என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nitish Kumar"

    • அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றார்.
    • முதல் மந்திரி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்காக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீகார் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி நிதிஷ்குமார் கூறியதாவது:

    அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்காக பீகார் இளைஞர் ஆணையத்தை அமைக்கலாம் என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளித்தல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அதிகாரம் பெற்ற, திறமையானவர்களாக மாற்ற ஆலோசனைகள் வழங்குவதே இந்த ஆணையத்தின் நோக்கம்.

    மது, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை தடுக்க திட்டங்கள் வகுப்பதும் ஆணையத்தின் பணிகளாகும்.

    மாநிலத்தில் அதிக பெண்கள் பணியிடத்தில் நுழைந்து ஆட்சி, நிர்வாகத்தில் பெரிய பங்கு வகிப்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

    • என்டிஏவில் ஐக்கியமாயுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் சிம்மாசனத்தை தக்க வைப்பதில் தீவிரமாக உள்ளார்.
    • 1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பலனடைவார்கள்

    பீகாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் ஆர்ஜேடி - காங்கிரசின் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பல முறை கூட்டணி தாவலுக்கு பின் இறுதியில் பாஜகவின் என்டிஏவில் ஐக்கியமாயுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் சிம்மாசனத்தை தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    அந்த வகையில் மாநிலத்தில் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ஆகியவற்றை ரூ.400 இல் இருந்து ரூ.1,100 ஆக முதல்வர் நிதிஷ் குமார் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்த ரூ.700 அதிகரிப்பு என்பது மாநிலத்தில்  1 கோடியே 9 லட்சத்து 69 ஆயிரத்து 255 பேர் பலனடைவார்கள் என்று நிதிஷ் குமார் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இந்த ஓய்வூதிய உயர்வு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் மாதத்தில் 10 ஆம் தேதியில் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் நிதிஷ் குமார் விளக்கியுள்ளார்.

    • சாதி கணக்கெடுப்பில் இரண்டு மாதிரிகள் உள்ளன.
    • ஒன்று பா.ஜ.க. மாதிரி, இன்னொன்று தெலுங்கானா மாதிரி.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டம் ராஜ்கிரில் அரசியல் சட்ட பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நேற்று நடந்தது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:

    ஒரு காலத்தில் அமைதி மற்றும் நீதியின் பூமியாக பீகார் இருந்தது. இன்று இந்தியாவின் குற்ற தலைநகராக மாறிவிட்டது.

    மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஒருபோதும் உண்மையான சாதி கணக்கெடுப்பை நடத்தாது. அவர்கள் உண்மையான சாதி கணக்கெடுப்பை நடத்தும் நாளில், அவர்களின் அரசியலும் முடிவுக்கு வரும்.

    சாதி கணக்கெடுப்பில் இரண்டு மாதிரிகள் உள்ளன. ஒன்று பா.ஜ.க. மாதிரி, இன்னொன்று தெலுங்கானா மாதிரி. பா.ஜ.க. மாதிரியில், அதிகாரிகள் ஒரு மூடிய அறையில் கேள்விகளைத் தீர்மானிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் குழுவில் ஓபிசி, தலித் அல்லது பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் இல்லை.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு சாதி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. எதிர்காலத்தில் நாங்கள் எங்கு ஆட்சி அமைத்தாலும், இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்குவோம். அது பீகாரில் இருந்து தொடங்கும் என தெரிவித்தார்.

    • ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை விளம்பரப்படுத்த வலியுறுத்தினார்.
    • நீங்கள் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்

    பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் வர உள்ளது. இதில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கும் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது.

    இந்நிலையில் பீகார் விஜயம் செய்துள்ள பிரதமர் மோடி பாஜக தலைவர்களுடன் கூட்டத்தில் பங்கேற்றார்.

    அப்போது, "தேர்தல் நெருங்கும்போது, சிலர் வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டு, தேர்தலுக்குப் பிறகு திரும்பிவிடுவார்கள். இது கட்சியில் உங்கள் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது" என்று பிரதமர் மோடி பாஜக தலைவர்களிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும், "ஒரு கட்சியில் பொறுமை என்பது மிகப்பெரிய சொத்து. உங்களிடம் பொறுமை இருந்தால், நீங்கள் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள்" என்று அவர் கூறினார்.

    வரவிற்கும் தேர்தலில், ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை விளம்பரப்படுத்தவும், அடிமட்டத் ஊழியர்கள் அளவில் கட்சியை வலுப்படுத்தவும் வலியுறுத்தினார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    மகா கூட்டணியுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த பிறகு, கடந்த ஆண்டு ஜனவரியில் ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் ஒன்பதாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். அடிக்கடி கூட்டணி தாவுவதாக அவர் மீது விமர்சனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.   

    • 27 பந்தில் அரைசதமும், 35 பந்தில் சதமும் விளாசினார்.
    • 7 பவுண்டரிகள், 11 சிக்சர்கள் என 94 ரன்கள் ஓடாமலேயே எடுத்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 209 ரன்கள் குவித்தது. பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்கியது.

    அந்த அணியின் தொடக்க வீரரான 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்தில் 7 பவுண்டரி, 11 சிக்சர் விளாசினார். 94 ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்கர் மூலமாகவே கிடைத்தன. இவரது ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் 15.5 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

    17 பந்தில் அரைசதம் அடித்த சூர்யவன்ஷி, 35 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம், குறைந்த பந்தில் சதம் அடித்த இந்திய வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தார்.

    14 வயதில் பயமறியாமல் அதிரடியாக விளையாடிய அவரை கிரிக்கெட் உலகம் பாராட்டி வருகிறது. சூர்யவன்ஷி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், சூர்யவன்ஷியின் திறமையை பாராட்டி 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த வருடம் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது தந்தையை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபாரமான ஆட்டத்திற்குப் பிறகு போன் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். மாநில அரசு அவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும். எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாடி புதிய சாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • பீகாரில் ஊழலை நிறுவனமாக்கியதற்காக நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும்.
    • முதல்வர் மாநில அரசின் நிதிகளை அவருடைய தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறார்.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் ஊழலை நிறுவனமாக்கிவிட்டார். அரசு நிதிகள் இந்த வருடம் இறுதியில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கான அரசியல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-

    பீகாரில் ஊழலை நிறுவனமாக்கியதற்காக நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் மாநில அரசின் நிதிகளை அவருடைய தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறார். பெண்கள் அரசுடன் தொடர்பு கொள்வதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட மகிலா சம்வாத் என்ற முன்முயற்சி திட்டம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முன்முயற்சி திட்டத்திற்காக அமைச்சரவை 225 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மாநில அரசு இந்த பொது நிதியை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துகிறது.

    மாநில பெண்களுக்கு உறுதியான எதுவும் களத்தில் இல்லை. ஆனால் பிரசாரத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது.

    டிசம்பர் 2024-ல் இருந்து கட்டுமான செயல்பாட்டிற்காக 76,622 கோடி ரூபாப் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில், முதன்முறையாக அரசு இந்த பணிகளுக்காக சர்வதேச அளவிலான டெண்டர்களை கோரியுள்ளது. உலகளாவிய டெண்டருக்கான காணரம் என்ன?.

    மேலும், தொடர்பு சாலைகள் இல்லாமல் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பல கட்டிடங்கள் தயாராக உள்ளன, ஆனால் சம்பந்தப்பட்ட துறைகள் அவற்றை கையகப்படுத்தவில்லை. (புதிய) மருத்துவமனை கட்டிடங்களில் உபகரணங்கள் அல்லது மருத்துவர்கள் இல்லை. 'ஹர் கர் நல் கா ஜல்' திட்டத்திற்காக பல கோடிகள் செலவிடப்பட்டன. ஆனால் தண்ணீர் விநியோகம் இல்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    • பீகாரின் முதல் மந்திரியாக 5 மாதங்கள் மட்டுமே நிதிஷ்குமார் இருப்பார்.
    • பா.ஜ.க. ஒருபோதும் நிதிஷ்குமாரை மீண்டும் முதலமைச்சராக விடாது என்றார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது.

    இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கோட்டையாக உள்ள ரகோபூர் தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளேன். கட்சி முடிவு செய்தால், நான் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவேன்.

    தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ரகோபூரில் இருந்து போட்டியிட வேண்டும் என கட்சி விரும்பினால் நான் போட்டியிடுவேன்.

    பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொரோனா கால ஆட்சியால் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். நிதிஷ்குமார் தனது கடைசி அரசியல் இன்னிங்சில் இருக்கிறார்.

    பா.ஜ.க. ஒருபோதும் நிதிஷ்குமாரை மீண்டும் முதலமைச்சராக விடாது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்காது.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ்குமார் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது. எனவே அவர் பீகாரின் முதல் மந்திரியாக 5 மாதங்கள் மட்டுமே இருப்பார் என தெரிவித்தார்.

    • பீகார் மாநில மக்கள் நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்தலை தடுத்து நிறுத்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு தவறிவிட்டது.
    • பீகார் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை உயர்வுக்கு, பல வருடங்களாக முதல்வராக இருந்து வரும் நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட், நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வேலைவாய்ப்பின்மை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதுஎனக் குற்றிம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பான சச்சின் பைலட் கூறியதாவது-

    பீகார் மாநில மக்கள் நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்தலை தடுத்து நிறுத்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு தவறிவிட்டது. அதுபோல இளைஞர்களுக்கு வேலை வழங்குவதிலும் தோல்வியடைந்து விட்டது. பீகார் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை உயர்வுக்கு, பல வருடங்களாக முதல்வராக இருந்து வரும் நிதிஷ் குமார் பொறுப்பேற்க வேண்டும்.

    பீகாரில் நியாயமாகவும், சர்ச்சைகள் இல்லாமலும் நடத்தப்படும் தேர்வுகள் அரிதாகவே உள்ளன. அவரது அரசாங்கத்தால் இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியவில்லை. மாநிலத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் ஏழைகளுக்கு எதிரானது மற்றும் இளைஞர்களுக்கு எதிரானது.

    சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரின் மேம்பாட்டிற்கும் மேம்பாட்டிற்கும் பாடுபடும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. பீகார் மற்றும் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் நாங்கள் சமமாக அக்கறை கொண்டுள்ளோம்.

    இவ்வாறு சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதிஷ் குமாரின் பங்களிப்பு அளப்பரியது.
    • கூட்டணியில் ஒரு நங்கூரமாக செயல்பட்டு பிரதமர் நரேந்திர மோடியின் கைகளை வலுப்படுத்தி வருகிறார்.

    பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாரை துணை பிரதமராக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஷ்வினி குமார் சவுபே தனது கருத்தை தெரிவித்துள்ளார். இவர் பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் மந்திரி சபையிலும் இடம் பிடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக அஷ்வினி குமார் சவுபே கூறுகையில் "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதிஷ் குமாரின் பங்களிப்பு அளப்பரியது. கூட்டணியில் ஒரு நங்கூரமாக செயல்பட்டு பிரதமர் நரேந்திர மோடியின் கைகளை வலுப்படுத்தி வருகிறார். என்னுடைய தனிப்பட்ட விருப்பம் நிதிஷ் குமார் துணை பிரதமராக வேண்டும். என்னுடைய ஆசை நிறைவேறினால் பாபு ஜக்விஜயன் ராமிற்குப் பிறகு பீகார் 2ஆவது துணை பிரதமரை பார்க்கும்." என்றார்.

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த ஜக்விஜயன் ராம் இதற்கு முன்னதாக துணை பிரதமாக பதவியில் இருந்துள்ளார். 

    • பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டும் அவர் இந்த தர்ம காரியத்தை செய்தது தெரியவந்துள்ளது.
    • போர்வைகளை வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி டிரால்களுக்கு உள்ளாகி வருகின்றன.

    கொளுத்தும் வெயிலுக்கு பீகார் அமைச்சர் தனது தொகுதி மக்களுக்கு கம்பளிப் போர்வைகள் கொடுத்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.

    பீகாரில் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இவரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. நிதிஷ் குமார் அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த சுரேந்திர மேத்தா விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

    இந்நிலையில் 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை வாட்டி வதைத்து வரும் சுரேந்திர மேத்தா தனது பச்வாரா சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள அஹியாபூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 500க்கும் மேற்பட்ட கம்பளிப் போர்வைகளை விநியோகித்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டும் அவர் இந்த தர்ம காரியத்தை செய்தது தெரியவந்துள்ளது.

    தான் செய்த நற்காரியத்தில் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த மேத்தா, "உலகின் மிகப்பெரிய கட்சி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வோடு செயல்படும் பாஜகவின் 46வது நிறுவன தினத்தை முன்னிட்டு, பச்வாரா சட்டமன்றத் தொகுதியின் கோவிந்த்பூர்-2 பஞ்சாயத்தின் அஹியாபூர் கிராமத்தில் இன்று கொண்டாடப்பட்டு, மக்களுக்கு போர்வைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். அவர் போர்வைகளை வழங்கும் வீடியோக்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி டிரோல்களுக்கு உள்ளாகி வருகின்றன. 

    • காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
    • நாளை சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுவார்கள்

    பீகாரில் தனது கட்சி ஆட்சி அமைத்தால் வக்பு திருத்த மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    வக்பு திருத்த மசோதா மசோதா இந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நேற்று ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டமாக மாறியது. இதற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை பாஜகவின் இந்த மசோதா பறிக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

    இந்நிலையில் பீகார் எதிர்கட்சித் தலைவரும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் இந்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த வருட இறுதியில் பீகாருக்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் ஆர்ஜேடி ஆட்சிக்கு வந்தால் வக்பு மசோதா குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது, இந்த மசோதாவை பீகாரில் செயல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாநிலத்தில் அடுத்து அரசாங்கத்தை அமைத்தால், மசோதா குப்பைத் தொட்டியில் போடப்படும் வக்பு மசோதாவுக்கு எதிராக நாங்கள் உச்ச நீதிமன்றத்தையும் நாடியுள்ளோம். இன்று முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகிறார்கள், நாளை சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்படுவார்கள்என்று தெரிவித்தார்.

    மேலும் வக்பு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்தார். வக்பு மசோதாவுக்கு ஆதரவளித்ததால் நிதிஷ் குமார் கட்சியின் ஐந்து தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். 

    • வக்பு மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தன.
    • பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.

    இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.

    வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்தற்காக அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தப்ரேஸ் ஹசன். சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முகமது ஷாநவாஸ் மாலிக், அலிகாரைச் சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் முகமது தப்ரேஸ் சித்திக் , போஜ்பூரைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் முகமது தில்ஷான் ரெய்ன் மற்றும் முகமது காசிம் அன்சாரி ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தில், "வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு அளித்த ஆதரவு, மதச்சார்பற்ற விழுமியங்களை ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரிக்கும் என்று நம்பும் முஸ்லிம்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் வக்பு மசோதா, பிரிவு 370 ரத்து, முத்தலாக் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது. இது முஸ்லிம் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும்" என்று கூறியுள்ளார்.

    இது பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×