ்பெற்ற ரைன் நதியின் கரையோரமாக அது கட்டப்பட்டுள்ளது. கொலோன் நகரின் அந்த ரைன் நதிக்கரையில்தான் வடஐரோப்பாவின் பழமையானதும் உயரமானதுமான தேவாலயம் ஒன்று உள்ளது.

    நாங்கள் ஹோட்டலுக்குச் சென்ற அன்றைய இரவு நேரத்திலும் ஹோட்டல் பகுதியிலும் தெருக்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தனர். என்ன விவரம் என்று கேட்டேன். லைட்ஷோ என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். கொலோன் நகரில் நடந்த வாணவேடிக்கைகளை ரசித்தபோது மனதெங்கும் தமிழ்நாட்டின் நினைவுகள் மத்தாப்பூகளாகச் சிதறின.

    மறுநாள் காலையில் எழுந்ததும், அந்த இனிய வேளையில் ரைன் நதிக் கரையோரமாக நடைப்பயிற்சியை மேற்கொண்டேன். முந்தைய இரவுதான் அங்கே பெருங்கூட்டத்துடன் வாணவேடிக்கை நடந்தது. தின்பண்டங்களுடன் மக்கள் அதனை இரசித்தபடி இருந்தனர். ஆனால், அப்படியொன்று நடந்ததற்கான சுவடே தெரியாமல் அவ்வளவு தூய்மையாக அந்தப் பகுதி இருந்தது. கொலோன் நகர நிர்வாகத்தின் விரைவான -தூய்மையான பணியை வியந்தபடி நடைப்பயிற்சி சென்றேன். ஜெர்மனியர்கள் பலரும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். காலை நேரத்தில் நம் பணிகளுக்கான முதல் ஊக்கமாக அமைவது இத்தகைய பயிற்சிதான் என்ற விழிப்புணர்வுடன் அவர்கள் உடல் கட்டமைப்பை சீராக வைத்திருப்பதைப் பார்த்தேன்.

    சென்னையில் இருந்தாலும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தாலும், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு வந்தாலும் காலை நேரத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்வதை உங்களில் ஒருவனான நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். பொதுவாழ்வுப் பணிகளில் ஏற்படும் களைப்பு - சலிப்பு எதுவும் என்னை நெருங்கவிடாமல் தொடர்ந்து உழைப்பதற்கு அது ஊக்கசக்தியாக உள்ளது. அன்பு உடன்பிறப்புகளும் நடைப்பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு, உடல்நலன் காத்து, உங்கள் குடும்பத்திற்கும் கழகத்திற்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    நடைப்பயிற்சியில் என்னுடன் வந்த தம்பி டி.ஆர்.பி.ராஜா ஜெர்மனியில் எந்தெந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றன, அந்த நிறுவனங்கள் என்ன உற்பத்தி செய்கின்றன, அவற்றின் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட விவரங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். அவற்றைக் கவனமாகக் கேட்டுக்கொண்டதுடன், என்னுடைய செயலாளரிடம், தமிழ்நாட்டின் நிலவரங்கள் குறித்து கேட்டேன்.

    சென்னையில் அன்றைய இரவு கடுமையான மழை பெய்த விவரம் அறிந்ததும், மாநகராட்சி கமிஷனருக்கு போன் செய்து கேட்டபோது, மணலியில் மட்டும் 27 செ.மீ. மழை பெய்தது என்றும், சென்னையின் பல இடங்களிலும் இரவில் கடும் மழை என்றும் தெரிவித்ததுடன், எந்தப் பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை என்பதையும், சுரங்கப்பாதை எதுவும் மூடப்படவில்லை என்பதையும் தெரிவித்தனர். அதிகாரிகள் குமரகுருபரன், கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர் களத்தில் நின்று, மழை அதிகமாகப் பெய்த இடங்களில் தண்ணீரை உடனடியாக வெளியேற்றும் பணிகளை முழுமையாக நிறைவேற்றியதைத் தெரிவித்தனர்.

    துணை முதலமைச்சர் தம்பி உதயநிதிக்கு போன் செய்து, சென்னையில் இரவு பெய்த கனமழை பற்றிய விவரம் கேட்டபோது, அவர் அனைத்துத் துறைகளுடனும் தொடர்புகொண்டு பணிகளை விரைவுபடுத்தியதையும், சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்பதையும் தெரிவித்தார். எந்த நாட்டில், எந்த நகரில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது.

    அந்த நேரத்தில், மனதை பாரமாக்கும் வகையில் அண்ணன் வீரபாண்டியார் அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி.லீலா ஆறுமுகம் அவர்கள் மரணமடைந்த செய்தி வந்தது. உடனே, வீரபாண்டியாரின் மகன் தம்பி பிரபுவைத் தொடர்பு கொண்டு இரங்கலைத் தெரிவித்து, ஆறுதல் கூறினேன். நடைப்பயிற்சி முடித்து, ஒரு காபி சாப்பிட்டுவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பி, அன்றைய சந்திப்புகளைத் தொடர்ந்தேன்.

    ஆகஸ்ட் 31 மாலையில் நம் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு நேரம். ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்களுடனான சந்திப்பு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், ஸ்வீடன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களும் அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்தனர். கழகத்தின் சார்பில் தம்பி டி.ஆர்.பி.ராஜா செயலாளராக இருந்து தொடங்கிய NRTIA எனும் வெளிநாடு வாழ் இந்தியத் தமிழ்ச் சங்கத்தைத் தற்போது அயலக அணிச் செயலாளர் தம்பி எம்.எம்.அப்துல்லா செயலாளராக இருந்து சிறப்பாக நடத்தி வருகிறார். ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள நமது NRTIA நிர்வாகிகள் நல்ல முறையில் ஒருங்கிணைத்திருந்தனர்.

    ஐரோப்பாவில் வசிக்கும் தமிழர்களைக் காண்பதற்கு உங்களில் ஒருவனான நான் தமிழ்நாட்டிலிருந்து சென்றதால், நமது பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை, மேல் துண்டு அணிந்து அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டபோது அங்கிருந்த தமிழர்கள் மகிழ்ந்து வரவேற்றனர். நல்லதொரு வரவேற்புரையை வழங்கினார்கள். அவர்கள் முன், நான் பேச எழுந்தபோது, கடல் கடந்து வாழ்கின்ற தமிழ்ச் சொந்தங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது.

    "நில எல்லைகளும், கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை இணைக்கிறது. கண்டங்களைக் கடந்துவிட்டாலும் நம்முடைய தொப்புள் கொடி அறுந்துவிடவில்லை" என்பதை அவர்கள் முன் சொன்னபோது கைத்தட்டி வரவேற்றனர். "திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கிறோம். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஓடோடி வந்து உதவுகிறோம் என்பதைத் சொல்லி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் வகையில் முதலீடு செய்ய வாருங்கள். ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்கு வாருங்கள். உங்கள் உறவாக - உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்" என்ற உறுதியை அளித்தேன்.

    எந்த வெளிநாடுகளுக்கு நான் சென்றாலும் அங்கே உள்ள தமிழ்க் குழந்தைகள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல வகை நடனங்கள், பாடல்கள், பறை இசை, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவது வழக்கம். அவற்றைக் கண்டு ரசிக்கும்போது உள்ளூரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. புதுப்புது கலை வடிவங்களை நாம் இரசித்தாலும் நம் பாரம்பரிய கலைகளை நம் குழந்தைகள் கற்றுக்கொண்டு அதை வெளிப்படுத்தும்போது மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படுவது இயற்கை. உடன்பிறப்புகள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ்க் கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ஜெர்மனியில் தமிழர்களுடனான சந்திப்பை நடத்துவதில் ஒத்துழைப்பு வழங்கியதுடன் ஐரோப்பாவில் தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தமிழ்ச் சங்கங்களின் சேவைகளைக் கேட்டு மகிழ்ந்து, அந்த சங்கங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினேன்.

    என்னையும் தங்களில் ஒருவனாகக் கருதிய ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பா வாழ் தமிழர்கள், என்னிடமும் அருகில் இருந்த என் துணைவியாரிடமும் குடும்பம் குடும்பமாக வந்து படம் எடுத்து அன்பை வெளிப்படுத்தினர். அந்தப் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.

    தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த NRTIA நிர்வாகிகளான துணை அமைப்பாளர்கள் இளந்தென்றல், ஜோசப்பைன் ரம்யா, அபிராமி, கல்வியாளர் நாககுமார் கங்கேஸ்வரன், டசல்டர்ஃப் ஜே.பி.செந்தில்குமார், மியூனிக் சத்தியமூர்த்தி, சாமிநாதன், மேன்ஹெய்ம் மோகன்ராஜ், டூயிஸ்பெர்க் சிஜூ, கொலோன் நிஷாந்த், விசாகர், டுட்லின்கன் டாக்டர் ஆதித்யா, லீப்சிக் கோபிநாத் பாலசுப்பிரமணியன், பசேல் ரேகா உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

    சந்திப்பு நிகழ்வு அரங்கிலும் மனதிலும் நிறைவடைந்த நிலையில், புகழ்பெற்ற கொலோன் தேவாலயத்திற்குச் சென்று அதன் பிரம்மாண்டக் கட்டமைப்பைக் கண்டேன். யுனெஸ்கோ அமைப்பினால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த தேவாலயம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதைப் பார்த்தபோது நம் தமிழ் மண்ணின் பழங்காலக் கலைப்படைப்புகள் நினைவுக்கு வந்தன. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தஞ்சை பெரியகோயில் கோபுரமும், ஆழிப்பேரலையை எதிர்கொண்டு குமுரி முனையில் நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மனதில் உயர்ந்து நின்றன.

    தேவாலயத்தின் பழமையையும் பெருமையையும் பார்த்தபிறகு அறிவாலயமாகத் திகழும் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்திற்குச் சென்றேன். பழந்தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகள், அண்ணாவின் ஓர் இரவு உள்ளிட்ட பல தமிழ்ப் புத்தகங்களின் முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் நூல்கள் - ஆவணங்களைக் கொண்ட அந்தத் தமிழ்த்துறை மற்றும் நூலகத்தைக் காப்பாற்றும் வகையில் அதன் வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு 2021-இல் ரூ. 1.25 கோடியும், கடந்த ஜூலையில் ரூ. 1 கோடியே 64 ஆயிரமும் என இரண்டு முறை நிதி அளித்துள்ளது. அந்த நிதியைச் சரியாகப் பயன்படுத்தி, ஜெர்மனியில் தமிழ்ப் பணி தொடர்கிறது என மகிழும் வகையில் தமிழ்த்துறை நூலகத்தில் பொறுப்பில் உள்ள Dr.Sven Wortmann, Mr.Sharon Nathan, Mrs.Daria Lambercht ஆகியோரின் தமிழார்வம் அமைந்திருந்தது. தமிழில் எங்களுக்கு வரவேற்பளித்து, ஓலைச்சுவடிகளைப் பராமரிப்பதில் தங்களுக்குள்ள சிரமங்களை அவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டு, சிலவற்றைத் தமிழ்நாட்டில் பாதுகாக்குமாறு சொல்லி வழங்கினர். அவற்றை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைத்துப் பாதுகாக்கும் எண்ணத்துடன் பெற்றுக் கொண்டேன்.

    தமிழ் மணம் வீசிய கொலோன் பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் நேரம் போனதே தெரியவில்லை. உலகின் எந்த மூலையிலிருந்தோ தமிழ் மீது ஆர்வம் கொண்டு ஆய்வில் ஈடுபடும் மொழியியல் அறிஞர்களுக்கு இந்த நூலகம் துணை நிற்பதையும், நூலகங்களின் பயனையும் தேவையையும் கருதி, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் சென்னையில் அமைத்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல, திராவிட மாடல் ஆட்சியில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டிருப்பதுடன் திருச்சி, கோவை ஆகிய நகரங்களிலும் உலகத் தரத்திலான நூலகங்கள் அமைக்கப்பட்டு வருவதை எண்ணி மகிழ்ந்தபடியே கொலோன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியே வந்தேன்.

    ஜெர்மனியில் இரவு 8 மணிக்கு மேல்தான் இருட்டுகிறது. அதுவரை சூரியன் ஒளி வீசுகிறான். இருட்டும் நேரத்தில் ஹோட்டலுக்குத் திரும்பியபோது இரவு நேரத் தமிழ்நாட்டு உணவு ஏ2பி உணவத்திலிருந்து வந்திருந்ததுடன், கடலூர் தொ.மு.ச.வின் மூத்த நிர்வாகியின் மகளான திருமதி. அகிலா நாராயணன் அவர்கள் நடத்தும் மெட்ராஸ் கபேவிலிருந்தும் சுவையான உணவு வந்திருந்தது. தமிழ்நாட்டின் கைப்பக்குவத்துடனான இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றேன்.

    செப்டம்பர் 1 - திராவிட மாதத்தின் முதல் நாள். கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரான தம்பி டி.ஆர்.பி.ராஜா ஆண்டுதோறும் அணியின் சார்பில் முன்னெடுக்கும் திராவிட மாதம் நிகழ்ச்சிகளைப் பற்றிய முன்னோட்டக் காணொளியை அனுப்பியிருந்தார். திராவிட மாதத்தின் முதல் நாள், ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு முக்கியமான நாள். முதலீடுகளை ஈர்க்கும் நாள். கொலோன் நகரத்திலிருந்து புறப்பட்டு, டசல்டோர்ஃப் நோக்கிப் பயணித்தோம். ஒரு மணி நேர கார் பயணத்தில், நிறுவனங்கள் குறித்தும், எந்தெந்தத் துறையில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும், அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் எவ்வளவு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா, எனது செயலாளர் உமாநாத் ஐ.ஏ.எஸ். ஆகியோருடன் ஆலோசித்தபடியே சென்றேன்.

    டசல்டோர்ஃப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனிச் சந்திப்புகள். முதல் நிறுவனமாக உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்துடனான சந்திப்பு. நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, பி.எம்.டபிள்யூ காரில் கையெழுத்திட்ட படத்தை அந்த நிறுவனத்தினர் எனக்குப் பரிசாக அளித்தபோது நெகிழ்ந்தேன். பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து இ.பி.எம் பாப்ஸ்ட், நார்-ப்ரீம்ஸ், நார்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

    அவர்களிடம் நான், சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு 2024-இல் ஒப்பந்தம் போடப்பட்டு, அடுத்த சில மாதங்களில் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டி, ஒன்றரை ஆண்டுக்குள் உற்பத்தியைத் தொடங்கிய வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அரசு தரப்பிலான ஒத்துழைப்பு, அவர்களின் மின்வாகன உற்பத்திக்கேற்ற திறன்மிகு பணியாளர்களைச் சொந்த மாவட்டத்திலேயே உருவாக்கித் தந்தது, முதல் கார் விற்பனையை நானே நேரில் சென்று தொடங்கி வைத்தது உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முழுமையான ஒத்துழைப்புகளை விளக்கினேன். மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் முதலீடு செய்ய முன்வந்தனர். தமிழ்நாட்டிற்கு 3,201 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

    மதிய உணவு நேரம் நெருங்கியிருந்தது. தொழில் நிறுவனங்களுடன் சந்திப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் ஒரு கார் மியூசியம் இருப்பதை அறிந்ததும் எனக்கு ஆர்வம் அதிகமானது. பழைய கார்களின் அருங்காட்சியகம் அது. எனக்கு பழைய நாட்களின் நினைவுகள் வந்தன. இளைஞரணி தொடங்கப்பட்டு அதன் கிளைகளை மாநிலம் முழுவதும் தொடங்கியபோது, ஒவ்வொரு ஊராக கார்ப்பயணம்தான். அப்போதைய இளைஞரணி மாநில நிர்வாகிகள் அனைவரும் ஒரே காரில்தான் நெருக்கியடித்து உட்கார்ந்து பயணிப்போம். கார் ஓட்டுவது நான்தான். இரவு நேரத்தில் மற்ற நிர்வாகிகள் காரிலேயே தூங்கிவிடுவார்கள். எனக்குக் காரில் ஏறினால் அப்போதும் இப்போதும் தூக்கம் வராது. அதனால் விடிய விடிய கார் ஓட்டிச் செல்வேன். அப்போதிருந்த கார்களைவிட இப்போது அதிநவீன கார்கள் வந்துவிட்டாலும், பழைய கார்கள் என்றால் இளமையான நினைவுகள்தான்.

    கார் மியூசியத்தில் பென்ஸ் கம்பெனியின் உலகின் முதல் கார் இருந்தது. மூன்று வீல்களை மட்டுமே கொண்ட அந்த காரை இயக்கிப் பார்த்தேன். இங்கிலாந்து அரசர் பயன்படுத்திய கார், இளவரசர் பயன்படுத்திய முதல் ரேஸ் கார், ரஷ்ய அதிபர் பயன்படுத்திய கார், உள்ளிட்ட பல நிறுவனங்களின் பலவகைக் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும், வாழ்க்கை விரைந்து பயணிப்பதையும் நினைவுபடுத்தும் சிறப்பான அந்த மியூசியத்தைப் பார்த்துவிட்டு, மதிய உணவுக்குப்பிறகு முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் புறப்பட்டேன்.

    NRW மாநில அரசின் சார்பில் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை செயலாளர் அருண் ராய் ஐ.ஏ.எஸ் பேசும்போது, இந்தியாவில் தமிழ்நாடு எந்தளவு பொருளாதாரத் துறையில் வளர்ந்துள்ளது என்பதையும், தேசிய சராசரியைவிடத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதன் காரணம், தொழில் வளர்ச்சிக்கேற்ற தமிழ்நாட்டில் உள்ள கட்டமைப்புகள் ஆகியவை பற்றி சிறப்பாக விளக்கி, முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் ஏற்கெனவே முதலீடு செய்து, உற்பத்தியைத் தொடங்கியுள்ள நிறுவனங்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது, அங்கு வந்திருந்த முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

    தொழில் – உற்பத்தி - வர்த்தகம் மூன்றின் நுணுக்கங்களையும் நன்கறிந்திருக்கும் தொழில்துறை அமைச்சரான தம்பி டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, "ஐரோப்பாவின் இதயத்துடிப்பாக ஜெர்மனி உள்ளது. அதுபோல இந்தியாவின் இதயத்துடிப்பு தமிழ்நாடு. இரண்டுமே உற்பத்தித் துறையை வளர்த்தெடுக்கும் அரசுகள். தமிழ்நாட்டில் நீங்கள் நம்பிக்கையுடன் முதலீடுகளை செய்யலாம்'' என்று சொல்லி, கடந்த நான்காண்டுகால திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சியை சிறப்பாக விளக்கினார்.

    என்னுடைய முதல் ஜெர்மனி பயணத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டு உரையைத் தொடங்கும்போது, இந்தியா எனும் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இருக்கிற தமிழ்நாடு என்கிற மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராகப் பங்கெடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துகொண்டு, நான் வெறும் முதலீட்டுக்காக இங்கு வரவில்லை என்பதையும், ஜெர்மனி - தமிழ்நாடு எனும் இரண்டு பொருளாதார அரசுகளுக்கிடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன் என்பதையும் சுட்டிக்காட்டினேன். ஜெர்மனியைப் போலவே தமிழ்நாட்டிலும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதையும், நிறுவனங்களுக்கேற்ற திறனை ஊக்குவிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதையும் எடுத்துக்கூறி, தொழில்வளர்ச்சிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் உங்களுடனான ஒரு பார்ட்னர் போல அரசு செய்து தரும் என்ற உறுதியை அளித்து, இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது என்ற நம்பிக்கையை விதைத்தேன்.

    இந்தியாவில் பல மாநிலங்கள் இதுபோன்ற முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஜெர்மனியில் முயற்சித்ததையும், நாம் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்கட்டமைப்பை அறிந்துகொள்ள முடிந்தது என்றும் அங்கு வந்திருந்த முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.

    எந்த நாட்டில் முதலீடுகளை ஈர்க்கிறோமோ அந்த நாட்டிற்கு, முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதலமைச்சரே நேரில் வந்து முதலீட்டாளர்களிடம் விளக்கும்போதுதான் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கிறது, அதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதற்கு NRW மாநிலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.

    காலையில் நடந்த நிறுவனங்களுடனான சந்திப்பு, மாலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    செப்டம்பர் 2 அன்று காலையில் NRW மாநிலத்தின் மினிஸ்டர்-பிரசிடென்ட்டை சந்திக்கும் நிகழ்வு. NRW-வின் மினிஸ்டர் பிரசிடென்ட் திரு. ஹென்ரிக் வுஸ்ட் என் மீது அன்புகொண்டு, நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் தனது அரசின் உயரதிகாரிகளுடன் தனது கான்வாயையும் அனுப்பியிருந்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சரான உங்களில் ஒருவனான எனக்கு ஜெர்மனி நாட்டின் ஒரு மாநிலத் தலைமை அமைச்சர் முழு மரியாதை அளித்து தன் இடத்திற்கு அழைத்ததை, தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட மரியாதையாகவே கருதுகிறேன்.

    பயண நேரத்தில், சென்னையில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில், அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பையும் அதில் நான்காண்டு காலத் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள், வாக்குறுதி தராமலேயே நிறைவேற்றப்பட்ட முன்னோடித் திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டதையும் கேட்டறிந்தேன். அதுபோல, இந்தியா மீது அமெரிக்க அதிபர் விதித்த வரிச்சுமையால் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்படுவதைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் திருப்பூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய விவரங்களையும் கேட்டேன். ஜெர்மனி சாலைகளிலும் தமிழ்நாட்டு நினைவுகளே எனக்குள் பயணித்தன.

    ஒன்றரை மணி நேரம் கழித்து, NRW மாநிலத்தின் தலைமைச் செயலகத்தை அடைந்தோம். வாசலிலேயே காத்திருந்து வரவேற்றார் மினிஸ்டர்-பிரசிடென்ட் ஹென்ரிக் வுஸ்ட். கற்களால் பழமையாகக் கட்டப்பட்டிருந்த தலைமைச் செயலகக் கட்டடத்தின் உள்ளே சென்றால் அதிநவீனமாக இருந்தது. அங்கிருந்த விசிட்டர் புத்தகத்தில், "NRW - தமிழ்நாடு இணைந்து வெற்றிபெறுவோம்" என எழுதிக் கையெழுத்திட்டேன்.

    முதலீட்டாளர் மாநாட்டை டசல்டோர்ஃப்பில் நடத்தியது பற்றியும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து அறிந்ததையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் ஹென்ரிக் வுஸ்ட். தமிழ்நாட்டுடன் எந்தெந்த வகையில் NRW இணைந்து செயல்படுவது என்பது குறித்து அவர் என்னிடம் ஆலோசித்தார். திறன் மிகுந்த பணியாளர்கள் பற்றி பேசும்போது, "நான் முதல்வன் திட்டம் என்பது எனது கனவுத் திட்டம். அதன் மூலம் பல இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் நிறுவனங்களுக்கேற்ற திறன் பயிற்சி அளிக்கிறோம். உங்கள் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன் பயிற்சியை நான் முதல்வன் மூலம் அளித்து, அதற்கேற்ற பணியாளர்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்" என்றேன்.

    தமிழ்நாட்டின் பாரம்பரியப்படி ஹென்ரிக் வுஸ்ட் அவர்களுக்குப் பட்டுத்துண்டு அணிவித்துச் சிறப்பித்தேன். பாரம்பரிய ஓவியம் ஒன்றையும் பரிசளித்தேன். அவரும் அவர்கள் மாநிலத்தின் பாரம்பரியப் பொருட்கள் அடங்கிய பரிசுக்கூடையை அன்புடன் வழங்கினார். அவரிடம் விடைபெற்று, திரும்பி வரும்போது வழியில் ஒரு தமிழர் நடத்தும் உணவகத்தில் சாப்பிட்டோம்.

    ஏறத்தாழ தமிழ்நாடு அளவுக்கான மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடான ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தில் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், NRW மாநிலத்தின் தலைமை அமைச்சருடன் கலந்துரையாடல் எனத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அனைத்தும் நிறைவேறிய மகிழ்வுடன், லண்டன் நகருக்கு விமானத்தில் பறக்கத் தொடங்கினேன்.

    அங்கே உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், உலகின் ஒப்பற்ற சிந்தனையாளரான நம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து, சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டுப் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றுகிறேன். லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார். 

    தேர்தல் முடிவுகள் மூலம் தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்து உள்ளதாக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்றுச் சிறப்புமிக்க, நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் சீரிய இடம் உருவாக்கப்பட்டிருப்பது இந்திய அளவில் போற்றுதலுக்கு உரிய பொருள் ஆகியிருக்கிறது.

    ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தி.மு.க. கூட்டணி ஈர்த்திருக்கிறது. அத்தகைய மாபெரும் வெற்றியை அடைந்ததற்கு, தொடர்ந்து நல்லிதயங்களின் வாழ்த்துகள் பொழிந்த வண்ணம் உள்ளன.

    22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் 13 இடங்களை கழகம் கைப்பற்றி உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் தி.மு.க பெறுகிறது. 1971, 2004 பாராளுமன்றத் தேர்தல்களில் கழகம் பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது.

    சட்டமன்றத்தில் நம்முடைய பலம் 101ஆக உயர்கிறது. அ.தி.மு.க.வசம் இருந்த 12 தொகுதிகளை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியிருப்பது தமிழ்நாட்டின் இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

    இவற்றை செரிமானம் செய்துகொள்ள முடியாத ஆட்சியாளர்களும் அரசியல் எதிரிகளும், ‘தி.மு.க.வின் நோக்கம் நிறைவேறவில்லை’ என தங்கள் புண்ணுக்குத் தாங்களே புணுகு தடவி புளகாங்கிதம் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் மிகவும் தற்காலிக இன்பத்திற்குத் தடையாக இருக்க நான் விரும்பவில்லை. நமக்கான பெரும்பணிகள் நிறைய காத்துக் கொண்டு இருக்கின்றன.


    தலைவர் கலைஞர் இல்லாத நிலையில், கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சுமக்க வேண்டிய கடுமையான பணியுடன், தலைவர் இல்லாத காரணத்தால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகவும் கழகத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவர் வருவார் இவர் வருவார் என்றும் சூழ்ச்சி எண்ணத்துடன் திட்டமிட்டு தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயக ரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடிதான் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களங்களில் நமக்கு மக்கள் அளித்துள்ள இந்த அருமையான வெற்றி.

    மத்திய - மாநில ஆட்சியாளர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு துன்பத்தில் உழலும் தமிழ்நாட்டு மக்கள் நம்மை நம்பினர். பொதுக்கூட்டங்களில், நடைப்பயணங்களில், திண்ணைப் பிரசாரத்தில், தேநீர்க்கடை உரையாடலில் என நான் சென்ற இடமெல்லாம் தங்கள் வீட்டுப் பிள்ளையாக சகோதரனாக, குடும்பத்தில் ஒருவனாகக் கருதி ஓடோடி வந்து அரவணைத்து அன்பைப் பொழிந்தனர். ஆதரவை உறுதி செய்தனர். தமிழ்நாட்டு மக்களின் வற்றாத அன்பும் வாஞ்சைமிகு ஆதரவுமே வாக்குகளாக மாறி இந்த வெற்றியைத் தந்துள்ளது.

    மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் வகுத்தளித்த வழியில், தேர்தல் களப்பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களாம் அன்பு உடன்பிறப்புகளும் இல்லாமல், இந்த வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உண்ணாமல் உறங்காமல் ஓய்வு கொள்ளாமல் உழைத்த உடன் பிறப்புகள் அனைவரின் முயற்சியாலும் கிடைத்த இந்த வெற்றியை உச்சி மோந்து மெச்சிப் பாராட்டிட தலைவர் கலைஞர் நம்மிடம் இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டதே என்ற ஏக்கத்துடன், அவரது நினைவிடத்தில், இந்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்குவதே எனது கடமை!

    எதற்காக இந்த வெற்றியைத் தமிழக மக்கள் நமக்கு வழங்கினார்களோ, என்ன வாக்குறுதிகளை நாம் மக்களிடம் அளித்தோமோ, அவர்களின் உத்தரவினைப் பெற்று நம் கடன் தொண்டூழியம் செய்வதே எனக் கொண்டு, நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

    பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக் குரலாக தி.மு.க. ஓங்கி ஒலிக்கும். மக்களுக்கெதிரான பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு விழிப்புடன் காவல்காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கை தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மாநில நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும், பறிபோனவற்றை மீட்டெடுக்கவும் ஜனநாயகம் காக்கவும் அமைதியான அறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும்.

    மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு வியூகத்தை’ பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.க. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.க.வின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும்!

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்காலத்திற்கு ஏந்திச்செல்லும் போர்க்களமாக மாறிவிட்ட தேர்தல் களத்தில், பாசிச சக்திகளை அடியோடு வீழ்த்திடவும், அடிமைக் கூட்டத்தை அறவே அகற்றிடவும் தி.மு.க. வின் தலைமையிலான மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் கிஞ்சிற்றும் அயராமல் அரும்பாடு பட்டதற்கு உரிய பலனை எதிர்பார்த்து மே 23-ந் தேதிக்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம்.

    அயராத உழைப்பிற்கும், அதற்கு மக்கள் தந்த ஆதரவிற்கும், முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை திடமாக உள்ளது.

    ஆட்சிக்காலத்தின் கடைசி நாட்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ளோருக்கு இது தெரியும். அதனால்தான், தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட பல தகிடுதத்தங்களைச் செய்தனர்.

    பணத்தால் வாக்குகளை விலை பேசும் வேலைகளில் தீவிரமாக இறங்கினர். தான் திருடி பிறரை நம்பாள் என்பது போல, தங்கள் செயலை மறைக்க தி.மு.க.வின் மீது பழியைப் போட்டு வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை நிறுத்தினர். மக்களிடம் உண்மை அம்பலப்பட்ட நிலையில், மதரீதியாக சாதிரீதியாக வன்முறைகளைத் தூண்டும் மோசமான நடவடிக்கைகளில் இறங்கினர்.

    கனன்று கொண்டிருக்கும் வன்முறை நெருப்பை சுயலாப நோக்கில் விசிறி விடும் வேலையை வாக்குப் பதிவுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இவையெல்லாம் அவர்களுடைய தோல்வி பயத்தின் காரணமாக வெளிப்படும் மனப்பதற்றத்தின் விளைவுகள். இவற்றைத் தமிழக மக்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள்; வெறுத்து விலக்கி வைப்பார்கள்.

    வன்முறையைத் தூண்டி விட்டு, நம் கவனத்தைத் திசை திருப்பி, வாக்காளர்கள் மனதில் அச்சத்தை விதைத்து, மிச்ச மிருக்கும் 4 தொகுதி இடைத்தேர்தலில் தங்களின் இயல்பான மோசடிகளால் கழகத்தின் வெற்றியைத் தட்டிப் பறித்து, தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என மாநிலத்தில் ஆளுகின்ற அடிமை அ.தி. மு.க. ஆட்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து, கணக்குப் போடுகிறார்கள்.

    அது தப்புக் கணக்கு, பிற்போக்குத்தனமான பிழைக் கணக்கு என்பதை மக்கள் சந்தேகத்திற்கு இடமே இன்றி நிரூபிக்கத் தயாராகிவிட்ட நிலையில், மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க. வுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் இருக்கிறது.

    மக்கள் அளித்த தீர்ப்பை மாற்றும் தில்லுமுல்லு வேலைகளைச் செய்ய முடியுமா என்ற திட்டத்துடன்தான் மதுரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் ஒரு பெண் அதிகாரியை நுழையச் செய்து, 3 மணி நேரத்திற்கும் மேலாக அங்குள்ள ஆவணங்களைக் கைப்பற்றி மோசடி செய்ய முயற்சித்த மோசமான நடவடிக்கை அம்பலமாகிவிட்டது.

    கடல் போன்ற மக்களவைத் தேர்தல் களத்தையும், ஆறு போன்ற 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தையும் எதிர்கொண்டு கடந்தது போலவே, வாய்க் கால் போன்ற இந்த 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நாம் செயலாற்றிட வேண்டும்.

    கடலிலும் ஆற்றிலும் மோசடி செய்ய முனைந்தவர்கள், வாய்க்காலின் இயல்பான போக்கை வழி மறித்து திசை மாற்றிட எளிதாக முயற்சிப்பார்கள்.

    திருப்பரங்குன்றம், அரவக் குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் மாநில அமைச்சர்களும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் தங்களிடம் உள்ள ஆட்சியின் கடைசி நேர அதிகார பலத்தை அடாவடியாகச் செலுத்தி, தி.மு.க. பெறவிருக்கும் வெற்றியைக் களவாடுவதில் முனைப்பு காட்டுவார்கள். அதனை முறியடித்திடும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.

    ஆட்சி மாற்றத்திற்கு நம்மைவிட அதிக ஆர்வமாக உள்ள வாக்காளர்களின் மனதில், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்கிற உண்மையையும் நம்பிக்கையையும் நன்கு விதைத்திடும் வகையில் இடைத்தேர்தல் களப் பணிகள் அமையட்டும். அது முழுமையான வெற்றியாக மலரட்டும்.

    ஏப்ரல் 18-ல் வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் அயராது உழைத்தோருக்கும், மே19-ல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நான்கு தொகுதிகளில் கடுமையாக உழைப்போருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் உழைப்பின் வியர்வை, மக்களின் வாக்குகளாக மாறி, உறுதியாகட்டும் வெற்றி.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் எழுதி உள்ளார். #DMK #MKStalin
    தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். #DMK #MKStalin #DMKCadres
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாம் போற்றி வரும் நல்லுறவின் தொடர்ச்சியாக, தி.மு.கழகத்திற்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பிறகு நடைபெற்ற ஊடகத்தினருடனான சந்திப்பின் போது, “உங்கள் பிறந்த நாளில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகுமா?” என கேட்டார்கள். அப்போதே, “என் பிறந்த நாளைக் கொண்டாடும் மன உணர்வில் நான் இல்லை” என்பதைத் தெரிவித்தேன்.

    மார்ச் 1-ந்தேதி என்னுடைய பிறந்தநாள் என்ற போதும், நம்மை ஆளாக்கி நெறிப்படுத்தி பொது வாழ்வுப் பணியில் நல்வழிப்படுத்திய தலைவர் கலைஞர் நம்முடன் இல்லாத நிலையில், பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்பதே இப்போது என் எண்ணம்.



    ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் முதல் நிகழ்வாக, தலைவரும் தந்தையுமான கலைஞரிடமும், அன்னையார் தயாளு அம்மையாரிடமும் தாள் வணங்கி வாழ்த்துப் பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தலைவர் கலைஞரின் வாழ்த்துகளை நேரில் பெற முடியாதபடி, இயற்கையின் சதி அமைந்துவிட்ட நிலையில், பிறந்தநாள் நிகழ்வுகள் அவசியமற்றவை என்பதே என் முடிவு.

    வழக்கமாக மார்ச் 1 அன்று நேரில் சந்தித்து வாழ்த்தும் கழகத்தின் மாநில -மாவட்ட - ஒன்றிய - பேரூர் - சிற்றூர் - துணை அமைப்புகளின் நிர்வாகிகள், இந்த முறை அதனைத் தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பிறந்த நாள் விழா எனும் பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்துவதை கைவிட்டு, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான நலத்திட்ட உதவிகளை இயன்ற வரை வழங்கிட வேண்டுகிறேன்.

    தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள வலிமையான கூட்டணி, எதிர்வரும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் வகையில், மாற்றாரும் மலைத்திடும் வண்ணம், இப்போதிருந்தே கண்ணயராமல் களப்பணியாற்றுவதே கழக உடன்பிறப்புகள் எனக்கு பிறந்தநாளில் உவந்து அளித்திடும் உயர்வான பரிசாகும். உன்னதமான அந்த உழைப்பு தரப்போகும் “நாற்பதுக்கு நாற்பது” என்ற வெற்றிக்கனியை, என்றும் நம் நெஞ்சில் நீங்காமல் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞரின் உயிர்த்துடிப்பான நினைவுகளுக்கு பணிவோடு காணிக்கையாக்குவோம்!.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #DMKCadres
    பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #BanOnBanners
    சென்னை:

    தமிழகம் முழுவதும் சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    ஐகோர்ட்டு உத்தரவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-


    பேனருக்கு தடை வரவேற்கத்தக்க ஒன்று. பொது மக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக் கூடாது என நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன்.

    ஆனாலும் சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன். அதனை தி.மு.க. வினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும். அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DMK #MKStalin #BanOnBanners
    அண்ணா அறிவாலயத்தில் 16-ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழாவையடுத்து, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு அலைகடலென திரண்டு வரும்படி தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்று, இந்திய அரசியலின் வழிகாட்டியாக விளங்கிய வரலாற்று நாயகர் நம் தலைவருக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.

    பல மாநிலங்களிலிருந்தும் வரும் தலைவர்களுடன் தமிழ்நாட்டில் நம் தோழமைக் கட்சியின் தலைவர்கள்- நிர்வாகிகள், பல்வேறு கட்சி அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையினர், பல துறை அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் என கலைஞரின் மீது பேரன்பு கொண்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

    அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழாவில், இடவசதி கருதி அதிகம் பேர் பங்கேற்க இயலாது என்பதால்தான், டிசம்பர் 16 மாலை 5 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெற்றதும், தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற இருக்கிறது.

    கழகத்தின் தொண்டர்களாம் கலைஞரின் உடன் பிறப்புகள் யாவரும் ஆர்வ மிகுதியால் அறிவாலயம் முன்பு கூடுவதைத் தவிர்த்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் அணிஅணியாய்த் திரள வேண்டும் என உங்களில் ஒருவனான நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    கலைஞர் நமக்கு வகுத்தளித்த கட்டுப்பாட்டு உணர்வினைக் காத்திட வேண்டும்.

    இது நம் வீட்டு விழா. நம் குடும்ப விழா. விருந்தினரை வரவேற்று அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே, கட்டுப்பாடு காப்போம்.

    அறிவாலயத்தில் கூடுவதைத் தவிர்த்து, ஆர்ப்பரிக்கும் கடலென ராயப்பேட்டை அரங்கில் கூடிடுவோம். கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்புற நிகழ்ந்த பிறகு, மாவட்ட வாரியாக ஒவ்வொரு நாளும் நம் உயிர்நிகர்த் தலைவரை சிலையில் காண்போம். இதயம் குளிர்வோம்.

    சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை, கலைஞர் கட்டிக்காத்த மதசார்பற்ற, முற்போக்கு, சமூகநீதி ஜனநாயகக் கொள்கைகளின் முழக்கமாக அமையும். அது இந்தியா எதிர்கொள்ளப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் தமிழ்நாடு காணவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் நமக்கான வெற்றிப் பாதையை சுட்டிக்காட்டும்.

    அந்த வெற்றியை நம்மைவிட அதிகமாக நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கழகத்தின் வெற்றி என்பது கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு விட்டது.

    அதனை எடுத்துப் பதிக்கின்ற பணிதான் தேர்தல் களம். அதற்கேற்ப பொறுப்புணர்ந்து கட்டுப்பாடு காத்து ஓயாது உழைத்திட வேண்டும். அதுவே திருவுருவச்சிலையாக உயர்ந்து நிற்கும் கலைஞருக்கு நாம் செய்யும் தொண்டு காட்டுகின்ற நன்றி செலுத்துகின்ற காணிக்கை!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin #KarunanidhiStatue
    கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை தி.மு.க.வினர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    இயற்கைப் பேரிடராம் கஜா புயல் கோரதாண்டவம் ஆடிமுடித்த பகுதிகளில் இரண்டு வாரம் கழித்தும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கிராமங்கள் பலவற்றுக்கு மின் வசதி கிடைக்காததால் இருளிலேயே மூழ்கியுள்ளன. குடிசைகளை இழந்தவர்கள் பரிதவிக்கிறார்கள். தென்னை, வாழை, நெற்பயிர் எல்லாம் சாய்ந்து விவசாயிகளின் வாழ்வைச் சாய்த்துப் பறித்திருக்கிறது.

    நாட்டுக்கே சோறு போட்ட டெல்டா மாவட்டத்தின் மக்கள் நடுவீதியில் நின்று, தங்கள் உணவுக்காக உதவியை எதிர்பார்த்திருக்கும் அவலத்தைப் பார்க்கும் மனதிடம் இதயமுள்ள எவருக்கும் இல்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகால வாழ்வையும் சேமிப்பையும் சூறையாடி விட்டது கஜா புயல். முழுமையாக மீண்டு வருவதற்கு ஆண்டுக்கணக்கில் ஆகும் என்றாலும், பேரிடரை எதிர் கொள்ளும் அந்த மக்களின் மனவலிமை பிரமிக்க வைக்கிறது.

    தி.மு.க.வின் சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டது. கழக சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் 1 மாத ஊதியமும் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பிற மாவட்டங்களிலிருந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முதற் கட்டமாக சேகரிக்கப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 11 வாகனங்களில் நிவாரணப் பொருட்கள், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனைக் கொடியசைத்து அனுப்பும்போது, அவற்றில் இரண்டு வாகனங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க ஆவண செய்துள்ளேன்.

    இழந்த குடிசைகளுக்கு இழப்பீடு தரப்படுவதுடன், கான்க்ரீட் வீடு திட்டம் வெற்று அறிவிப்பாக முடிந்துவிடக் கூடாது என்ற உறுதிமொழியையும்தான். தென்னை மரத்துக்கு இழப்பீடாக ரூ.1100 என்பது விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்காது.

    ஒரு மரத்துக்கு 50ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்குவதுடன், புதிய தென்னங்கன்றுகளையும் அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதற்குத் தேவையான உரம் உள்ளிட்டவற்றையும் வழங்கிட வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஆனால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பே சரிவர நிறைவேறாத நிலையில் விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தாலும் மற்ற கட்டணங்கள், வரிகள் ஆகியவற்றை செலுத்த காலநீட்டிப்பு வேண்டும், கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் டெல்டா மக்கள். நியாய விலைக் கடைகளில் டிசம்பர் மாதத்திற்கான மண் எண்ணையை நவம்பரிலேயே வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

    ஆனால், இருமாத காலத்திற்கான மண்எண்ணையை விலை கொடுத்து வாங்கும் சக்தி, புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களிடம் இல்லை. நியாய விலைக் கடைகள் மூலமாக அவர்களுக்கு இயன்றவரை இலவசமாகப் பொருட்கள் கிடைக்க வழி கண்டிட வேண்டும்.

    மத்திய அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினர், கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர். அவர்களின் காலில் விழுந்து பெண்கள் கதறிய காட்சிகளும் செய்திகளும் மனதை உலுக்குகின்றன. எத்தகைய இழப்புகள் ஏற்பட்டிருந்தால், இப்படி உதவி கேட்டு அழுதிருப்பார்கள்!


    இரண்டு வாரங்கள் கடந்தும் இயல்பு நிலை திரும்பாமல் இருட்டிலும் சேற்றிலும் சகதியிலும் வானமே கூரையாக கட்டாந்தரையே பாயாக வாழவேண்டிய அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகம் சுற்றும் பிரதமருக்கு இந்தியாவின் ஒரு பகுதியான தமிழ்நாட்டின் பாதிப்புகளை விமானத்தில் பறந்து பார்க்கக்கூட நேரமில்லை, விருப்பமில்லை. மாநில ஆட்சியாளர்களின் அலட்சியமான செயல்பாடுகள் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவில்லை.

    தஞ்சை-புதுக்கோட்டை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதை எதிர்த்து விவசாயிகளும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து போராடியபோது அவற்றை ஒடுக்க துணை ராணுவத்தை அனுப்பும் அளவுக்கு வேகம் காட்டிய மத்திய அரசும் அதற்குத் துணை நின்ற மாநிலஅரசும், தற்போது இயற்கைப் பேரிடரால் அந்தப் பகுதியே ஒட்டுமொத்தமாகத் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் எந்தவித மீட்புக் குழுவும் வரவில்லையே நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? எங்களை அழித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகளின் மறைமுக செயல்பாட்டுக்கு கஜா பதிப்புகளைப் பயன்படுத்துகின்றனவா என்பது தான் மக்களின் சந்தேகமும் அச்சமாகவும் இருக்கிறது.

    மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறாத காரணத்தாலும், அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கினாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    மரணப் படுக்கையில் தவிக்கின்றன புயல் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வு தரும் வகையில் அரசாங்கத்தின் நிவாரண சிகிச்சை அவசியம்.

    சேதங்களை முழுமையாக மதிப்பிடாமல் உரிய ஆலோசனைகள் நடத்தாமல் பிரதமரிடம் முதல்வர் கேட்ட 15ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி என்பது குறைவான தொகைதான். முழுமையான மதிப்பீடு எதுவும் செய்யாமல் அவசரக் கோலத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு தான். ஆனால், அந்தத் தொகையாவது உடனடியாகக் கிடைக்கவும், கஜா புயலின் முழுமையான பாதிப்புகளை மதிப்பிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் மத்திய ஆய்வுக் குழுவினர் தரும் அறிக்கைதான் கடைசி நம்பிக்கையாக உள்ளது.

    காலில் விழுந்து கதறிய மக்கள் வடித்த கண்ணீரின் வலியையும் வலிமையையும் உணர்ந்து ஆய்வுக் குழுவினர் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்து, விரைவாக நிவாரணம் கிடைத்திட உதவிட வேண்டும். மத்திய-மாநில அரசுகளிடமிருந்து நியாயமான நிவாரணம் கிடைத்திடவும் வாழ்வுரிமையை மீட்டிடவும் கழகத்தின் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். கழக உடன்பிறப்புகளின் கரங்கள், துன்பத்தில் உழல்வோர்க்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்யும்!.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone #DMK #MKStalin
    நாளை மறுநாள் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #DMK #MKStalin

    சென்னை, அக். 12-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண் டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப் பதாவது:-

    ஹிட்லர் மற்றும் முசோலினியின் வாரிசுகள் தான் இந்நாட்டை ஆள்கிறார் களோ என்று அனைத்துத் தரப்பு மக்களும் அச்சப்படக் கூடிய அளவிலே, ஜனநாயகத்திற்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் விரோதமான செயல்பாடுகளை மத்தியமாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலை யில், பொதுமக்களின் இறுதி யானதும் உறுதியானதுமான நம்பிக்கையாக இருப்பது தேர்தல் களம் மட்டும் தான். அதுதான் அவர்கள் கையில் உள்ள வாக்குரிமை என்கிற வலிமை மிகுந்த ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தக் கூடிய இடமாகும்.

    ஆனால், அந்த ஆயுதத்தையும் தந்திரமாகப் பறித்து, தேர்தல் களத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஆட்சியாளர்கள் பல மோசடிகளையும் சூழ்ச்சி களையும் செய்து வருகி றார்கள். இவை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எத்தனையோ புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளின்படி அந்த மோசடிகளைக் களை வதில் உரிய வேகமும் போதிய அக் கறையும் காட்டப்படவில்லை.

    கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில், ஆளுங்கட்சியினர், போலி வாக்காளர்களைப் புகுத்தவும், பாரம்பரியமான கழக வாக்காளர்களை நீக்கவும் முயற்சி செய்வதாக பல இடங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன.

    அவ்வாறு நடைபெறும் அத்துமீறல்களை சட்டவிரோத செயல்களைப் பற்றி, உடனுக் குடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களைக் கொடுத்து உரிய நிவாரணம் பெற்றிட வேண்டும் எனவும், அப்படி புகார் கொடுத்த விவரங்களைக் கழகத் தேர்தல் பணிக்குழுவிற்கும், தலைமைக் கழகத்திற்கும் அவ்வப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனுப்பி வைத்திட வேண்டும்“ என வலியுறுத்தப்பட்டது.

    இதனை கழக நிர்வாகிகள் சரியாகவும் முறையாகவும் கடைப்பிடித்திட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின வாக்கா ளர்களும் நீக்கப்படுகின்றனர். புதிதாகக் குடி வந்தவர்களின் பெயர்களை சேர்ப்பதிலும் அலட்சியம் காட்டப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்படும் புகார்களின் மீது தேர்தல் அலுவலர்கள் உரிய நடவ டிக்கை எடுப்பதில்லை; ஏனோ தயக்கம் காட்டுகிறார்கள்.

    இருப்பவர்களை நீக்குகின்ற அதே நேரத்தில், இறந்து போனவர்களின் பட்டியலை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி, அவர்களை நீக்குமாறு கழகத்தினரும் மற்ற கட்சியினரும் எடுத்துச் சொன்னால் அந்த வாக்காளர்களை நீக்கி விடாதவாறு ஆளுங்கட்சியினர் செயல்படுகிறார்கள். வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள தொழிலாளர்களுக்கு உரிய முகவரியில்லாத போதும் அவர்களின் பெயர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் சேர்த்து, வாக் காளர் அடையாள அட்டை களையும் பெற்றுத் தரும் வேலையை ஆளுந்தரப்பு மேற்கொள்கிறது.

    இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உள்ளிட் டோரின் பெயர்கள் நீக்கப் படுவதில் அலட்சியமும், கழகத்தினர்,சிறுபான்மையினர், தோழமைக் கட்சியினர் ஆகியோர் சார்ந்த வாக் காளர்கள் பெயர் களை நீக்குவதில் அதிதீவிர அக்க றையும் காட்டி ஆளுங்கட் சியினர் செயல்பட்டு வரு கின்றனர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, 14-ந்தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் கழகத்தின் முகவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் தான், வாக்காளர் பட்டியல் மோசடியைத் தடுத்திட முடியும்.

    புதிய இளம் வாக்கா ளர்களை சேர்ப்பது என்பதும் மிகவும் முக்கியமான பணியாகும். 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியுடன் 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்பதால், அத்தகைய இளை ஞர்கள் உரிய சான்றுகளுடன் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திட கழக முகவர்கள் துணை நிற்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புக்கான கடைசி முகாம் நடைபெறும் அக்டோபர் 14 காலை முதல் மாலை வரை இந்தப் பணியில் சிறிதும் சோர் வின்றிச் செயல் பட்டால் தான் ஆளுந்தரப்பு மேற்கொள்ளும் மோசடிகளைத் தடுத்திட முடியும். வாக்காளர் பட்டிய லில் உள்ள களைகளை நீக்கினாலே, வெற்றி எனும் பயிர் விரைந்து விளையும். சமுதாய சீர்திருத்தமும் தேர் தல் கள அரசியலும் கழகத்தின் இரு கண்கள்.

    வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு வாக்கும் நெல்மணிகள். ஒரு நெல் வீணானாலும், தேவையற்ற பதர்கள் பெருகினாலும் அது வெற்றியினைப் பாதிக்கும். இளையான்குடி தொகுதி யில் கழக வேட்பாளர் மலைக் கண்ணன் ஒரேயொரு வாக் கில் வெற்றி வாய்ப்பை இழந்ததனை கலைஞர் பல முறை சுட்டிக்காட்டி நமக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தி யிருக்கிறார். அந்த விழிப்புணர் வுடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் முகாமில் கவனம் செலுத்திட வேண்டும்.

    இன்று நீங்கள் காட்டும் அக்கறை, நாளை நம்மை வெற்றிக் கரை சேர்க்கும். விழிப்புடன் செயல்பட்டு, வெற்றியினை உறுதி செய்வீர்!

    எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்துவதே தி.மு.க.வின் இலக்கு என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #DMKCadres
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே. புதிதாகப் பிறந்திருக்கின்றோம் நாம். ஆம் நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் நம் நெஞ்சில் நிறைந்து, உலகைத் துறந்த நிலையில், அவர் காலமெல்லாம் கட்டிக்காத்த கழகம் எனும் லட்சிய தீபத்தை ஏந்தித் தொடர்ந்து மேற்செல்லும் மிகப்பெரும் பொறுப்புடன் நாம் புதிதாகப் பிறந்திருக்கின்றோம்.

    உங்களால் உங்களுக்காகத் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கும் தலைமைத் தொண்டன் நான். அரை நூற்றாண்டு காலம் தலைவர் கலைஞரின் தகுதி வாய்ந்த நிழலில்- அவரது வழிகாட்டுதலில் கழகத்தின் வளர்ச்சியிலும், சோதனைகளிலும் சம மனநிலையுடன் பங்கெடுத்து, சிறிதும் சளைக்காமல் களம் கண்ட உங்களில் ஒருவன் இன்று உங்களின் தலைவன் என்ற பொறுப்பினை உன்னதமான உங்களால் தான் பெற்றிருக்கிறேன் என்பதை உயிருள்ளவரை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

    காலத்திற்கேற்ற அணுகு முறைகள்-மக்களின் மனநிலையை உணர்ந்த மாற்றங்கள் லட்சியத்தை வென்றடைவதற்கான வியூகங்கள் இவற்றுடன் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். பாதை நமது; பயணம் புதிது.

    நூற்றாண்டு கடந்து வந்து, பல வெற்றிகளைக் குவித்துள்ள திராவிட இயக்கத்தின் பயணம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த நெடும் பயணத்தில் உடனடி இலக்குகள், இரண்டு.

    ஒன்று, சுயமரியாதையை அடகு வைத்த முதுகெலும்பில்லாத-ஊழல் கறை படிந்த-அரசு கருவூலத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசை மக்கள் துணையுடன் விரட்டி அடிப்பது. மற்றொன்று, சமூக நீதிக்குக் குழிவெட்டி, நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மாநில உரிமைகளைப் பறித்து மதவெறியைத் திணித்து, இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை வீழ்த்திக் காட்டுவது.

    இந்த இரண்டு உடனடி இலக்குகளும், இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நெருக்கும் பேராபத்திலிருந்து காக்கக்கூடிய பாதுகாப்பு வேலிகளாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மதசார்பற்ற சக்திகளுடன் இணைந்து அந்தப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதில் நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.


    மத்தியில் ஆள்கின்ற நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரப் போக்கினால் இந்தியாவின் ஒருமைப்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. 120 கோடி மக்களைக் கொண்ட நாட்டின் வலிமையைப் பலவீனப்படுத்தும் அனைத்து வேலைகளையும் சமூக, பொருளதார, கல்வி, மொழி, வாழ்வுரிமை உள்ளிட்ட பல தளங்களிலும் செய்து வருகிறது. இவற்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் வாழ்கின்ற அந்தந்த மொழி பேசும் தேசிய இனங்களின் மீது அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த யுத்தத்தை எதிர்கொள்கின்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து செல்வதில், மாநில சுயாட்சிக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்காக அயராது உழைக்கும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணியில் இருக்கும்.

    சமூக நீதிக்கு எதிராகவும் மதவெறியுடனும் இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையிலும் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசையும், சுயமரியாதை இழந்து மாநில உரிமைகளை அடமானம் வைத்த மாநில அ.தி.மு.க. அரசையும் வீழ்த்த வேண்டியது என்பது ஜனநாயக போர்க்களமான தேர்தல் களம் தான். நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் அடுத்தடுத்து வரலாம். ஏன், இரண்டும் இணைந்துகூட வரலாம்.

    எப்படி வந்தாலும், எந்தத் தேர்தல் வந்தாலும் அதில் மக்கள் விரோத அரசுகள் இரண்டையும் வீழ்த்துவதே ஜனநாயக இயக்கமான தி.மு.க.வின் இலக்கு. நாம் என்ற உணர்வுடன் என்றும் இணைந்து பயணிப்போம். இனப் பகையை முறியடிப்போம். தேர்தல் களத்தில் வெற்றி குவிப்போம். அதனை நம் உயிருக்கு மேலான தலைவர் கலைஞருக்கு லட்சியக் காணிக்கையாக்குவோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin #DMKCadres
    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதால் தொண்டர்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.#MKStalin #DMKCadres #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு உடன் பிறப்பின் உயிர் மூச்சாகத் திகழும் கழகத் தலைவர் கலைஞர் உடல்நலிவுற்றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் 21 கழகத் தோழர்கள் இறந்துள்ளார்கள் என்ற செய்தி அறிந்து மனஅழுத்தத்தில் உறைந்து போயிருக்கிறேன். தலைவர் கலைஞரின் உடல் நலக்குறைவால் ஏற்பட்டுள்ள சோகத்துடன், உடன் பிறப்புகள் இறந்துள்ளார்கள் என்ற செய்தி என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உயிரிழந்த உடன் பிறப்புகளின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    காவேரி மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல், தலைவர் கலைஞரின் உடல் நிலை சீராகி வருகிறது. தலைவர் கலைஞருக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு தொடர்ந்து காவேரி மருத்துமனையில் சிகிச்சை அளித்து, தலைவர் அவர்களது உடல் நிலையை கண் அயராது கண்காணித்து வருகிறது. கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டே “தலைவா வா” என்று எழுப்பிய அந்த உயிர்த்துடிப்பான உணர்ச்சி மிகு முழக்கங்கள் சிறிதும் வீண் போகவில்லை என்பதற்கு அடையாளமாக, தலைவர் கலைஞரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்ற நல்ல செய்தியை வெளியிட்டு, நமக்கெல்லாம் காவேரி மருத்துவமனை நன் நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது.


    தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் ஏராளமான தியாகத் தழும்புகளை இன்முகத்தோடு ஏற்ற, தடந்தோள் கொண்ட உடன்பிறப்புகளால் தாங்கி நிற்கும் அசைக்க முடியாத கோட்டை. அந்த உடன்பிறப்புகளில் ஒருவரை இழந்தால் கூட அந்தச் செய்தி, என் மனதை இடிபோல் வந்து தாக்குகிறது என்பதை தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகள் அனைவரும் உணர வேண்டும் என்று பெரிதும் கேட்டுக் கொள்கிறேன்.

    பேரறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்து, தலைவர் கலைஞரால் இன்றுவரை எந்த நிலையிலும் தவறாது கடைப்பிடிக்கப்பட்டு வரும் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற தாரக மந்திரத்தை மனதில் தாங்கி அதை வாழ்நாள் முழுதும் பின்பற்றி அறிஞர் அண்ணாவுக்கும், தலைவர் கலைஞருக்கும் பெருமை சேர்க்க வேண்டுமே அன்றி, கழக உடன்பிறப்புகள் யாரும் தங்களின் இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #DMKCadres #Karunanidhi
    ×