என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆளுநர் வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை - எடப்பாடி பழனிசாமி
- தவறான தகவல்கள் உள்ள உரையை ஆளுநர் எவ்வாறு வாசிப்பார்? ஆளுநர் வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உயர்கல்வி பயில்பவர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது.
இந்நிலையில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஆளுநர் வெளியேறியதை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக்கூறி பேரவையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டம், ஒழுங்கு விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததாகக்கூறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆளுநர் மீது தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
* அமைச்சரவை தயாரித்து வழங்கிய உரையில் உள்ள தவறை ஆளுநர் சுட்டிக்காட்டுகிறார்.
* தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.
* தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் 55% அதிகரித்துள்ளது என்பதை ஆளுநர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார்.
* தவறான தகவல்கள் உள்ள உரையை ஆளுநர் எவ்வாறு வாசிப்பார்? ஆளுநர் வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை.
* புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆவணமாகவே உள்ளன. பெரும்பாலான ஒப்பந்தங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
* தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உயர்கல்வி பயில்பவர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
* ஆளுநர் உரையில் முதலமைச்சர் தனது கருத்துக்களையும் பதிவு செய்கிறார்.
* ஆளுநர் குறித்து விமர்சனம் செய்வது முறையல்ல. அ.தி.மு.க. அதனை செய்தது இல்லை.
* தவறான உரையை வாசிக்க மாட்டேன் என ஆளுநர் சொல்வது நியாயம். தனது தவறை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
* ஆளுநர் மீது தவறான பிம்பத்தை உருவாக்க தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






