என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Governor"

    • கவர்னர் வந்ததிலிருந்து தமிழகத்தில் உயர்கல்வித்துறைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி தான்‌ எடுத்து கொண்டு இருக்கிறார்.
    • பா.ஜ.க ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழக முதல்வரையும் வஞ்சிக்கிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மூலம் கோப்புகள் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக கவர்னர் இதுவரை ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துகிறார்.

    உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நானும் உயர்கல்வித்துறை செயலாளரும் கவர்னரை சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை வைக்க நேரம் கேட்டுள்ளோம். இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. காத்துக் கொண்டிருக்கிறோம். அழைக்கும் பட்சத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தின் அவசியம், இதனால் பயனடையும் மாணவர்கள் குறித்து கருத்துக்களை எடுத்துரைப்போம். தமிழக கவர்னர் விரைவில் அழைக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.

    கவர்னர் வந்ததிலிருந்து தமிழகத்தில் உயர்கல்வித்துறைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி தான் எடுத்து கொண்டு இருக்கிறார். அந்த முயற்சி, தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து உயர் கல்வித்துறையை உச்சத்துக்கு கொண்டு செல்வோம்.

    தி.மு.க. தான் திராவிட பற்று-தமிழ் பற்று கொள்கையில் பின் வாங்காமல் உள்ளது. பா.ஜ.க ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழக முதல்வரையும் வஞ்சிக்கிறது.

    17 மாநிலங்களில் ஆளுகிற பா.ஜ.க மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க செய்கிற அநீதியை கண்டிக்கிற ஒரே ஒற்றைத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதை எல்லாம் விரைவில் உடைத்து எரிந்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ.உடன் இருந்தார்.

    • தமிழகத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது.
    • வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இது பொருந்தும்.

    சென்னை:

    மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கவர்னரிடம் இருந்த 10 மசோதாக்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதேபோல் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு அதிகபட்சமாக 3 மாதங்களில் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோல் ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது.

    இந்த தீர்ப்பை தொடர்ந்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து வருகிறார். அந்த அடிப்படையில் கடந்த சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, அவருக்கு அனுப்பட்டு இருந்த மசோதாக்களில் 5 மசோதாக்களுக்கு கவர்னர் நேற்று ஒப்புதல் அளித்தார்.

    அதில் 2 மசோதாக்கள் மிக முக்கியமானது ஆகும். முதலாவது, தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (கடும் வசூல் நடவடிக்கை தடுப்பு சட்டம்) 2025. இந்த சட்டத்தின்படி கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை அதாவது அவரின் பெற்றோர், கணவர் அல்லது மனைவி, குழந்தைகள் ஆகியோரை கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது.

    மேலும் அவர்களுக்கு இடையூறு, வன்முறையை பயன்படுத்துதல், அவமதித்தல், மிரட்டுதல், அவர்கள் போகுமிடங்களில் பின்தொடர்தல், அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல், அந்த சொத்துகளை பறித்துக்கொள்ளுதல், அவரது வீடு, வசிக்குமிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகிய இடங்களுக்குச் செல்வது, பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குற்றமாக கருதப்படும்.

    இந்த குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். வெளி ஏஜென்சிகளை பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

    கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அது, கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கையால் நேரிட்டதாக நிரூபிக்கப்பட்டால் அது பாரதிய நியாய சன்ஹிதாவின் 108-ம் பிரிவின் கீழ் குற்றமாக கருதப்படும். அதாவது அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த மசோதா, குறிப்பாக ஏழை தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பலர் மீது நடக்கும் இந்த கொடுமைகளை நிறுத்த தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இரண்டாவது மசோதா, தமிழகத்தில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, அதில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதன்படி இனி உயிரி-மருத்துவக் கழிவுகளை (பயோ மெடிக்கல் வேஸ்ட்) முறையற்று குவித்து பொது சுகாதாரத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்துவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

    வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் இது பொருந்தும். எனவே மருத்துவ கழிவுகளை இனி கண்டபடி கொட்டக்கூடாது. முறைப்படி அகற்ற வேண்டும்.

    இதுதவிர தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட மசோதா, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்த சட்ட மசோதா ஆகியவற்றுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    • 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர்.
    • வரும் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    சென்னை:

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததன் மூலம் சுமார் 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாத்துக்களிலும் நியமனம் செய்யப்படுவர்.

    மேலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிகளில், 37 மாற்றுத்திறனாளிகளும் வரும் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

    • கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஸ்படிகலிங்க பூஜையில் மனைவியுடன் கலந்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் ஆன்மிக பயணமாக திருச்சி, ராமேசுவரம், மதுரை கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக நேற்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் முசிறி செல்லும் வழியில் அமைந்துள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான குணசீலத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெற்ற விழாவில் கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் பிச்சுமணி அய்யங்கார் எழுதிய குணசீல மகாத்மியம் என்ற நூலை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

    இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை ராமேசுவரம் வருகை தந்தார். அங்கு அவரை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இரவில் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்று புனித நீராடினார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் தனது மனைவியுடன் நீராடிய கவர்னர், கோவிலுக்குள் சென்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டார்.

    தொடர்ந்து அங்கு நடைபெற்ற ஸ்படிகலிங்க பூஜையில் மனைவியுடன் கலந்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தார். முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் உள்ள புகழ்பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி காரில் புறப்பட்டு அனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளுக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட அவர் மதுரை சென்றார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையையொட்டி ராமேசுவரம், மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
    • கவர்னர் வருகையை ஒட்டி திருச்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு திருச்சி செல்கிறார்.

    திருச்சியில் கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மாலை கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கோர்ட் யார்டு ஓட்டலுக்கு சென்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் அங்கு ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா மற்றும் குணசீலம் மகஹாத்மியம், வள்ளுவத்தில் மெய்ஞானம் ஆகிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சியில் இருந்து புறப்பட்டு மதுரை செல்கிறார். கவர்னர் வருகையை ஒட்டி திருச்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் ஆட்சேபத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
    • வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லையை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

    இந்நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    துணைவேந்தர் நியமன அதிகாரம் விவகாரத்தில் தமிழக அரசின் ஆட்சேபத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

    இடைக்கால தடை விதிக்கக்கூடாது என தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தடை விதித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

    இதைதொடர்ந்து, இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • சட்டசபை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • 4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    கடந்த மார்ச் 14-ந்தேதி முதல் ஏப். 29-ந்தேதி வரை நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இன்று 4 சட்டதிருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

    4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

    • கவர்னருடன் அவரது மனைவி மற்றும் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர்.
    • கவர்னரின் திடீர் டெல்லி பயணத்திற்கு காரணம் என்ன என்று அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணிக்கு ஏர்-இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். கவர்னருடன் அவரது மனைவி மற்றும் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர்.

    கவர்னர் 4 நாள் பயணமாக, டெல்லி சென்று உள்ளதால், வருகின்ற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பி வருகிறார்.

    கவர்னரின் இந்த திடீர் டெல்லி பயணத்திற்கு காரணம் என்ன என்று அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. அவர் வழக்கமாக டெல்லி செல்லும் பயணம்தான் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனாலும், 4 நாட்கள் பயணமாக திடீரென டெல்லி சென்றுள்ள கவர்னர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னரின் 4 நாட்கள் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
    • பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழலில், இந்தியப் படைகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் ஆகியோர் கையில் தேசியக் கொடி ஏந்தி பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பேரணி நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதியபிரிவை சேர்ப்பதற்காக இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    • மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்‌.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.

    சென்னை:

    கட்டணத்துடன் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா டிசம்பர் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்து இருந்தார்.

    தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதியபிரிவை சேர்ப்பதற்காக இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கல்வி நிறுவனம், சங்கம், குழு மம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மைதானங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் (அனுமதி கட்டணத்தில்) கேளிக்கை வரி வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மசோதா கடந்த டிசம்பர் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.

    • கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
    • பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அதிரடியாக இந்திய ராணுவம் அழித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அதிரடியாக இந்திய ராணுவம் அழித்துள்ளது.

    இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாரத தாய் வாழ்க. ஆபரேஷன் சிந்தூர். இது வெறும் தொடக்கம் தான்! என்று தெரிவித்துள்ளார்.

    • ஸ்டாலின் ஆட்சி சமூகநீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
    • சுயாட்சியை பொறுத்தவரை வாக்காளர்கள்தான் நாயகர்கள்.

    சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா என்ற தலைப்பில் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

    இந்த பாராட்டு விழாவில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பொதுவாக எனக்கு பாராட்டு விழா என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

    விழாவுக்கு ஒப்புக் கொண்டதே தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று தீர்ப்புதான்.

    ஸ்டாலினின் ஆட்சி சமூக நீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும். சுயாட்சியை பொறுத்தவரை வாக்காளர்கள்தான் நாயகர்கள்.

    மக்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் தகுதிப்படுத்திக் கொள்ள கடுமையக உழைப்பேன்.

    ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக் கெடு நிர்ணயித்தது முக்கியத்துவம் வாய்ந்தது. இனி மசோதாவை நிறுத்தி வைத்தால் மாநில அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

    முதலமைச்சராகி மக்களுக்குத் தேவையான திட்டங்களை தீட்டினால், After all மத்திய அரசின் ஏஜெண்டாக நியமிக்கப்பட்ட, Temporary-அ தங்கி இருக்கிற ஒரு ஆளுநர் அவைகளை தடுத்து நிறுத்த முடியும் என்றால், மக்கள் போடுகிற ஓட்டுக்கு என்ன மரியாதை ?

    பிரதமரின் உரிமைகளை குடியரசுத் தலைவர் எடுத்துக் கொண்டால் சும்மா இருப்பார்களா ?

    ஆளுநர் தமிழ்நாட்டிலேயே தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட்.

    திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு, இளைஞர்கள் சிறந்த வேலை வாய்ப்பை பெற உழைக்கிறோம்.

    அறிவியலை மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும், மூட நம்பிக்கைகளை கற்றுத் தரும் இடமாக கல்விக்கூடம் இருக்கக்கூடாது.

    இளைஞர்கள் தங்கள் ரோல் மாடலை சமூக வலைத்தளங்களில் தேட வேண்டாம்.

    படிக்காமலேயே பெரிய ஆளாகிவிடலாம், யூடியூப் உள்ளிட்டவற்றில் சம்பாதிக்கலாம் என சொல்வார்கள் அந்த வலையில் சிக்கிவிடாதீர்கள்.

    கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து. உலகம் மிகப்பெரியது. அதைப்பார்க்க கல்வி என்ற கண்ணாடி வேண்டும். சாதி, மதம் என்று சுருங்கி விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×