search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி"

    மலர் கண்காட்சியின் ஒரு பகுதியாக காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட பகுதி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கருணாநிதி பிறந்தநாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதல் 3 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடக்கிறது.

    தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சியை இன்று காலை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் மலர் கண்காட்சியை அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்த கண்காட்சியில் 128 வகைகளை கொண்ட 4 லட்சம் மலர்கள் இடம்பெற்றுள்ளன.

    மலர்கண்காட்சி


    இந்த வண்ண மலர்கள் வெவ்வேறு உருவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிங்கம், கரடி, முயல், மான் போன்ற வடிவங்கள் மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான், தமிழ் பாரம்பரிய பண்பாட்டை விளக்கும் வகையிலும் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    மலர்களின் அருகில் நின்று செல்பி எடுக்கும் பகுதிகள், மலர் வளைவுகள், மலர்களால் ஆன பஸ், தேர், இருக்கைகள், மலர் தொட்டி அடுக்குகளால் ஆன வடிவமைப்புகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த மலர்கள் ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூர், புனே போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.

    கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டுள்ள மலர்கண்காட்சி


    மலர் கண்காட்சியின் ஒரு பகுதியாக காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட பகுதி பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவசாய பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. நறுமணப் பொருட்களான கிராம்பு, ஏலக்காய் மூலம் உருவாக்கப்பட்ட மாடு, விவசாயிகளின் உருவம் போன்றவையும் உள்ளன.

    இந்த கண்காட்சியில் உள்ள மலர்கள் வாடாமல் இருக்கவும், அதன் தன்மை மாறாமல் இருக்கவும் கண்காட்சி அரங்கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

    கலைவாணர் அரங்கில் தொடங்கப்பட்டுள்ள மலர்கண்காட்சி

    இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறுவர்களுக்கு ரூ.20-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    கலைஞர் காட்டிய வழியில் தளபதி மு.க.ஸ்டாலினது ஆட்சி பீடுநடை போடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய அரசியலில் மிக சோதனையான காலக்கட்டத்தில் அன்னை இந்திரா காந்தியோடு கூட்டணி அமைக்க சென்னை கடற்கரையில் ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று அழைப்பு விடுத்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட 1980-ல் அரசியல் வியூகம் வகுத்தவர் கலைஞர். அதேபோல, வகுப்புவாத சக்திகளின் ஆட்சியை மத்தியில் அகற்றிட 2004-ல் அன்னை சோனியா காந்தியை ‘தியாகத்தின் திருவிளக்கே’ என்று அழைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய பெரும் துணையாக இருந்தவர் கலைஞர்.

    எந்த முடிவெடுத்தாலும் தொலைநோக்குப் பார்வையோடு உறுதியாக எடுத்து அரசியல் களத்தில் வெற்றிகளைக் குவித்தவர். தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதிக் காவலராக விளங்கியவர் கலைஞர்.

    மறைந்த முத்தமிழறிஞர் கலைஞரிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், நிர்வாக பயிற்சி பெற்று இன்றைக்கு தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் அனைவரும் போற்றுகிற வகையில் மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சியின் மூலம் எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். ஓராண்டில் பத்தாண்டு கால பணிகளை செய்து முடித்து சாதனை படைத்திருக்கிறார். கலைஞர் காட்டிய வழியில் தளபதி மு.க.ஸ்டாலினது ஆட்சி பீடுநடை போடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் தமிழ் கூறும் நல்லுலகத்தில் தொடர்ந்து நிலைத்திட அவர் பிறந்தநாளில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் மனப்பூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    அகில இந்திய அளவில் இன்று கருணாநிதி பிறந்தநாள் ஹேஷ்டேக்கில் டிரெண்டிங் ஆனது. ஏராளமானோர் அவரது பிறந்தநாளையொட்டி தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் இருந்தே பம்பரமாக சுழன்று பங்கேற்று அசத்தினார்.

    தமிழகம் முழுவதிலும் தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் அகில இந்திய அளவில் இன்று கருணாநிதி பிறந்தநாள் ஹேஷ்டேக்கில் டிரெண்டிங் ஆனது. ஏராளமானோர் அவரது பிறந்தநாளையொட்டி தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
    திருவாருர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர்.
    சென்னை:

    தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி விருதாளரை தேர்ந்தெடுக்க திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்து ராமன் தலைமையில் நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

    இந்த குழு 2022-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கான பல நூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதி புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாசை (வயது90) தேர்ந்தெடுத்தது.

    திருவாருர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர்.

    அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கி கவுரவிப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தி.நகரில் உள்ள ஆரூர்தாஸ் வீட்டிற்கு நேரில் சென்றார்.

    அங்கு ஆரூர்தாசுக்கு பொன்னாடை போர்த்தி, ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கினார். விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கி கவுரவித்தார்.

    அப்போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், செய்தித்துறை உயர் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.
    கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

    அவருடன் தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், ஆ.ராசா எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு உள்பட முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி வணங்கினர்.

    இதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில உள்ள முரசொலி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதியின் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் மலர்தூவி வணங்கினார்.

    இதன் பிறகு சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரயாதை செலுத்தினார். அவருடன் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி வசித்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டு வாசலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார்.

    வீட்டின் உள்ளேயும் கருணாதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்துக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி வணங்கினார். மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. உதயநிதி ஸ்டாலின், அமிர்தம் உள்ளிட்ட குடும்பத்தினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.

    கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ரோன் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதன் பிறகு ஓமந்தூரார் தோட்டத்தில் கடந்த 28-ந் தேதி துணை ஜனாதிபதியால் திறக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ரோன் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கும் மலர்தூவி வணங்கினார்.

    அவருடன் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கருணாநிதியின் சிலையை வடிவமைத்த மீஞ்சூரை சேர்ந்த சிற்பி தீனதயாளனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு கருணாநிதியின் வேடம் அணிந்து 25 மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


    இந்த நிகழ்ச்சிக்கு கருணாநிதியின் வேடம் அணிந்து 25 மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் நின்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    பின்னர் அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.

    அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், மேயர் பிரியா, மண்டல குழு தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

    அந்த பகுதியில் நடைபெற்று வரும் நினைவிட கட்டுமான பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதன் பிறகு கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

    கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.

    ஏழைகளுக்கு அறுசுவை உணவு, பிரியாணியும் வழங்கப்பட்டன. கருணாநிதியின் சாதனை விளக்க பாடல்களும் ஆங்காங்கே ஒலிபரப்பப்பட்டன.
    தி.மு.க. எனும் மாபெரும் பேரியக்கத்திற்கு அரை நூற்றாண்டு காலம் அசைக்க முடியாத ஜனநாயகத் தலைவராகவும், அண்ணாவின் அன்புத் தம்பியாகவும் திகழ்ந்தவர் கருணாநிதி.
    சென்னை:

    தமிழகத்தின் தனிப் பெருந்தலைவராக மட்டுமின்றி, இந்தியத் திருநாடே வியந்து போற்றிய கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு 3-ந்தேதி (இன்று) காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

    உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தி.மு.க. எனும் மாபெரும் பேரியக்கத்திற்கு அரை நூற்றாண்டுக் காலம் அசைக்க முடியாத ஜனநாயகத் தலைவராகவும், அண்ணாவின் அன்புத் தம்பியாகவும் திகழ்ந்தவர் கருணாநிதி.

    அரை நூற்றாண்டு காலம் தமிழக அரசியலில் தலைப்புச் செய்தியாக இருந்தவர். 5 முறை முதல்-அமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை-எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல சமூக நலத்திட்டங்களை திறம்படச் செயல்படுத்தி, இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர். இந்தியாவிற்கே முன்னோடியாய் சமூகநீதி காத்து சமத்துவபுரம் அமைத்த சமுதாயக் காவலர்.

    தன் வாழ்நாளின் இறுதிவரையில் தமிழாய் வாழ்ந்து தமிழாய் நிலைத்தவர். ஓய்வறியாக் கதிரவன்போல் தன் வாழ்நாளின் இறுதி வரையில் ஓய்வென்பதையே அறியாமல், அடித்தள மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து அல்லும் பகலும் அயராது உழைத்தவர். கருணாநிதிக்கு மென்மேலும் பெருமை சேர்க்கின்ற வகையிலும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி (இன்று) அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், கருணாநிதி உருவச்சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்படும் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார்.

    அதனைச் செயல்படுத்திடும் வகையில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சீரோடும் வெகு சிறப்போடும் கொண்டாடப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் மிகப்பெரிய அரசியல் ஆளுமையாக இருந்தவர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி.

    இந்திய அரசியல் தலைவர்களில் மிக மூத்த தலைவராக திகழ்ந்த அவர் மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல்வேறு புதுமைகளுக்கும், மாற்றங்களுக்கும் வித்திட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக அவர் பதவி வகித்து உள்ளார். 60 ஆண்டுகள் தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளார். இளம் வயதில் இருந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தடவைகளிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

    தி.மு.க. தலைவராகவும் அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்து சாதனை படைத்து உள்ளார். கட்சியிலும், ஆட்சியிலும், நிர்வாகத்தில் ஏராளமான சாதனைகள் செய்த நிகரற்ற சாதனையாளராக அவர் திகழ்ந்தார். 3 தடவை ஜனாதிபதி வேட்பாளர் தேர்விலும் முக்கிய பங்கு வகித்தார்.

    பன்முக திறமையாளராக விளங்கிய கருணாநிதி முதுமை காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி மரணமடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 3-ந் தேதி அவருக்கு நூற்றாண்டு பிறந்த தினம் தொடங்குகிறது.

    இதையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதோடு கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.

    அதன்படி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணாசாலை ஓரத்தில் கருணாநிதியின் சிலை நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 12 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டு உள்ளது. ரூ.1.7 கோடி மதிப்பில் அந்த முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.

    மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கருணாநிதி சிலை இதுவரை நிறுவப்பட்ட கருணாநிதி சிலைகளில் மிகப்பெரியதாகும். இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதற்காக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் சார்பில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து அருகில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார்.

    விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்புரையாற்றுகிறார். கருணாநிதியின் சிறப்புகளை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டுவார்.

    அரை நூற்றாண்டுகால தமிழக அரசின் மையமாக திகழ்ந்த கருணாநிதி அரசியல், சினிமா, இலக்கியம், நாடகம் என்று தொட்ட துறைகள் அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர் என்பதை வெங்கையா நாயுடு தனது பேச்சில் குறிப்பிட உள்ளார்.

    விழாவில் கருணாநிதி பற்றிய சிறப்பு காணொலி திரையிடப்பட உள்ளது. இறுதியில் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு நன்றி கூறுகிறார். விழாவில் காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட தி.மு.க.வின் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    விழாவை முன்னிட்டு கலைவாணர் அரங்கில்சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விழா நிகழ்ச்சிகளை சுமார் 2 ஆயிரம் பேர் நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரங்கத்தின் கீழ் தளத்தில் 1200 பேர் அமர வசதி செய்யப்பட்டு உள்ளது.

    அதுபோல அரங்கத்தின் முதல்மாடியில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக 500 இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. அங்கிருந்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு எல்.இ.டி. பெரிய திரை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் பங்கேற்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலைவாணர் அரங்கம் பகுதியில் குவிய தொடங்கி உள்ளனர். இதையடுத்து அண்ணாசாலை மற்றும் கலைவாணர் அரங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    சமூகநீதி-சமச்சீரான வளர்ச்சி-சம உரிமை ஆகியவற்றை அடித்தளமாகக்கொண்ட அரசை வெற்றிகரமாக நடத்தி, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் பலவற்றை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ‘‘என் உயரம் எனக்குத் தெரியும்” என்று பொது வாழ்வுக்குரிய தன்னடக்கத்துடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, இந்திய அரசியலில் இமயம் போல் உயர்ந்து நிமிர்ந்து நின்று, நாடே வியந்து பார்க்கும் நல்ல பல சாதனைகளைப் படைத்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.

    14 வயது சிறுவனாகத் தன் கையில், புலி - வில் - கயல் பொறித்த, என்றும் தாழா தமிழ்க்கொடி ஏந்தி, தாய்மொழியைக் காத்திட சளைக்காமல் போராடி, தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்து எப்போதும் தமிழ் உணர்வுடனும் உத்வேகத்துடனும், தனது இறுதி மூச்சு வரையிலும் சோர்வின்றிச் செயலாற்றிய கொள்கை தீரர் அவர்.

    நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தில் முக்கால் நூற்றாண்டு காலப் பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் அவர்.

    தீக்கனலும், தென்றல் குளிரிளங்காற்றும் சரியளவில் கலந்த செந்தமிழ் வித்தகர் அவர்.

    பத்திரிகையாளர்-கவிஞர்-எழுத்தாளர்-திரைக்கதை உரையாடல் ஆசிரியர்-கொள்கை விளக்க நாடக நடிகர் என கலை இலக்கியத்தின் அனைத்துமுகத் திறனும் கொண்ட ஆளுமை அவர்!

    இயல்-இசை-நாடகம் என முத்தமிழுக்கும் தன் படைப்புகளால் முழுமையாகப் பங்களிப்பு செய்த முத்தமிழறிஞர்.

    தந்தை பெரியாரின் ஈரோடு ‘குடிஅரசு’ குருகுலத்தில் பயின்று, பேரறிஞர் அண்ணாவின் அரசியல் இயக்கப் பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்று, திராவிடப் பேரியக்கத்திற்காகவே தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவர்!

    அரை நூற்றாண்டு காலம் கழகத் தலைவராகப் பொறுப்பேற்று ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அச்சாணியாக இருந்து தமிழ்நாட்டு அரசியலை மட்டுமின்றி தேசிய அரசியலையும் சுழலச் செய்தவர்.

    தேர்தல் களத்தினை 13 முறை எதிர்கொண்டு, நின்ற தொகுதிகள் அனைத்திலும் வென்று, 5 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்து, 19 ஆண்டுகள் ஆட்சிப்புரிந்து, தமிழ்நாட்டை நயமாகச் செதுக்கிய ‘நவீனத் தமிழ்நாட்டின் தந்தையாகத்’ திகழ்ந்தவர்.

    சமூகநீதி-சமச்சீரான வளர்ச்சி-சம உரிமை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட அரசை வெற்றிகரமாக நடத்தி, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் பலவற்றை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

    இந்திய ஒன்றியத்தில் அரசியலில் நெருக்கடிகள் ஏற்பட்ட சூழல்களின் போதெல்லாம், டெல்லிப்பட்டணத்தின் பார்வை கோபாலபுரம் நோக்கியே திரும்பியிருக்கிறது என்பது கடந்த கால வரலாறு.

    பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றி, சமூகநீதிக் கொள்கையை இந்தியாவின் அரசியல்-சமுதாயக் கொள்கையாக நிலைநிறுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

    நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில், சின்னஞ்சிறிய கிராமத்தில்-இசையையும் வேளாண்மை யையும் ஊன்றுகோலாய்க் கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்து, கொள்கை உறுதியும், கூரிய இலக்கும், குறைவிலா உழைப்பும் கொண்டு, அவதூறுகள்-பழித்தூற்றல்கள் போன்ற நெருப்பாறுகளைக் கடந்து, அரசியல்-பொதுவாழ்வு-கலை-இலக்கியம் எனத் தொட்ட துறைகள் அனைத்திலும், தூண்டா மணி விளக்காய் ஜொலித்து, வெற்றிகரமான சாதனைகள் ஏராளம் படைத்த ஆருயிர்த் தலைவர் கலைஞர் இன்றைய இளைய தலைமுறையினருக்கு “ரோல் மாடல் (முன்மாதிரி)”-வரலாற்று நாயகர்.



    குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கருணாநிதி சிலையை இன்று திறந்து வைக்கிறார்
    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று   சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. 

    சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றது. சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்தார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. 

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 16 அடி உயரம் கொண்ட இந்த சிலையை நிறுவ 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை இன்று மாலை குடியரசு துணைத் தலைவா் வெங்கை யா நாயுடு திறந்து வைக்கிறாா்.

    இதைத் தொடர்ந்து கலைவாணா் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.  விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று உரையாற்றுகிறாா்.அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். 

    முன்னதாக கருணாநிதி சிலை  திறப்பு நிகழ்ச்சிச் ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அமைச்சர்கள்,  பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கலைஞரை சிறப்பித்து போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் நாளை (28-ந்தேதி) மாலை 5.30 மணியளவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, கலைவாணர் அரங்கில் நடைபெறும் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விழா பேருரையாற்றவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றவும் உள்ளனர்.

    அரை நூற்றாண்டு காலத் தமிழ்நாட்டு அரசியலின் மையமாகத் திகழ்ந்தவர், அறுபதாண்டுகால பொதுவாழ்க்கைக்குச் சொந்தமானவர், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகப் பணியாற்றியவர். அனல் பறக்கும் தம் வசனங்களால் திரையுலகில் தனித்துவம் பெற்றவர்.

    கதை, கவிதை, புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், நாடகம் என தான் தொட்ட அனைத்திலும் தனி முத்திரைப் பதித்தவர். அரசியலிலும், ஆட்சியின் ஆளுமையிலும் தன்னிகரற்ற தனிப் பெருந்தலைவராக வலம் வந்தவர் கலைஞர்.

    கலைஞர் தமது பொதுவாழ்வில் பெரியார், அண்ணா வளர்த்த உணர்வைப் போற்றி நின்று, அண்ணா வழியில் அயராது உழைத்து ஆற்றியுள்ள தொண்டுகள் ஏராளம். தமிழ் சமுதாயத்தின் உரிமைகளை நிலைநாட்ட அவர் கண்ட களங்கள் ஏராளம். தீண்டாமையின் விளைவாக சமுதாயத்தில் நீடிக்கும் கொடுமைகள் ஒழிக்கப்படவேண்டும் என்றும், சாதி பேத அடிப்படையால் வளரும் சமுதாயக் கேடுகளை களைந்தாக வேண்டும் என்றும், வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பாதிக்கப்படும் நாட்டு மக்கள் நல்வாழ்வு பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும், பெண்ணுரிமையும், அவர்கள் வாழ்க்கை நிலையும் உயரும் சூழலை உருவாக்க வேண்டுமென்றும் அயராது பாடுபட்டவர் கலைஞர்.

    வாழும் போது வரலாறாகவும், மறைந்தாலும் தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்துள்ள கலைஞரின் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய கருணாநிதிக்கு அரசு சார்பில் சிலை திறப்பதை எண்ணி மகிழ்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    எழுச்சிமிகு சிந்தனையால்-ஏற்றமிகு பேச்சாற்றலால்-புரட்சிகர எழுத்துகளால்-புதுமையான திட்டங்களால், இந்தியத் திருநாடு எண்ணி எண்ணிப் போற்றுகிற வகையில், தமிழ்நாட்டின் மூத்த தலைவராகவும், திராவிட இயக்கத்தின் நெடும்பயணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் ஓய்வின்றி உழைத்தவருமான நம் ஆருயிர்த் தலைவர் கலைஞருக்கு தமிழக அரசு சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படும் நாள் (மே 28), நம் அனைவருக்கும் தித்திப்பான நாள்! திசையெல்லாம் மகிழ்ச்சி பரவிடும் நாள்! ‘உடன்பிறப்பே..’ என்று தமது காந்தக் குரலால் அவர் நம்மை பாசத்துடன் அழைப்பது போன்ற உணர்வைப் பெறுகின்ற திருநாள்!

    தனது கை உயர்த்தி, ஐந்து விரல்களைக் காட்டி மக்களின் செல்வாக்கைப் பெற்ற நம் உயிர்நிகர்த் தலைவரை, தமிழ்நாட்டு மக்கள் 5 முறை முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தனர். தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் முதல்-அமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்ற பெருமையும் நம் ஆருயிர்த் தலைவருக்கேயுரியது.

    5-வது முறை அவர் முதல்-அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, சென்னை அண்ணாசாலையில், எந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை எழிலுடனும் வலிவுடனும் அமைத்தாரோ, அந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலேயே அவருடைய திருவுருவச் சிலையை, முதல்-அமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமக்கும் உங்களில் ஒருவனான என் தலைமையில், கழகத்தின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வரவேற்புரையாற்றிட, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நம் உயிரனைய தலைவரின் திருவுருவச் சிலையினை நாளை (சனிக்கிழமை) அன்று மாலை 5.30 மணி அளவில் திறந்து வைத்திட இருக்கிறார். அதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

    அய்யன் வள்ளுவரையும் அவர் தந்த குறளின் பெருமையையும் அன்னைத் தமிழ்நாட்டவர் மட்டுமின்றி அயல்நாட்டவரும் வியக்கும் வகையில் அமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், அரை நூற்றாண்டுக்கு முன்பே அண்ணா மேம்பாலம், புத்தாயிரம் ஆண்டின் போக்குவரத்தை சமாளிக்கும் வகையில் கத்திப்பாரா மேம்பாலம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டும் டைட்ல் பார்க், விரைவான பொதுப் போக்குவரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம், சர்வதேசத் தரத்தில் அறிவுக் கோபுரமாகத் திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவின் மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையம் என எத்திசை பயணித்தாலும் அவர் பெயரை உச்சரிக்கும் அடையாளங்களே தமிழ்நாட்டின் தலைநகரெங்கும் நிறைந்துள்ளன.

    தலைநகரம் மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் அவற்றின் கிராமம்-நகரங்களும் அவரது ஆட்சியில்தான் காலத்திற்கேற்ற கட்டமைப்பு வசதிகளுடன் வளர்ச்சி பெற்றன. தமிழ்நாட்டின் தெற்கு எல்லையான குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரின் சிலைபோல கலைஞரின் ஆட்சித்திறனும் அவர் புகழும் உயர்ந்து நிற்கின்றன. குமரிமுனை வள்ளுவர் சிலை போல, சுனாமிகளே வந்தாலும் எதிர்கொண்டு வெல்கின்ற ஆற்றலைக் கொண்டது நம் உயிர் நிகர்த் தலைவர் கலைஞரின் புகழ்.

    அண்ணா அறிவாலயத்தில் அவருக்குத் திருவுருவச் சிலை கண்டோம். திருச்சியில், ஈரோட்டில், தூத்துக்குடியில் இன்னும் பல நகரங்களில் கழகத்தின் சார்பில் சிலை அமைத்து மகிழ்ந்தோம். அதனை இன்னும் பல ஊர்களிலும் தொடர்கிறோம்.

    அவர் சிலையாக மட்டுமல்ல, நம் நெஞ்சில் நிலையாக வீற்றிருந்து கொள்கை முழக்கம் செய்து கொண்டே இருக்கிறார். இயற்கை அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டாலும், நம் இதயத்துடிப்பினில் அவரே நிறைந்திருக்கிறார். எந்நாளும் வழிநடத்துகிறார். மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு என்பது அவர் நமக்கு வகுத்துத் தந்த ஆட்சிக்கான இலக்கணம்.

    அந்த இலக்கணத்தின்படி, இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழக அரசின் சார்பில் திருவுருவச்சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்! முதல்-அமைச்சர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடைபெறுகிறது.
    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்தார்.

    அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சிலையை வடிவமைக்கும் பணிகள் மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் நடைபெற்றது. சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்தார். முழுவதும் வெண்கலத்தினால் ஆன இந்த சிலை 2 டன் எடை கொண்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    16 அடி உயரம் கொண்ட இந்த சிலையை நிறுவ 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சிலை வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டது.

    கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சிலை திறப்புக்கான நிகழ்ச்சி அன்று மாலை 5.45 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    ×