என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"41.33% வாக்குகள், 210 இடங்கள்"... அரித்மெட்டிக் கணக்கு போட்டிருக்கிறார் பழனிசாமி - அமைச்சர் ரகுபதி!
- வருகிற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும் என அரித்மெட்டிக் கணக்கு போட்டிருக்கிறார் பழனிசாமி.
- இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா தவிர வேறு எந்தக் கட்சிகள் இருக்கின்றன?
பாஜகவோடு கூட்டணி வைக்கமாட்டோம் எனக்கூறிவிட்டு, மீண்டும் கூட்டணி வைத்திருப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"நாட்டு மக்களுக்காகச் சூழ்நிலை கருதி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தோம். பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை'' என்று 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் மதுரையில் நடந்த SDPI கட்சி மாநாட்டில் வீர வசனம் பேசிய பழனிசாமி, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதற்கு நியாயம் கற்பிக்கப் பொதுக்குழுவில் புலம்புவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
"அடுத்த 100 நாட்களில் திமுக அமைச்சர்கள் பத்திரமான இடத்துக்குப் போவார்கள்'' என ஜோதிடம் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. தன்னுடைய உறவினர்கள் வீட்டில் நடந்த இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து போய் அதிமுகவை அமித்ஷாவிடம் பத்திரமாக அடமானம் வைத்த பழனிசாமி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?
"2019 எம்பி தேர்தலில் 39 நாடாளுமன்றத் தொகுதியில் ஒன்றில்தான் வென்றோம், அப்போது நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்றோம்'' என புள்ளிவிவரம் சொல்கிறார் பழனிசாமி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-களால் ஆட்சிக்கு ஆபத்து என்றதும் அவர்களைத் தகுதிநீக்கம் செய்தார்கள். அந்தத் தொகுதிகளுக்கும் சேர்த்து அப்போது இடைத் தேர்தல் நடைபெற்றது. அறுதிப் பெரும்பான்மையை இழந்துவிடுவோமோ, ஆட்சி கவிழ்ந்துவிடுவோமோ என அஞ்சி அந்த 9 தொகுதிகளில் மட்டுமே குறியாக வேலை பார்த்து வென்றார்கள்.
"நான் ஏழாவது பாஸ்னே. நீங்க எஸ்.எஸ்.எல்.சி ஃபெயிலுனே. பாஸ் பெருசா ஃபெயில் பெருசா'' என செந்தில் காமெடி போலப் பேசியிருக்கிறார் பழனிசாமி. "2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளை திமுகதான் வென்றது. ஆனால், நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் 10 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவே அதிக வாக்குகள் பெற்றது. அப்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வாங்கிய வாக்குகள் இரண்டையும் சேர்த்தால் 41.33 சதவிகிதம். இதனைக் கணக்கு போட்டுப் பார்த்தால் 84 சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறோம். எனவே, வருகிற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும்'' என அரித்மெட்டிக் கணக்கு போட்டிருக்கிறார் பழனிசாமி.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுக தனித் தனியாகக் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, பன்னீர்செல்வம். தமாகா, புதிய நீதிக் கட்சி, ஐ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இடம்பெற்றன. இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா தவிர வேறு எந்தக் கட்சிகள் இருக்கின்றன? அன்றைக்கு அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்.டி.பி.ஐ விலகிவிட்டது. தேமுதிகவின் நிலை உறுதியாகவில்லை. நிலைமை இப்படியிருக்க 2024 நாடாளுமன்றத் தேர்தல் 41.33 சதவிகித கணக்கு எப்படிப் பொருந்தும்? கணக்குப் பிள்ளை பழனிசாமிதான் பதில் சொல்ல வேண்டும்?" எனக் குறிப்பிட்டுள்ளார்.






