என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "LS Polls"
- உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி 65 தொகுதிகளில் போட்டியிடும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்
- இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாத வகையில் செயல்பட்டு வருகிறோம்
வருகின்ற 2024 மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணியில் இடம்பிடித்துள்ள கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து மூன்று கூட்டங்களை நடத்தி பா.ஜனதாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.
தற்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் முக்கிய கட்சியாக பார்க்கப்படும் காங்கிரஸ், முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது. இதை நிதிஷ் குமார் வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கிடையே மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் 80 இடங்களில் 65 இடங்களில் போட்டியிடுவோம் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டிருந்தார். கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன் அடிப்படையில் அதிக இடங்களில் போட்டியிட இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு சம்பவங்களும் இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடையாது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் "சமாஜ்வாடி கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்ததில் இருந்து தற்போது வரை, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியால் முன்னதாகவும், இனிமேலும் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடையாது.
கட்சியில் உள்ள தலைவர்கள் அதிகமான இடங்களில் போட்டியிட விரும்புகிறார்கள். ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வருகிறது என்பதை தற்போது உங்கள் முன் சொல்லிக் கொள்கிறேன்'' என தெரிவித்தார்.
இதனால் உத்தர பிரதேச மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு போதுமான இடங்களை பகிர்ந்து அளித்து போட்டியிட வாய்ப்புள்ளது.
- பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்த மத்திய அரசு, அரசாணை வெளியிடவில்லை
- கட்டாயம் இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறாது
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. தொகுதி வரையறை முடிவடைந்த பின்னர் தேர்தல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அதற்கான வேலைகள் நடந்த பாடில்லை.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உமர் அப்துல்லா கூறியதாவது:-
உச்சநீதிமன்றத்தில், பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படவில்லை. கார்கில் மாவட்டத்தை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பான லடாக்- கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 22 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 26 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 12, காங்கிரஸ் 10, பா.ஜனதா, சுயேட்சை தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த வெற்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பிரதிபலிக்கும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நாங்கள் தற்போது ஐந்து ஆண்டுகளாக கவர்னர் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறோம். 2019-ம் ஆண்டிற்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது. ஏன் தேர்தலை தள்ளிப்போட வேண்டும்.
சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் கட்டாயம் இல்லை என்றால், அதையும் நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை.
மக்களின் உணர்வை அவர்கள் நன்றாக புரிந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை நடுத்துவது அவர்களது கட்டாயம். அது கட்டாயம் இல்லை என்றால், பாராளுமன்ற தேர்தலை நடத்தமாட்டார்கள். அவர்கள் மக்களை எதிர்கொள்ள வெட்கப்படுகிறார்கள். பாராளுமன்ற தேர்லுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து உள்ளிட்ட எந்த தேர்தலும் இருக்காது.
LAHDC-Kargil தேர்தல் முடிவு அவர்களுடைய அச்சத்தை நிரூபித்து விட்டது. தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களில் 22 இடங்களை பிடித்தது. வெற்றி பெற்ற இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் கூட எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இவ்வாறு உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
நாகர்கோவிலில் இன்று நாஞ்சில் சம்பத் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள், நீட் தேர்வு போன்றவற்றிற்கு தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தராத பாரதிய ஜனதா ஆட்சிக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி, கேரளாவில் முல்லை பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது போன்ற செயல்களுக்கு தமிழக மக்கள் தேர்தல் மூலம் பதில் கூறி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சிலரை வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பாரதிய ஜனதா போட்ட கணக்கு தோல்வி அடைந்து விட்டது. தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு கிடைத்த தோல்வி, இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வாக்காளர்களை போல இந்திய வாக்காளர்கள் விழித்திருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் வலிமையாக இருந்த பா.ம.க., பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் கணக்கை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் வலம் வந்த தே.மு.தி.க.வும் மக்களால் புறம் தள்ளப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் இத்தேர்தலில் மண் சார்ந்து, மக்கள் நலம் சார்ந்த சிந்தனையுடன் செயல்பட்டுள்ளனர். இதனால்தான் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.
தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நான், பிரசாரம் செய்தபோதே, தி.மு.க. கூட்டணிக்கு 38 தொகுதிகள் கிடைக்கும் என்று கருதினேன். தேர்தல் முடிந்ததும் இதனை தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அதுதான் இப்போது நடந்துள்ளது.
தமிழகத்திற்கு இனி மு.க. ஸ்டாலினின் தலைமைதான் தேவை. அது காலத்தின் கட்டாயமும் ஆகும்.
தேர்தல் களத்தில் நின்ற டி.டி.வி. தினகரன் கும்பல் தேர்தலில் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். குறிக்கோள் இல்லாமல் ஒரு சிலருக்காக மட்டும் கட்சி நடத்தியவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டி உள்ளனர்.
இந்த தேர்தலில் கமல்ஹாசனுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. இனி அவர், அடுத்த தேர்தலுக்கு தான் மக்கள் முன் வருவார். அப்போது 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டு அரசியலில் இருந்து வெளியேறுவார்.
ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியை பாராட்டி பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர், பாரதிய ஜனதா கட்சியின் இன்னொரு முகமாகவே இருக்கிறது.
மத்திய மந்திரிசபையில் தமிழகத்திற்கு இடமில்லை. எந்த பதவியும் யாருக்கும் வழங்கப்படவில்லை. இதை நான், ஏற்கனவே எதிர்பார்த்தேன். பிரதமர் மோடி, புதிய இந்தியா என்று கூறி புறப்பட்டு விடுவார். இனி தமிழகத்தை கண்டுகொள்ள மாட்டார்.

தி.மு.க.வின் கொள்கைகளுக்கும், ம.தி.மு.க.வின் கொள்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே வைகோ மீண்டும் தி.மு.க.வில் இணைய வேண்டும். தென்தமிழகத்தின் குரலாக வைகோவின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.
தமிழகத்தின் தேனி தொகுதியில் காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். இது இளங்கோவன் மீது திணிக்கப்பட்ட தோல்வி ஆகும். தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 13 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இது அ.தி.மு.க.வினர் வசம் இருந்து தி.மு.க.விற்கு கிடைத்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்ற 9 தொகுதிகளிலும் பணம் பாதாளம் வரை பாய்ந்தது.
நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் வரும். அங்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களே வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக பாடுபட்ட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தூத்துக்குடி மக்களின் உரிமைகளுக்காக, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நிச்சயமாக தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
இங்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வரமுடியுமோ அதற்கு நிச்சயமாக பாடுபடுவேன். இங்கு மிக முக்கியமாக இருக்கக் கூடியது தண்ணீர் பிரச்சனை. தண்ணீர் இல்லாத நேரத்தில் குளங்களை தூர்வார வேண்டியது முக்கியமானது. இந்த பிரச்சனையை தீர்க்கும் முயற்சியை முன்னெடுப்போம். அதனை தாண்டி மக்கள் பிரச்சனைகள் பல உள்ளன.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். எல்லோரையும் அரவணைத்து கொண்டு, இந்தியா என்பது எல்லோருக்கும் சொந்தம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தை உருவாக்கி நடத்த வேண்டும். இந்த முறையாவது மகளிர் மசோதாவை கொண்டுவர வேண்டும். பொருளாதாரத்தில் இருக்கும் சரிவு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் உள்ள தலைவர்களின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் போல்பேட்டை கிழக்கு, மேற்கு, நந்தகோபாலபுரம், செல்வநாயகபுரம், சக்தி விநாயகர்புரம், அழகேசபுரம், அம்பேத்கர் நகர், சுந்தரவேல்புரம், கிருஷ்ண ராஜபுரம், பொன்னகரம், முத்துகிருஷ்ணாபுரம், பூபால்ராயர்புரம், எஸ்.எஸ்.மாணிக்கபுரம், முருகன் தியேட்டர், லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, திரேஸ்புரம், குரூஸ்புரம், மட்டக்கடை, எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட், 2-ம் கேட், சிவன் கோவில் தெரு, ரங்கநாதபுரம், பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், கே.வி.கே.நகர், அண்ணாநகர் பகுதிகளில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:-
எத்தனையோ எதிர்ப்புகள், அச்சுறுத்துதல்கள், மிரட்டல்களுக்கு மத்தியில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை தி.மு.க கூட்டணிக்கு தந்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் தனித்துவமான வெற்றியை பெற்று உள்ளது. தமிழகத்தில் சுமூகமான சூழ்நிலையை, நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம்.
ஆனால் அவர்கள் தோல்வியடைந்த பின்பும் மக்களை மிரட்டுகின்றனர். என்னுடைய தோல்விக்காக வருத்தப்படுவீர்கள் என்று அச்சுறுத்தும் வகையில் பேசுகின்றனர். தூத்துக்குடி மக்களுக்கு எந்த தீங்கையும் அவர்கள் ஏற்படுத்திட முடியாது. மக்களுக்கு பின்னால் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் நிற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற பா.ஜனதா கட்சியின் தலைவராக (பிரதமர்) மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்று இரவு பிரதமராக பதவி ஏற்கிறார்.
பாராளுமன்ற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி சில நாட்களில் நடக்க உள்ளது. அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்படுவார்.
தற்காலிக சபாநாயகராக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக பாராளுமன்றம் அல்லது மேல் சபையில் மூத்த எம்.பி.க்கள், அதிக முறை எம்.பி.யாக இருந்தவர்கள் ஆகியோரின் பட்டியல்கள் தயாரிக்கப்படுகிறது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்களை தவிர மற்ற எம்.பி.க்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இதில் தேர்வு செய்யப்படும் நபரை ஜனாதிபதி பாராளுமன்ற தற்காலிக சபாநாயகராக நியமிப்பார்.

கடந்த மோடி அமைச்சரவையில் மந்திரியாக இருந்த சந்தோஷ் கங்வார் 8-வது முறையாக பாராளுமன்றத்துக்கு தேர்வாகி உள்ளார். இதேபோல் பா.ஜனதாவை சேர்ந்த மேனகாகாந்தியும் 8-வது முறையாக பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருக்கிறார்.
ஆனால், தற்காலிக சபாநாயகர் பதவிக்கு சந்தோஷ் கங்வாருக்கே அதிக வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே சந்தோஷ் கங்வார் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சபாநாயகராக நியமிக்கப்பட்டால் வேறு ஒருவர் தற்காலிகமாக சபாநாயகராக நியமிக்கப்படுவார்.
கொடிகுன்னில் சுரேஷ் (காங்கிரஸ்) வீரேந்தர் குமார் (பா.ஜனதா) மூலாயம் சிங்யாதவ் (சமாஜ்வாடி), மோகன்பாய் டெல்கர் (சுயேச்சை) ஆகியோர் 7-வது முறையாக எம்.பி.க்களாக தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களது பெயர்கள் தற்காலிக சபாநாயகர் பதவி பட்டியலில் உள்ளது.
அதிகமுறை எம்.பி. பட்டியலில் பலர் சமமாக இருந்தால் அதிக ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தவரின் பெயர் தற்காலிக சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக வளாகத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையவில்லை. இந்தியா முழுவதும் மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் இங்கு தமிழகத்துக்கு எதிராக பாரதிய ஜனதா இருப்பது போல சித்தரிப்பு, தொடர்ந்து பல்வேறு வகையில் எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரம் செய்த காரணத்தால் தமிழக மக்கள் ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். தேசிய நீரோட்டத்தோடு சேர்ந்து நாமும் வாக்களித்து இருக்கலாம் என்று இன்று மக்கள் வருத்தப்படுகின்றனர்.
அதேபோல மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர்.
தி.மு.க.வை பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவுகள் பெருத்த ஏமாற்றம்தான். மே 23-ந் தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என ஸ்டாலின் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார். ஆனால் மாற்றம் வரவில்லை. ஸ்டாலினுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.
தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும், நாங்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதால் தமிழர்களின் நலன் கருதி தமிழர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறாமல் தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதனை கண்டிப்பாக பெற்றுத் தருவோம்.
இந்த பணியை நாங்கள் தான் செய்ய முடியும். தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும் அவர்களால் இதனை செய்ய முடியாது. எப்படி அவர்கள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்கிறார்களோ? அதே போல் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்யலாம். அதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் சாதிக்க முடியாது. தி.மு.க. பெற்றுள்ளது பயனில்லாத வெற்றி.
தூத்துக்குடியை பொருத்தவரை கனிமொழி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிலுக்கும், கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கும் அவர்களால் குரல் கொடுக்க முடியாது. வெற்றி -தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத்துக்கு தேவையான திட்டங்களைப் பெற்று தரும் வகையில் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே சாதிப்பது நாங்கள்தான். தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவோம், தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் எங்களது ஸ்லீப்பர் செல்கள் மறுபடியும் வருவார்கள் என தினகரன் கூறியது நல்ல ஜோக்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி நாளை (30-ந்தேதி) 2-வது முறை பிரதமராக பதவி ஏற்கிறார்.
இந்த விழாவில் வங்காள தேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நோபளம், பூடான், கிர்கிஸ்தான், மொரீசியஸ் உள்ளிட்ட 14 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரோஷி இஸ்லாமாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இது எதிர்பாராதது. இத்தகைய பிரச்சனையில் இருந்து இந்தியா விரைவில் விடுபடும். இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர நட்புறவுடன் திகழ வேண்டும் என பிரதமர் இம்ரான்கான் விரும்புகிறார். எனவே தான் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதா கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இப்பிராந்தியம் வளர்ச்சி பெற காஷ்மீர், சியாசின் மற்றும் சர்கிரீக் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது குறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. இதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் தோல்வி ஏற்படாதவாறு கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

எங்களின் பிரசாரங்களை மக்கள் ரசிக்கவில்லை என்பது இந்த தேர்தலில் தெரிகிறது. என்னை பார்க்கும் பொதுமக்கள் ‘உங்களுக்குத்தான் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்று கூறுகிறார்கள். கிராமங்களில் என்னை மக்கள் அ.தி.மு.க. கட்சிக்காரராகவே பார்க்கிறார்கள். இரட்டை சிலை சின்னம் மக்கள் மனதில் பதிந்துவிட்ட சின்னமாகவே உள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தோல்வியை வைத்து எதிர்காலத்தை முடிவு செய்து விட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்களை அ.தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வருகிறதே? என்று கேட்டதற்கு தங்க தமிழ்ச்செல்வனுக்கு கிராக்கி இல்லாமல் இருக்குமா? என்று எதிர்கேள்வி எழுப்பினார்.
அரசியல் பாதை என்பது நிதானமாக இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.
அ.தி.மு.க.வில் பதவி கிடைத்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உடைக்க நீங்கள் தயாராக இருப்பதாக செய்திகள் வருவது குறித்து கேட்டதற்கு அது உண்மையல்ல. எனது அரசியல் பாதை தெளிவாக உள்ளது. அதன்படி செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.
தி.மு.க. நாளேடான முரசொலியில் டாக்டர் ராமதாசை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-
குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஓட்டவில்லையே என பெருமிதம் பேசுவதில் நமது மருத்துவர் அய்யாவுக்கு நிகர் அவரேதான் இருக்க முடியும்.
தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தைத்தான் ஏற்படுத்தியதே தவிர, எனக்குள் எந்தவிதக் கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உண்மைதான். அய்யாவுக்கு எப்படி கவலை வரும்.
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால் மத்தியில் மீண்டும் அமைய உள்ள நரேந்திரமோடி தலைமையிலான அரசின் துணையோடு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம் என்று கூறி சாதுர்யமாக வழக்கம்போல நழுவுகிறார் மருத்துவர் அய்யா.
மத்தியில் வரவேண்டும் என நீங்கள் விரும்பிய ஆட்சியே வந்து விட்டது. அப்படி இருக்க, உங்கள் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன தயக்கம். எம்.பி.யாக இருந்தால் தான் செய்ய முடியுமா?
மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வுக்கு உங்கள் திருமகன், உங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி மற்றும் உங்கள் கூட்டணியில் அங்கம் வகித்த கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம் புடைசூழ ஒரே விமானத்தில் டெல்லிக்குப் பயணித்தாரே, அதே போன்று அனுப்பி தமிழக மக்கள் நலனுக்குப் பங்காற்றக் கூடாதா?
உண்மையிலேயே நீங்கள் தமிழக வளர்ச்சிக்கும், தமிழக மக்கள் நலனுக்கும் பணியாற்றும் தலைவராக இருந்தால், என்ன சொல்லியிருக்க வேண்டும்?
“தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை, தமிழக நலனே என் நலன். நாம் எதிர்பார்த்த ஆட்சி மத்தியிலே அமைந்து விட்டது. மத்தியில் மீண்டும் அமைந்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு நமது அரசு. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்ற, அந்த அரசிடம் எடுத்துச் சொல்லி தேவையான அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்றியே தீருவோம் எனக் கூறியிருந்தால், உங்கள் உயரிய நோக்கத்தைப் பாராட்டியிருக்கலாம்.
ஆனால் பொறுப்பை நீங்கள் உதறித் தள்ளிவிட்டு, கூட இருக்கும் ஒரு சில அப்பாவி பாட்டாளிச் சொந்தங்களைத் தக்க வைத்துக் கொள்ள நினைத்து, பொறுப்பற்ற நிலையில் ஒரு அறிக்கை விடுகிறீர்களே, இது நியாயமா?

அறிக்கையின் முடிவில் பாட்டாளிகளை வீறு கொண்டு எழக் கேட்டுள்ளீர்கள். அத்துடன் விடவில்லை. மக்களின் பிரச்சனைக்காக தொடர்ந்து போராட அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள்.
கட்சித் தொண்டர்கள் காதிலே பூச்சுற்ற ஒரு அளவில்லையா? மருத்துவர் அய்யா, முழம் முழமாகச் சுற்றத் தொடங்கியுள்ளீர்களே, நியாயமா?
நீங்கள் ஆதரித்த கட்சிகளின் ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும். அப்படி இருக்க, மக்களின் பிரச்சனைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவற்றிற்குத் தீர்வு காண வேண்டியதுதானே. அதை விடுத்து போராட அழைப்பதேன்? சரி, அதை எல்லாம் விடுங்கள்.
தேர்தலில் கூட்டணி அமைத்தபோது ஒரு பத்து அம்சத் திட்டத்தைக் கூறி, அதனை ஏற்றுக் கொண்டதால்தான் நான் அ.தி.மு.க. அணியோடு கூட்டணி சேர்ந்தேன் என்று பேட்டி தந்தீர்களே. அந்த பத்து அம்சங்களையாவது நிறைவேற்றிடுவீர்களா, அதற்கும் “பெ....பெ....”தானா?
தேர்தல் தோல்விக்குத் துவள வேண்டாம் என அறிக்கை விட்டுவிட்டீர்கள். பத்து அம்சமும் பஞ்சாய்ப் பறக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டால் முடியுமா? அடுத்து கூட்டணிப் பங்கீட்டுப் பேச்சு உடன்படிக்கைப்படி ஒரு ‘ராஜ்ய சபா’ சீட்டு பாக்கியிருக்கிறது. அதை அன்புமணிக்குத் தயார் செய்யுங்கள்.
கூட்டணி வைத்துத் தோல்விதானே கண்டோம் என அந்த ‘சீட்’டைத் தராது கைவிரித்து விடப் போகிறார்கள்.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போது, எங்கோ தூரத்தில் ஒலிபரப்பாகும் “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே...” எனும் பாடல் காதிலே விழுகிறது. அய்யாவுக்கு அந்தப் பாடலை சமர்ப்பணமாக்குகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.