என் மலர்
இந்தியா

இதில் என்ன தவறு?.. பெண் மருத்துவர் ஹிஜாபை இழுத்துப் பார்த்த நிதிஷ் குமாருக்கு மத்திய அமைச்சர் ஆதரவு
- பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
- "நிதிஷ் குமார் ஹிஜாப்பைத் தொட்டதற்கே இப்படியா? அவர் வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?"
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பொது நிகழ்ச்சி ஒன்றில் பெண் மருத்துவர் ஒருவரின் ஹிஜாப்பை கீழே இழுத்து, அவரது முகத்தை பார்த்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, சுமார் 1,200 ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி பீகாரில் நடைபெற்றது. அப்போது ஒரு பெண் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்த நிதிஷ் குமார், திடீரென அந்தப் பெண்ணின் ஹிஜாபை கீழே இழுத்து முகத்தைக் பார்த்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கிரிராஜ் சிங் கூறுகையில், "அவர் செய்ததில் என்ன தவறு? ஒருவர் பணி நியமன ஆணை பெற வரும்போது, தனது முகத்தைக் காட்ட ஏன் பயப்பட வேண்டும்? வாக்களிக்கச் செல்லும்போது நாம் முகத்தைக் காட்டுவதில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக உத்தரப் பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், "நிதிஷ் குமார் ஹிஜாப்பைத் தொட்டதற்கே இப்படியா? அவர் வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?" என்று மிக மோசமான முறையில் கருத்து தெரிவித்தார். அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் நிதிஷ் குமாரின் மனநிலை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளன. மெகபூபா முப்தி மற்றும் ஓமர் அப்துல்லா போன்ற தலைவர்களும் நிதிஷ் குமாரின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






