search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    கருணாநிதியின் புகழ் நிலைத்து இருக்கும்- கே.எஸ்.அழகிரி அறிக்கை

    கலைஞர் காட்டிய வழியில் தளபதி மு.க.ஸ்டாலினது ஆட்சி பீடுநடை போடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய அரசியலில் மிக சோதனையான காலக்கட்டத்தில் அன்னை இந்திரா காந்தியோடு கூட்டணி அமைக்க சென்னை கடற்கரையில் ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று அழைப்பு விடுத்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட 1980-ல் அரசியல் வியூகம் வகுத்தவர் கலைஞர். அதேபோல, வகுப்புவாத சக்திகளின் ஆட்சியை மத்தியில் அகற்றிட 2004-ல் அன்னை சோனியா காந்தியை ‘தியாகத்தின் திருவிளக்கே’ என்று அழைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய பெரும் துணையாக இருந்தவர் கலைஞர்.

    எந்த முடிவெடுத்தாலும் தொலைநோக்குப் பார்வையோடு உறுதியாக எடுத்து அரசியல் களத்தில் வெற்றிகளைக் குவித்தவர். தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதிக் காவலராக விளங்கியவர் கலைஞர்.

    மறைந்த முத்தமிழறிஞர் கலைஞரிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், நிர்வாக பயிற்சி பெற்று இன்றைக்கு தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் அனைவரும் போற்றுகிற வகையில் மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சியின் மூலம் எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். ஓராண்டில் பத்தாண்டு கால பணிகளை செய்து முடித்து சாதனை படைத்திருக்கிறார். கலைஞர் காட்டிய வழியில் தளபதி மு.க.ஸ்டாலினது ஆட்சி பீடுநடை போடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் தமிழ் கூறும் நல்லுலகத்தில் தொடர்ந்து நிலைத்திட அவர் பிறந்தநாளில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் மனப்பூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    Next Story
    ×