search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி
    X
    கருணாநிதி

    இளைய தலைமுறையினருக்கு ரோல் மாடலாக விளங்குபவர் கருணாநிதி: தீர்மானத்தில் பாராட்டு-புகழாரம்

    சமூகநீதி-சமச்சீரான வளர்ச்சி-சம உரிமை ஆகியவற்றை அடித்தளமாகக்கொண்ட அரசை வெற்றிகரமாக நடத்தி, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் பலவற்றை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ‘‘என் உயரம் எனக்குத் தெரியும்” என்று பொது வாழ்வுக்குரிய தன்னடக்கத்துடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, இந்திய அரசியலில் இமயம் போல் உயர்ந்து நிமிர்ந்து நின்று, நாடே வியந்து பார்க்கும் நல்ல பல சாதனைகளைப் படைத்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.

    14 வயது சிறுவனாகத் தன் கையில், புலி - வில் - கயல் பொறித்த, என்றும் தாழா தமிழ்க்கொடி ஏந்தி, தாய்மொழியைக் காத்திட சளைக்காமல் போராடி, தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்து எப்போதும் தமிழ் உணர்வுடனும் உத்வேகத்துடனும், தனது இறுதி மூச்சு வரையிலும் சோர்வின்றிச் செயலாற்றிய கொள்கை தீரர் அவர்.

    நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தில் முக்கால் நூற்றாண்டு காலப் பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் அவர்.

    தீக்கனலும், தென்றல் குளிரிளங்காற்றும் சரியளவில் கலந்த செந்தமிழ் வித்தகர் அவர்.

    பத்திரிகையாளர்-கவிஞர்-எழுத்தாளர்-திரைக்கதை உரையாடல் ஆசிரியர்-கொள்கை விளக்க நாடக நடிகர் என கலை இலக்கியத்தின் அனைத்துமுகத் திறனும் கொண்ட ஆளுமை அவர்!

    இயல்-இசை-நாடகம் என முத்தமிழுக்கும் தன் படைப்புகளால் முழுமையாகப் பங்களிப்பு செய்த முத்தமிழறிஞர்.

    தந்தை பெரியாரின் ஈரோடு ‘குடிஅரசு’ குருகுலத்தில் பயின்று, பேரறிஞர் அண்ணாவின் அரசியல் இயக்கப் பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்று, திராவிடப் பேரியக்கத்திற்காகவே தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவர்!

    அரை நூற்றாண்டு காலம் கழகத் தலைவராகப் பொறுப்பேற்று ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அச்சாணியாக இருந்து தமிழ்நாட்டு அரசியலை மட்டுமின்றி தேசிய அரசியலையும் சுழலச் செய்தவர்.

    தேர்தல் களத்தினை 13 முறை எதிர்கொண்டு, நின்ற தொகுதிகள் அனைத்திலும் வென்று, 5 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்து, 19 ஆண்டுகள் ஆட்சிப்புரிந்து, தமிழ்நாட்டை நயமாகச் செதுக்கிய ‘நவீனத் தமிழ்நாட்டின் தந்தையாகத்’ திகழ்ந்தவர்.

    சமூகநீதி-சமச்சீரான வளர்ச்சி-சம உரிமை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட அரசை வெற்றிகரமாக நடத்தி, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் பலவற்றை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

    இந்திய ஒன்றியத்தில் அரசியலில் நெருக்கடிகள் ஏற்பட்ட சூழல்களின் போதெல்லாம், டெல்லிப்பட்டணத்தின் பார்வை கோபாலபுரம் நோக்கியே திரும்பியிருக்கிறது என்பது கடந்த கால வரலாறு.

    பல குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றி, சமூகநீதிக் கொள்கையை இந்தியாவின் அரசியல்-சமுதாயக் கொள்கையாக நிலைநிறுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

    நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியில், சின்னஞ்சிறிய கிராமத்தில்-இசையையும் வேளாண்மை யையும் ஊன்றுகோலாய்க் கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்து, கொள்கை உறுதியும், கூரிய இலக்கும், குறைவிலா உழைப்பும் கொண்டு, அவதூறுகள்-பழித்தூற்றல்கள் போன்ற நெருப்பாறுகளைக் கடந்து, அரசியல்-பொதுவாழ்வு-கலை-இலக்கியம் எனத் தொட்ட துறைகள் அனைத்திலும், தூண்டா மணி விளக்காய் ஜொலித்து, வெற்றிகரமான சாதனைகள் ஏராளம் படைத்த ஆருயிர்த் தலைவர் கலைஞர் இன்றைய இளைய தலைமுறையினருக்கு “ரோல் மாடல் (முன்மாதிரி)”-வரலாற்று நாயகர்.



    Next Story
    ×