search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TR Balu"

    • டி.ஆர். பாலு 3-வது முறையாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • ஆறு முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. நேற்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர்.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் 82 வயதாகும் டி.ஆர். பாலு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது உறுதிமொழி எடுக்க வேண்டும். உறுதிமொழி வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் டி.ஆர். பாலு உறுதிமொழி எங்கிருக்கிறது என்பதை சிறிது நேரம் தேடிக்கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் இருந்தவர் உறுதிமொழி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினர். மேலும், தேர்தல் அதிகாரி உதவியாளரை அழைத்து உறுதிமொழி இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு சைகை காட்டினர். பின்னர் சுதாரித்துக் கொண்ட டி.ஆர். பாலு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

    கருணாநிதி காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் டி.ஆர். பாலு உறுதிமொழியை வாசிக்க திணறியது ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ இணைய தளத்தில் பகிரப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

    டி.ஆர். பாலு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தன்னிடம் கையிருப்பாக ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 1.08 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து இருப்பதாகவும், 16 கோடி ரூபாய் அளவில் அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    டி.ஆர். பாலு 1996-ல் இருந்து 2004 வரை நான்கு முறை தென்சென்னை தொகுதியில் போடடியிட்டு வெற்றி பெற்றார். 2009-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    2014-ல் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2019-ல் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    1986 முதல் 1992 வரை மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். 1999 முதல் 2003 வரையிலும், 2004 முதல் 2009 வரையிலும் மத்திய மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • என்னை ஜாதி பார்த்து பேசியதாக கூறியது நியாயமா?
    • ஒட்டுமொத்தமாக 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீத பயனாளிகளை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் திலகர் திடலில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்கிற பாராளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு எம்.பி. பேசியதாவது:-

    கடந்த 2019-ம்ஆண்டில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால், அப்பலவீனத்தைப் பயன்படுத்தி பா.ஜனதா வெறும் 37 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்கி வெற்றி பெற்றது. அதனால்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் வெற்றி பெற முடியும் எனக் கூறினார். இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. இதிலிருந்து எத்தனை பேர் விலகி சென்றாலும், இந்தியா கூட்டணியிடம் தான் வாக்கு வங்கி உள்ளது.

    விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வருவதற்கான காலம் வந்துவிட்டது என 2011-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம், நரேந்திர மோடி கூறினார். அச்சட்டத்தைத் தயார்படுத்த அரசு வக்கீலின் ஆலோசனைப்படி உணவு பாதுகாப்பு சட்டமும், நிலம் கையகப்படுத்தும் சட்டமும் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அடுத்து குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வரும்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால், மோடி பிரதமராகி 10 ஆண்டுகளாகியும் அச்சட்டத்தை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல், 3 கருப்பு சட்டங்களை கொண்டு வந்தார்.

    தமிழ்நாட்டுக்கு மெட்ரோ 2-வது திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை, வெள்ளச்சேதத்துக்கு இழப்பீடு கொடுக்க மறுப்பு என பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது.

    வெள்ள நிவாரணம் கோரி நாடாளுமன்றத்தில் நான் பேசியபோது, தனது துறைக்கு தொடர்பில்லாத மத்திய இணை மந்திரி எல். முருகன் இடையூறு செய்யும் நோக்கில் குறுக்கே, குறுக்கே பேசினார். அதனால், ஒன்றுமே தெரியாத நீங்கள் உட்காருங்கள் என கூறினேன். ஜாதி, மதம், நிறம் எதுவும் எங்கள் இயக்கத்துக்கு தெரியாது. அனைத்து சமயத்தினரும், ஜாதியினரும் எங்களுக்கு வேண்டியவர்கள்தான். என்னை ஜாதி பார்த்து பேசியதாக கூறியது நியாயமா?

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கார்ப்பரேட் நிதி 33 சதவீதம் வசூல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 22 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு சதவீதத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி வீதம் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 11 சதவீதத்துக்கு எவ்வளவு இழப்பாகியுள்ளது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அவ்வளவும் பெரிய முதலாளிகளுக்கு இந்த அரசு சலுகை செய்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, நான் முதல்வர் திட்டம், காலை உணவு திட்டம், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் 4.81 கோடி பயனாளிகள் பயடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 6.20 கோடி வாக்காளர்களில் 77 சதவீத பயனாளிகளை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். எனவே, நமது முதல்வரை மக்கள் நம்பிக்கை, உறுதி, விருப்பம், வெற்றி, எதிர்காலம் எனக்கருத வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய மந்திரி தேவையான உதவிகள் செய்ய முன்வரவில்லை.
    • டி.ஆர்.பாலுவுக்கும் மத்திய மந்திரி எல்.முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பாராளுமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு புயல் பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

    தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய மந்திரி தேவையான உதவிகள் செய்ய முன்வரவில்லை என குற்றம்சாட்டி பேசினார். அப்போது மத்திய மந்திரி எல்.முருகன் குறுக்கிட்டு பேச முயன்றார்.

    உடனே, நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள். தயவு செய்து உட்காருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர். நீங்கள் அமைச்சராகவும் இருக்க தகுதியற்றவர் என எல்.முருகனை நோக்கி, டி.ஆர்.பாலு ஆவேசமாக பேசினார்.

    அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் மறுப்பு தெரிவித்து பேச தொடங்கினார். இதனால் டி.ஆர்.பாலுவுக்கும் மத்திய மந்திரி எல்.முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

    எல்.முருகனுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.-க்கள் குரல் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல்- குழப்பம் நிலவியது. டி.ஆர்.பாலுவை பேசவிடாமல் தடுத்தனர். அதைதொடர்ந்து டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.-க்கள், கூட்டணி கட்சி எம்.பி.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

    பாராளுமன்றத்தில் தி.மு.க.வுடன் நடந்த வாக்குவாதம்- மோதல் குறித்து மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் அமைச்சராக இருப்பதை தி.மு.க.-வால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் டி.ஆர்.பாலு எம்.பி. எனது சமூகத்தையும், என்னையும் அவமதிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தினார்.

    சமூக நீதியை ஓட்டு வங்கிக்காக மட்டுமே தி.மு.க. பயன்படுத்துகிறது. பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக தலித் சமூகத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு உயர் பொறுப்புகளை வழங்கி பெருமைப்படுத்தி வருகிறார்.

    தமிழ்நாட்டிற்கு ரூ.11 ஆயிரம் கோடி வளர்ச்சி பணிகளுக்கு வழங்கி உள்ளார். காசி சங்கமம் நிகழ்ச்சி நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து உள்ளார். தமிழ்நாட்டு மக்கள் காசிக்கு வருவதற்கும் காசி மக்கள் இங்கு வருவதற்கும் தொடர்பை ஏற்படுத்தி உள்ளார்.

    தமிழ்நாட்டின் செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவி தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். தமிழ் கலாச்சாரம், பண்பாடு மீது பிரதமருக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது.

    இவ்வாறு எல்.முருகன் கூறினார். 

    மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், "

    டி.ஆர்.பாலு தான் அரசியலில் இருக்க தகுதியற்றவர். பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலு நடந்துகொண்ட விதம் வேதனை அளிக்கிறது" என்றார். 

    மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில், "தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தாழ்த்தப்பட்ட சமூகத்தை பற்றி பாராளுமன்றத்தில் பேசியதன் மூலம் அச்சமூகத்தையே அவமதித்து விட்டார். இது கண்டிக்கதக்கது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதிஷ் ஆவேசமாக தெரிவித்ததாக தகவல் பரவியது.
    • அவருடைய பேச்சை மொழிபெயர்க்க முன்வரவில்லை.

    டெல்லியில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டத்தில், இந்தியில் வழங்கப்பட்ட நிதிஷ் குமாரின் பேச்சை மொழிபெயர்க்க கோரினார் டி.ஆர்.பாலு. அதற்கு, "இந்தி நம் தேசிய மொழி; அனைவரும் அதை தெரிந்து கொள்ள வேண்டும்" என்று நிதிஷ் ஆவேசமாக தெரிவித்ததாக தகவல் வெளியானது.

    "இந்தியாவை இந்துஸ்தான் என்று அழைக்கிறோம். ஆங்கிலம் பிரிட்டிஷாரால் திணிக்கப்பட்ட மொழி. இந்தி மொழி நமக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்"என்று கூறியுள்ளார் நிதிஷ்குமார். இதனையடுத்து சில தலைவர்கள் அவரை அமைதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ் குமார் பேசி அமர்ந்தபிறகு யாரும் அவருடைய பேச்சை மொழிபெயர்க்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

     


    இந்திய நாட்டை இந்துஸ்தான் என்று அழைப்பதற்கு காரணமுண்டு. இந்துஸ்தான் என்பது இமயமலைக்கும் இந்து சகாராவுக்கும் இடையில் உள்ள நிலம். அதேநேரம், இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கபட்டுள்ளன. பேசும் மக்கள் தொகையில் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரே அந்தஸ்து இருக்கின்றன.

    இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 22 மொழிகள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகள். இந்தி இந்தியாவின் "தேசிய" மொழி அல்ல, ஆனால் ஒரு "அதிகாரப்பூர்வ" மொழி. இந்தியாவில் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை.

     


    இதேபோன்று, மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குற்றம்சாட்டுவதையும் நாம் பார்க்க முடிகிறது. ஆகவே, ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பத்தை பொறுத்தே இருக்க வேண்டும். மொழியை கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று திணிப்பது இருக்க கூடாது.

    எனவே, இந்தி தேசிய மொழி, அதனை தெரிந்து வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்ற தொனியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியிருந்தால் அது ஏற்புடையதல்ல. காரணம், இந்தி தேசிய மொழி அல்ல. அதேநேரம், ஒரு மொழியை கற்பது, தெரிந்துவைத்துக்கொள்வது என்பது அவரவர் விருப்பம்.

    அந்த வகையில், இந்தியை திணிப்பதுதான் தவறு... விருப்பப்பட்டு கற்பது என்பது ஏற்புடையதே...

    • மீனவர்கள் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் மத்திய மந்திரியிடம் வழங்கப்பட்டது.
    • இந்தச் சந்திப்பின்போது மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

    புதுடெல்லி:

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்களை

    விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு கடிதங்களை எழுதி வருகிறார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி முரளிதரன் உடன் தி.மு.க. எம்.பி., டி.ஆர்.பாலு நேரில் சந்தித்தார். அப்போது, மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய மந்திரியிடம் வழங்கினார்.

    அந்தக் கடிதத்தில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

    கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மத்திய இணை மந்திரி முரளிதரன், மீனவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

    • அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
    • இதில் தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் கலவர விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.

    இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    விலைவாசி உயர்வை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுவது குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.

    மணிப்பூர், விவகாரம், பொது சிவில் சட்டம், ஒடிசா ரெயில் விபத்து ஆகியவை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

    • கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.
    • விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    சென்னை:

    மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் - 11, வார்டு - 143, நொளம்பூர் பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே இரண்டு உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழா திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். மேயர் பிரியா ராஜன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பணிகள் நிலைக்குழு தலைவர் நே.சிற்றரசு, 11- வது மண்டல குழு தலைவர் நொளம்பூர் வே.ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம் , ஒன்றிய செயலாளர் அ.ம. துரை வீரமணி, எஸ்.பத்மபிரியா, கவுன்சிலர் வ.செல்வகுமார் , வி. ராஜேஷ், எஸ்.மணி, கே.குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.
    • மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.

    பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தார். நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    மேலும் பிற துறைகளில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகள் காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா போன்ற திட்டப் பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி, பொது சேவை மையங்களின் பயன்பாடு, நெடுஞ்சாலை நீர்வழிப்பாதை மற்றும் சுரங்க செயல்பாடுகள், மாவட்ட தொழில் மையம், செயல்படுத்தும் திட்டங்கள், மாற்று திறனாளிகளுக்கான திட்டங்கள், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவை பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் மழைநீர் வடிவதற்காக செயல்படுத்தும் பணிகளின் விவரங்களை கேட்டறிந்த டி.ஆர்.பாலு எம்.பி. மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு டி.ஆர்.பாலு நோட்டீஸ் விடுத்துள்ளார்.
    • சொத்துப் பட்டியல் தொடர்பாக 48 மணி நேரத்தில் பதிலளிக்கும் படி கோரியுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்துப் பட்டியல் குறித்து வீடியோ வெளியிட்டார்.

    இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் விடுத்துள்ளார்.

    அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    48 மணி நேரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்மீது வழக்கு தொடரப்படும்.

    மேலும், இழப்பீடு தொகையாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, அண்ணாமலை மீது தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நோட்டீஸ் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம்.
    • நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்.

    ஆலந்தூர்:

    தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கொண்ட குழுவினர் அளித்தனர். பின்னர் அவர்கள் சென்னை திரும்பினர்.

    சென்னை விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் எப்படி செயல்பட்டார் என்பதை பற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து சொல்லிவிட்டு வந்துள்ளோம்.

    கவர்னர் ரவி டெல்லி செல்ல இருப்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியதின் தொடர்ச்சியாக, கவர்னர் ரவி டெல்லி செல்லலாம் என்று நினைக்கிறோம்.

    ஜனாதிபதியிடம் நாங்கள் என்ன பேசினோம் என்பதை முழுமையாக தெரிவிக்க முடியாது. நாங்கள் என்ன பேசினோம் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பொது இடத்தில் பகிரங்கமாக கூற முடியாது.

    சமூகநீதி குறித்து நாங்கள் 100 ஆண்டு காலமாக செய்து வருகிறோம். சமூகநீதி பற்றி பேசும்போது, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், உச்சநீதி மன்றத்தில் உள்ள வழக்கை வாபஸ் பெற்றால் சேது சமுத்திர திட்டம் வந்துவிடும். எனவே முதலில் அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு வந்து, அது பற்றி பேசட்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.க.வுக்கு உண்மையில் இருக்குமேயானால், முதலில் அவர்கள் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்.

    திராவிடமாடல் என்பது இலக்கியம், இதிகாசம் ஆகியவற்றில் இருக்கிறது. இதுபற்றி எல்லாம் புரியாதவர்கள் ஏதாவது பேசுவார்கள், உளறுவார்கள். அவர்களுடைய உளறல்களுக்கெல்லாம் நான் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலம் காலமாக பிறப்பின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால் இருக்கும் பிரிவினையை அகற்றப் பிறந்ததே திராவிட இயக்கம்.
    • 'வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது' என்ற நிலைமையை மாற்றி, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருப்பவர்தான் கவர்னர் ஆர்.என்.ரவி.

    எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. பட்டியலின மக்கள் குறித்தும், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் அவதூறு பேச்சு பேசினார். அவரது திட்டம்தான் என்ன என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் அல்ல. 

    வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச்செல்வதுதான் அவரது நோக்கமாக இருந்து வருகிறது. இதுவரை பொதுவாக நுண்ணிய வர்ணாசிரம அரசியலைப் பேசி வந்த அவர், இப்போது வெளிப்படையாகத் தேர்தல் அரசியல்வாதியாகப் பேசத் தொடங்கிவிட்டார். 

    'திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்' என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய்ப் பேச வேண்டியதை, கவர்னர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.

    இவருக்குத் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக ஆகும் ஆசை இருந்தால், கவர்னர் பதவியை விட்டு விட்டு வந்து, இதுபோன்ற அபத்தங்களைப் பேசட்டும். அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட-அதே நேரத்தில் நியமனம் செய்யப்படும் பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் லகானை செலுத்தப் பார்ப்பது அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்து ஆக்குவது ஆகும்.

    சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள் ஆகியவை குறித்த அவரது கருத்துகள் அவரது மூளையில் படிந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட தன்மையைக் காட்டுகிறது என்றால், திராவிட ஆட்சி குறித்த அவரது விமர்சனம் பா.ஜ.க.வின் தேர்தல் அரசியல் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

    ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும், உத்தரபிரதேசமும் இன்று எப்படி இருக்கிறது-தமிழ்நாடு எப்படி இருக்கிறது? என்பது கூட அவருக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது என்ன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

    இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவீதம். ஒன்றிய அரசின் மொத்த வரிவருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவீதம். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 சதவீதம். ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 சதவீதம். கார்கள் ஏற்றுமதியில் 32.5 சதவீதம். தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 சதவீதம். கல்வியில் இரண்டாவது இடம்!-இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக ஒன்றிய அரசே பாராட்டி இருக்கிறது.

    இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் இப்போது அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இதுவும் அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் தான். தேசிய சராசரி பண வீக்கமானது 6.2 சதவீதத்தில் இருந்து 7.79 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் தமிழ் நாட்டின் பணவீக்கமானது 5.37 சதவீதமாக குறைந்தது. வாங்கும் திறன் அதிகமாகி இருக்கிறது தமிழகத்தில்.

    சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந்தது தான் 'திராவிட மாடல்' வளர்ச்சியாக அமைந்து உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த முதல்-அமைச்சராக மட்டுமல்ல, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக்காட்டி இருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இந்த வெற்றியானது, சில அரசியல் சக்திகளுக்கு எரிச்சலைத் தரலாம். அதில் ஒருவராக கவர்னர் இருப்பது தான் அதிர்ச்சியைத் தருகிறது.

    இப்படி எல்லாம் தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் கவர்னர் இப்படி பேசுகிறாரோ என்ற ஐயமே எழுகிறது. அதனால்தான் திராவிட ஆட்சியின் மீது அவருக்குக் கோபம் வருகிறது. 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது? அந்தச் சொல் எதனால் இவருக்குச் சுடுகிறது?

    'திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தது' என்கிறார் அவர். தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம்.

    இன்னார் படிக்கலாம், இன்னார் படிக்கக்கூடாது என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம். தொடக்கூடாத சாதி, கண்ணில் படக்கூடாத சாதி, மூச்சுக்காற்று படக்கூடாத சாதி என பிரித்தது திராவிடமல்ல, ஆரியம்.

    சமூகத்தின் சரிபாதியான பெண்குலத்தை, மூலையில் முடக்கி இழிவுபடுத்தியது திராவிடமல்ல, ஆரியம். எனவே, பிரிவினைக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி, ஆரியத்தை எதிர்த்துத்தான் குரல் எழுப்ப வேண்டுமே தவிர திராவிடத்தை அல்ல.

    காலம் காலமாக பிறப்பின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால் இருக்கும் பிரிவினையை அகற்றப் பிறந்ததே திராவிட இயக்கம். தமிழர்களை இன உணர்வு பெற்றவர்களாக மாற்றியது திராவிட இயக்கம். அவர்களைக் கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னுக்குக் கொண்டு வந்தது திராவிட இயக்கம்.

    'வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது' என்ற நிலைமையை மாற்றி, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இந்த ஐம்பதாண்டு கால உண்மையை, தனக்கு ஏதோ மேடை கிடைத்து விட்டது என்பதற்காக மாற்ற முனையக் கூடாது.

    அனைவரும் 'இந்தியர்' என்று மேடைதோறும் பேசி வருகிறார் கவர்னர். இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வு வேண்டும் என்பது உண்மை தான். அந்த ஒற்றுமை உணர்வுக்கு விரோதமான மதவாத அரசியலை அவரால் கண்டிக்க முடியுமா?

    அந்த ஒற்றுமை உணர்வுக்கு எதிரான சனாதன, வர்ணா சிரமக் கோட்பாட்டை அவரால் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியுமா? வர்ணாசிரம உணர்வு, வேதகால சனாதனக் கோட்பாட்டுகளைக் கையில் வைத்துக்கொண்டு தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்து விட்டது. அவருக்கு இம்மூன்றும் பிடிக்கவில்லை.

    தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்பவை கவர்னர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்.

    ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் கவர்னராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக கவர்னர் ரவி பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டி சின்னத்தையும் வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க அழைப்பு.
    • பிரதமர் மோடியுடன், திமுக எம்.பி.க்கள், டி.ஆர். பாலு, கனிமொழி சந்திப்பு

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழ் பிரதமர் மோடியிடம் இன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கடந்த 15ந் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார்.

    அப்போது முதலமைச்சர் சென்னையில் 28.7.2022 அன்று நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு அழைப்பு விடுக்க தான் நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு, தற்போது கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதால் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.  


    அதனைத் தொடர்ந்து, இன்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஆகியோர் சந்தித்து, 28.7.2022 அன்று சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழையும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான "தம்பி" சின்னத்தையும் வழங்கி, விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×