search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Regupathy"

    • பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க எந்த தடையும் கிடையாது.
    • துணைவேந்தர் பதவி 3 ஆண்டுகள்தான். அதை தனக்கு வேண்டியவர்களுக்கு 4 ஆண்டு என பதவி நீட்டிப்பு வழங்குகிறார்.

    சென்னை:

    சென்னை ஓட்டேரியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி தனது கைப்பாவையாக கவர்னர் ஆர்.என்.ரவியை பயன்படுத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஜனநாயகத்தில் அதை நாங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இறுதி வெற்றி இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும். அப்போது யார்-யாரெல்லாம் இன்றைக்கு பழிவாங்குகிற நடவடிக்கையில் ஈடுபட்டார்களோ? அவர்கள் மீது என்ன பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நிச்சயமாக மனிதாபிமானம் பார்க்க மாட்டோம்.

    நிச்சயமாக தகுந்த நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார்.

    கே: பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கலாம் என்ற சூழலில் கவர்னர் டெல்லி சென்று விட்டாரே? பொன்முடி பதவி ஏற்பு எப்போது நடைபெறும்?

    ப: கவர்னர் இன்றைக்கு தான் சென்னை வருகிறார். பொன்முடி அமைச்சராக பதவி ஏற்க எந்த தடையும் கிடையாது. கவர்னர் இன்று பொன்முடி பதவி ஏற்புக்கு தேதி சொல்வார் என்று நம்புகிறோம். ஏதாவது விளக்கங்கள் கேட்டால் சட்டத்துறை உரிய விளக்கங்கள் தருவதற்கு சட்டத்துறை எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறது.

    தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு பதவி ஏற்பு நடத்தலாம்.

    கே: பி.எட். மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை கவர்னர் மாளிகையில் கேட்டிருப்பதற்கு எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளதே?

    ப: இன்றைக்கு வேந்தர்களுக்கு திடீர் திடீரென பதவி நீட்டிப்புகளை அவர் தந்து கொண்டிருக்கிறார். துணைவேந்தர் பதவி 3 ஆண்டுகள்தான். அதை தனக்கு வேண்டியவர்களுக்கு 4 ஆண்டு என பதவி நீட்டிப்பு வழங்குகிறார்.

    ஏதோ அவர் ஒரு தனி ராஜ்ஜியம் நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு தனி ராஜ்ஜியம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சரே குட்கா வியாபாரத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது.
    • அண்ணாமலை பா.ஜ.க.வில் உள்ளவர்களிடம் போதைப்பொருள் நடமாட்டத்தை முதலில் தடுக்கட்டும்.

    நாகர்கோவில்:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நாகர்கோவில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    போதைப்பொருட்களைத் தடுப்பதற்காக 10.08.2022 அன்று மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப்பொருளே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்தார்.

    கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சரே குட்கா வியாபாரத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது. அமைச்சராக இருந்தவர் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி தந்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டவர்கள் 14 பேருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தங்கள் கட்சியில் சேர்த்துள்ளது பா.ஜ.க.

    இந்தியாவிலே பா.ஜ.க.வில்தான் இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் உறுப்பினர்களாக அதிகம் இருக்கிறார்கள்.

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத்தில் தான், இன்றைக்கு போதைப்பொருள் நடமாட்டம் என்பது அதிகமாக உள்ளது. இப்படி எல்லாவற்றிற்கும் உடந்தையாக இருந்துவிட்டு, மற்றவர்கள் மீது பழிபோடுவதற்கு பெயர் தான் மோடி பார்முலாவா? என கேட்க விரும்புகிறோம்.

    ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, வட கிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் பயிரிடப்படுவதாகத் தகவல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல, தமிழ்நாட்டு மக்கள் மீது தேர்தலுக்காக பழி போடுவதை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.

    2019-ல் 11,418 கிலோ, 2020-ல் 15,144 கிலோ, 2021-ல் 20,431 கிலோ, 2022-ல் 28,381 கிலோ, 2023-ல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    2022-ல் 2,016 வழக்குகள் போடப்பட்டதில் 1,916 வழக்குகள் அதாவது 80 சதவீத வழக்குகளில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 418 வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர்.

    2023-ல் 3,567 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 2,988 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது, 579 வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர்.

    தமிழ்நாட்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தண்டனை பெற்றுத்தருவதில் தயக்கம் காட்டுவது கிடையாது. வருங்கால சந்ததியினரைப் பாழாக்கிவிடும் என்பதால் போதைப்பொருட்களைத் தடுப்பதற்கு முழுக் கவனம், முழு சக்தியையும் செலுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

    பா.ஜனதாவைச் சேர்ந்த சரவணன், குமார் என்ற குணசீலன், மணிகண்டன், சத்யா என்ற சத்யராஜ், சென்னை 109-வது வட்ட தலைவர் ராஜேஷ், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய நாராயணன், செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி, தாழ்த்தப்பட்டோர் பிரிவு மண்டல தலைவர் மணிகண்டன்,

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. மாவட்ட துணைத் தலைவர் ஆனந்த ராஜேஷ், காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நலன் அபிவிருத்தி பிரிவு செயலாளர் ராஜா, பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் லிவிங்கோ அடைக்கலராஜ்,

    தஞ்சாவூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் சிதம்பரம் என்ற குட்டி, விவசாய பிரிவு மாநிலச்செயலாளர் ராஜா, மதுரை நகர இளைஞர் பிரிவு செயலாளர் காசிராஜன் ஆகிய 14 பேர் மீது போதைப்பொருள் தொடர்பாக 23 வழக்குகள் உள்ளது.

    அண்ணாமலை பா.ஜ.க.வில் உள்ளவர்களிடம் போதைப்பொருள் நடமாட்டத்தை முதலில் தடுக்கட்டும். அதே போல் குஜராத்திலும் தடுக்கட்டும். பா.ஜனதா ஆளும் பிற மாநிலங்களிலும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கட்டும். அதன் பிறகு அவர் தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவதை பார்க்கட்டும்.

    போதைப்பொருள் கடத்துவது குறித்து தி.மு.க.விற்குத் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. எங்களுடைய நோக்கம் அதைத் தடுக்கவேண்டும் என்பதுதான். போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அண்ணாமலைக்கு வேண்டுமானால் தகவல் தெரிந்திருக்கும். அதை அவர் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

    தி.மு.க.வில் இருக்கும் உறுப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தால் உடனடியாக அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கிவிடுகிறோம். குற்றப் பின்னணி உடையவர்களைக் கட்சியில் வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் தி.மு.க.விற்கு என்றும் கிடையாது.

    இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இல்லம் தேடி குட்கா என பேசியுள்ளார். ஆனால் அவர் மீதே வழக்கு உள்ளது என்பதை மறந்துவிட்டு பேசியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
    • ஆன்லைன் ரம்மி விளையாடி 4 மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது அவர் கூறியதாவது

    சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக நிராகரிக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைன் ரம்மி திறன் மேம்பாட்டு விளையாட்டு என கூறி ஆளுநர் நிராகரித்துள்ளார். திறமையின் அடிப்படையில் விளையாடக்கூடிய விளையாட்டு ஆன்லைன் ரம்மி இல்லை.

    ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சட்ட மசோதா வரும் பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும். இந்த சட்ட விஷயத்தில் ஆளுநர் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளித்துள்ளோம். ஆன்லைன் ரம்மி விளையாடி 4 மாதத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 12 பேர் உயிழப்புககு யார் காரணம்?

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

    • தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.
    • ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு

    சென்னை:

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ரகுபதி கூறியதாவது:-

    தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். அது நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது நீதிமன்றம், சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி தள்ளுபடி செய்யவில்லை.

    வேறு சில காரணங்களை சொல்லி அதாவது இதில் கூறப்பட்டுள்ள காரணங்கள் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நீங்கள் புதிய சட்டம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி சட்டமன்றத்துக்கு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது.

    அதன்படி இந்த புதிய சட்டம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு. நீங்கள் புதிய சட்டம் இயற்றுங்கள் இதில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு இயற்றுங்கள் என்று சொல்கிற போது அதை அதிகாரம் இல்லை என்று கூறி நீக்க எந்த அடிப்படையில் கவர்னர் நீக்கி இருக்கிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை.

    அதைப்பற்றி தெளிவாக அவர் என்ன அனுப்பி இருக்கிறார் என்பதை கோப்புகளை படித்து விட்டு தெளிவான விடையை நிச்சயமாக முதலமைச்சர் தருவார்.

    இந்த மசோதா 2-வது முறை அல்ல, முதல் முறையாக திருப்பி அனுப்பி உள்ளார்கள். இதற்கு முன்பு சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு பதில் சொல்லி இருந்தோம்.

    இதை திருப்பி சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதை மறுப்பதற்கு அவருக்கு வாய்ப்பே கிடையாது. அது தான் சட்டம்.

    கேள்வி: கவர்னர் திருப்பி அனுப்பி உள்ள மசோதாவுடன் ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறாரே?

    பதில்: நான் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று தான் சென்னை வந்தேன். கவர்னர் கடிதம் அனுப்பி இருக்கிறாரா? என்பதெல்லாம் தெரியாது. அவர் அனுப்பியதை படித்து பார்த்த பிறகு தான் எதையும் தெளிவாக சொல்ல முடியும். நானாக எதுவும் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது.
    • கவர்னர் கேட்கும் கேள்விகளுக்கு தான் நாங்கள் பதில் கூற முடியும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இணைய வழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி, போகோ இவற்றை தடை செய்தல் ஒழுங்குமுறைபடுத்துதல் அவசரகால சட்டத்தின் கால வரையறை நேற்றோடு முடிந்து விட்டது. அவசர சட்டத்திற்கு கவர்னர் ஏற்கனவே ஒப்புதல் தந்தார். அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    கவர்னர் இந்த சட்டத்தில் சில சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் கவர்னருக்கு அனுப்பியது. நேற்று மாலைக்குள் கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதை தெளிவுபடுத்த தான் தற்போது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

    ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் முதல் உரையிலேயே மிகத்தெளிவாக தமிழக அரசு விளக்கியுள்ளது. 99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி, போகோ, இணைய வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் இவைகள் ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. அந்த கடமையை தான் தமிழக அரசு சட்டமாக இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. கவர்னர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம். காலதாமதம் ஏற்படுத்துவதற்கான அவசியம் கிடையாது. ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும்.

    சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். கவர்னர் ஒப்புதல் அளித்த உடன் சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த முடியும் அதற்கு நாங்களும் தயாராக உள்ளோம். கவர்னர் கையெழுத்து போட்டு விட்டால் இதற்கு உயிர் வந்துவிடும்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லக்கூடிய சூழ்நிலையில் இல்லை. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம்.

    தற்போது வரை கவர்னரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. தற்போது அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும். அசம்பாவிதம் போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதை பொதுமக்களிடமே விட்டு விடுகிறோம்.

    கவர்னர் மீது வழக்கு போட முடியாது. கவர்னர் இந்த சட்டத்தில் கையொப்பம் இடவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அனைவருக்கும் தெரியும். ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. கவர்னர் கேட்கும் கேள்விகளுக்கு தான் நாங்கள் பதில் கூற முடியும். தெளிவான பதில்களை நாங்கள் ஏற்கனவே கவர்னருக்கு கூறியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×