search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்துகேட்பு கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியபோது எடுத்தபடம்
    X
    புயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்துகேட்பு கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியபோது எடுத்தபடம்

    முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படும்- நிர்மலா சீதாராமன்

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு ரேசன் கார்டு இல்லாமல் 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். #GajaCyclone #NirmalaSitharaman
    பேராவூரணி:

    கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நாகை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள், வீடுகளை இழந்த பொதுமக்கள், மற்றும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அரசின் சார்பில் புதிய வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிர்மலா சீதாராமன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து அவர் தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு புறப்பட்டு வந்தார். அவருடன் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.

    அங்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை கணக்கெடுத்து நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும் பாதி முறிந்து நிற்கும் தென்னை மரங்களையும் கணக்கெடுத்து நிவாரணம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    புதிய தென்னை கன்றுகளை வழங்க வேண்டும், விழுந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மந்திரி திட்டத்தில் புதிய வீடுகள் கட்டி தரப்படும். நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு ரேசன் கார்டு இல்லாமல் 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படும்.

    மேலும் மேற்கூரை இழந்த வீடுகளுக்கு மத்திய அரசு சார்பில் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து தார் பாய் வழங்கப்படும். தென்னை வாரியம் மூலம் இலவசமாக தென்னை கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிதி மந்திரியிடம் பரிந்துரை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவர் மல்லிப்பட்டினம் பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திக்க புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக பேராவூரணி பயணியர் மாளிகையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., பேராவூரணி கோவிந்தராசு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து அமைச்சர்களிடம் விவரங்களை அவர் கேட்டறிந்தார். #GajaCyclone #NirmalaSitharaman

    Next Story
    ×