என் மலர்
இந்தியா

கேரளாவில் 16 இடங்களில் போட்டியிடுகிறது காங்கிரஸ்: கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை, இரண்டு மக்களவை இடங்கள் ஒதுக்கீடு.
- மற்ற இரு கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்துள்ளது.
கேரளாவில் பிரனராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது.
கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிடும் என அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் தலைவருமான வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மூன்று இடங்கள் கேட்ட நிலையில், இரண்டு இடங்கள் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மலப்புரம், பொன்னாணி ஆகிய இடங்களில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா காங்கிரஸ் (ஜே) கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி கோட்டயம் தொகுதியில் போட்டியிடும் எனவும், கொல்லம் தொகுதியில ஆர்எஸ்பி போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள் என சதீசன் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அடுத்த முறை காலியாகும் மாநிலங்களவை எம்.பி. தொகுதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட்டார். தற்போது வயநாட்டில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜாவின் மனைவி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி அந்த தொகுதியில் நிற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.






