என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: பீகாரின் அடையாளம் ஆன நிதிஷ்குமார்: தேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதல் மந்திரி
- நிதிஷ்குமார் 2000-ல் பீகார் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
- அந்தப் பதவி காலம் 7 நாட்களே நீடித்தது.
பாட்னா:
பீகார் என்றாலே நிதிஷ்குமார், நிதிஷ்குமார் என்றாலே பீகார் என அழைக்கும் அளவுக்கு தனது பதவியை தக்க வைத்துள்ளதுடன், மக்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்த தலைவராக திகழ்கிறார்.
நிதிஷ்குமார் ஏற்கனவே 9 முறை பீகார் மாநில முதல் மந்திரியாக இருந்துவிட்டார். இந்த ஆண்டு 10-வது முறை பதவி ஏற்றுள்ளார். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், எந்த தேர்தலிலும் அவர் போட்டியிடவே இல்லை என்பதுதான்.
இந்த ஆண்டில் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக மாறி இருக்கிறது பீகார் சட்டசபைத் தேர்தல்.

பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி.யின் மகாபந்தன் கூட்டணியும் களம் கண்டன.
இந்த முறை வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் பீகாரில் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த சட்டசபைத் தேர்தலில் பீகாரில் 67.13 சதவீத வாக்குகள் பதிவானது.
சட்டசபை உறுப்பினராக இல்லாமல் இரு தசாப்தங்களாக முதல் மந்திரியாக இருக்கும் இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் நிதிஷ்குமார் மட்டுமே.
நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை 1977-ம் ஆண்டு முதன் முதலில் ஜனதா கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு தோல்வி கிடைத்தது. அடுத்த தேர்தலிலும் தோல்வியை தழுவினார்.
1985-ம் ஆண்டில் ஹர்ணாத் தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றி வாகை சூடினார்.
5 முறை மக்களவை பதவி, 10 முறை முதல் மந்திரி பதவி, காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் மாறி மாறி கூட்டணி என பீகார் தன் கைக்குள் இருப்பதை உறுதி செய்தவர்.
நிதிஷ்குமார் 2000-ம் ஆண்டு பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியாக முதல் முறை பதவியேற்றார். அந்தப் பதவி காலம் 7 நாட்களே நீடித்தது. அதன்பின், 2005-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 10 முறை முதல் மந்திரி பதவியை அலங்கரித்துள்ளார்.
இத்தனை ஆண்டு காலம் பீகார் மாநில முதல் மந்திரியாக தனது அரியணையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தக்கவைத்துள்ளார் என்பதே இவரது சாமர்த்தியம். வாஜ்பாயி அரசாங்கத்தில் மத்திய மந்திரி பதவி வகித்தவர்.

இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த நிதிஷ்குமார் மீது அம்மாநில மக்களின் நம்பிக்கையும் நல்லெண்ணமும் குறையவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.






