search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
    X

    தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்- தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

    தேர்தல் முடிவுகள் மூலம் தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்து உள்ளதாக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்றுச் சிறப்புமிக்க, நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் சீரிய இடம் உருவாக்கப்பட்டிருப்பது இந்திய அளவில் போற்றுதலுக்கு உரிய பொருள் ஆகியிருக்கிறது.

    ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தி.மு.க. கூட்டணி ஈர்த்திருக்கிறது. அத்தகைய மாபெரும் வெற்றியை அடைந்ததற்கு, தொடர்ந்து நல்லிதயங்களின் வாழ்த்துகள் பொழிந்த வண்ணம் உள்ளன.

    22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் 13 இடங்களை கழகம் கைப்பற்றி உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் தி.மு.க பெறுகிறது. 1971, 2004 பாராளுமன்றத் தேர்தல்களில் கழகம் பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது.

    சட்டமன்றத்தில் நம்முடைய பலம் 101ஆக உயர்கிறது. அ.தி.மு.க.வசம் இருந்த 12 தொகுதிகளை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியிருப்பது தமிழ்நாட்டின் இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

    இவற்றை செரிமானம் செய்துகொள்ள முடியாத ஆட்சியாளர்களும் அரசியல் எதிரிகளும், ‘தி.மு.க.வின் நோக்கம் நிறைவேறவில்லை’ என தங்கள் புண்ணுக்குத் தாங்களே புணுகு தடவி புளகாங்கிதம் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் மிகவும் தற்காலிக இன்பத்திற்குத் தடையாக இருக்க நான் விரும்பவில்லை. நமக்கான பெரும்பணிகள் நிறைய காத்துக் கொண்டு இருக்கின்றன.


    தலைவர் கலைஞர் இல்லாத நிலையில், கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சுமக்க வேண்டிய கடுமையான பணியுடன், தலைவர் இல்லாத காரணத்தால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகவும் கழகத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவர் வருவார் இவர் வருவார் என்றும் சூழ்ச்சி எண்ணத்துடன் திட்டமிட்டு தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயக ரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடிதான் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களங்களில் நமக்கு மக்கள் அளித்துள்ள இந்த அருமையான வெற்றி.

    மத்திய - மாநில ஆட்சியாளர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு துன்பத்தில் உழலும் தமிழ்நாட்டு மக்கள் நம்மை நம்பினர். பொதுக்கூட்டங்களில், நடைப்பயணங்களில், திண்ணைப் பிரசாரத்தில், தேநீர்க்கடை உரையாடலில் என நான் சென்ற இடமெல்லாம் தங்கள் வீட்டுப் பிள்ளையாக சகோதரனாக, குடும்பத்தில் ஒருவனாகக் கருதி ஓடோடி வந்து அரவணைத்து அன்பைப் பொழிந்தனர். ஆதரவை உறுதி செய்தனர். தமிழ்நாட்டு மக்களின் வற்றாத அன்பும் வாஞ்சைமிகு ஆதரவுமே வாக்குகளாக மாறி இந்த வெற்றியைத் தந்துள்ளது.

    மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் வகுத்தளித்த வழியில், தேர்தல் களப்பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களாம் அன்பு உடன்பிறப்புகளும் இல்லாமல், இந்த வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உண்ணாமல் உறங்காமல் ஓய்வு கொள்ளாமல் உழைத்த உடன் பிறப்புகள் அனைவரின் முயற்சியாலும் கிடைத்த இந்த வெற்றியை உச்சி மோந்து மெச்சிப் பாராட்டிட தலைவர் கலைஞர் நம்மிடம் இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டதே என்ற ஏக்கத்துடன், அவரது நினைவிடத்தில், இந்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்குவதே எனது கடமை!

    எதற்காக இந்த வெற்றியைத் தமிழக மக்கள் நமக்கு வழங்கினார்களோ, என்ன வாக்குறுதிகளை நாம் மக்களிடம் அளித்தோமோ, அவர்களின் உத்தரவினைப் பெற்று நம் கடன் தொண்டூழியம் செய்வதே எனக் கொண்டு, நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

    பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக் குரலாக தி.மு.க. ஓங்கி ஒலிக்கும். மக்களுக்கெதிரான பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு விழிப்புடன் காவல்காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கை தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மாநில நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும், பறிபோனவற்றை மீட்டெடுக்கவும் ஜனநாயகம் காக்கவும் அமைதியான அறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும்.

    மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு வியூகத்தை’ பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.க. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.க.வின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும்!

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×