என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
"திராவிடம்" என்றால் வயிறு எரிவது ஏன்?- தமிழக கவர்னருக்கு தி.மு.க. கடும் கண்டனம்
- காலம் காலமாக பிறப்பின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால் இருக்கும் பிரிவினையை அகற்றப் பிறந்ததே திராவிட இயக்கம்.
- 'வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது' என்ற நிலைமையை மாற்றி, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
சென்னை:
தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருப்பவர்தான் கவர்னர் ஆர்.என்.ரவி.
எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. பட்டியலின மக்கள் குறித்தும், அண்ணல் அம்பேத்கர் குறித்தும் அவதூறு பேச்சு பேசினார். அவரது திட்டம்தான் என்ன என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் அல்ல.
வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச்செல்வதுதான் அவரது நோக்கமாக இருந்து வருகிறது. இதுவரை பொதுவாக நுண்ணிய வர்ணாசிரம அரசியலைப் பேசி வந்த அவர், இப்போது வெளிப்படையாகத் தேர்தல் அரசியல்வாதியாகப் பேசத் தொடங்கிவிட்டார்.
'திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்' என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போய்ப் பேச வேண்டியதை, கவர்னர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு அவர் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.
இவருக்குத் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக ஆகும் ஆசை இருந்தால், கவர்னர் பதவியை விட்டு விட்டு வந்து, இதுபோன்ற அபத்தங்களைப் பேசட்டும். அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட-அதே நேரத்தில் நியமனம் செய்யப்படும் பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு அரசியல் லகானை செலுத்தப் பார்ப்பது அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்து ஆக்குவது ஆகும்.
சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள் ஆகியவை குறித்த அவரது கருத்துகள் அவரது மூளையில் படிந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட தன்மையைக் காட்டுகிறது என்றால், திராவிட ஆட்சி குறித்த அவரது விமர்சனம் பா.ஜ.க.வின் தேர்தல் அரசியல் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பீகாரும், உத்தரபிரதேசமும் இன்று எப்படி இருக்கிறது-தமிழ்நாடு எப்படி இருக்கிறது? என்பது கூட அவருக்குத் தெரியாதா? தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது என்ன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவீதம். ஒன்றிய அரசின் மொத்த வரிவருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவீதம். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 சதவீதம். ஜவுளித் துறை ஏற்றுமதியில் 19.4 சதவீதம். கார்கள் ஏற்றுமதியில் 32.5 சதவீதம். தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 சதவீதம். கல்வியில் இரண்டாவது இடம்!-இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக ஒன்றிய அரசே பாராட்டி இருக்கிறது.
இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் இப்போது அதிகமாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்துள்ளது. இதுவும் அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் தான். தேசிய சராசரி பண வீக்கமானது 6.2 சதவீதத்தில் இருந்து 7.79 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் தமிழ் நாட்டின் பணவீக்கமானது 5.37 சதவீதமாக குறைந்தது. வாங்கும் திறன் அதிகமாகி இருக்கிறது தமிழகத்தில்.
சமூக வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந்தது தான் 'திராவிட மாடல்' வளர்ச்சியாக அமைந்து உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த முதல்-அமைச்சராக மட்டுமல்ல, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக்காட்டி இருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்த வெற்றியானது, சில அரசியல் சக்திகளுக்கு எரிச்சலைத் தரலாம். அதில் ஒருவராக கவர்னர் இருப்பது தான் அதிர்ச்சியைத் தருகிறது.
இப்படி எல்லாம் தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் கவர்னர் இப்படி பேசுகிறாரோ என்ற ஐயமே எழுகிறது. அதனால்தான் திராவிட ஆட்சியின் மீது அவருக்குக் கோபம் வருகிறது. 'திராவிடம்' என்ற சொல்லைப் பார்த்து இவர் வயிறு ஏன் எரிகிறது? அந்தச் சொல் எதனால் இவருக்குச் சுடுகிறது?
'திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தது' என்கிறார் அவர். தலையில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம்.
இன்னார் படிக்கலாம், இன்னார் படிக்கக்கூடாது என்று பிரித்தது திராவிடமல்ல; ஆரியம். தொடக்கூடாத சாதி, கண்ணில் படக்கூடாத சாதி, மூச்சுக்காற்று படக்கூடாத சாதி என பிரித்தது திராவிடமல்ல, ஆரியம்.
சமூகத்தின் சரிபாதியான பெண்குலத்தை, மூலையில் முடக்கி இழிவுபடுத்தியது திராவிடமல்ல, ஆரியம். எனவே, பிரிவினைக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி, ஆரியத்தை எதிர்த்துத்தான் குரல் எழுப்ப வேண்டுமே தவிர திராவிடத்தை அல்ல.
காலம் காலமாக பிறப்பின் பேரால், மதத்தின் பேரால், சாதியின் பேரால் இருக்கும் பிரிவினையை அகற்றப் பிறந்ததே திராவிட இயக்கம். தமிழர்களை இன உணர்வு பெற்றவர்களாக மாற்றியது திராவிட இயக்கம். அவர்களைக் கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னுக்குக் கொண்டு வந்தது திராவிட இயக்கம்.
'வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது' என்ற நிலைமையை மாற்றி, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இந்த ஐம்பதாண்டு கால உண்மையை, தனக்கு ஏதோ மேடை கிடைத்து விட்டது என்பதற்காக மாற்ற முனையக் கூடாது.
அனைவரும் 'இந்தியர்' என்று மேடைதோறும் பேசி வருகிறார் கவர்னர். இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வு வேண்டும் என்பது உண்மை தான். அந்த ஒற்றுமை உணர்வுக்கு விரோதமான மதவாத அரசியலை அவரால் கண்டிக்க முடியுமா?
அந்த ஒற்றுமை உணர்வுக்கு எதிரான சனாதன, வர்ணா சிரமக் கோட்பாட்டை அவரால் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியுமா? வர்ணாசிரம உணர்வு, வேதகால சனாதனக் கோட்பாட்டுகளைக் கையில் வைத்துக்கொண்டு தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்று பேசுவதுதான் பிரிவினைவாதம் என்றால் அவரது உள்நோக்கம் தெளிவாகத் தெரிந்து விட்டது. அவருக்கு இம்மூன்றும் பிடிக்கவில்லை.
தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்பவை கவர்னர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் கவர்னராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக கவர்னர் ரவி பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்