search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boats damaged"

    கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான நிவாரண தொகை ரூ.1லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #GajaCyclone
    சென்னை:

    சட்டசபையில் இன்று கஜாபுயல் பாதிப்பு குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    கஜாபுயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் பயிர்களும் மரங்களும் விழுந்தன. வீடுகள் பெரும் சேதம் அடைந்தன. 78 ஆயிரத்து 584 ஹெக்டேரில் தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன. 23 ஆயிரத்து 141 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டப்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    20 ஆயிரத்து 357 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டன. 5 லட்சத்து 5 ஆயிரத்து 742 குடிசைகள் சேதம் அடைந்தன. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. இவை அனைத்தையும் சீரமைத்து மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

    கஜா புயல் பாதிப்பு பற்றி அறிந்ததும் உறவினர்கள் மூலம் நான் அந்த பகுதிகளை பார்வையிட சென்றேன். மழை மற்றும் வானிலை காரணமாக சில இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பாதிப்பின் தாக்கத்தை என்னால் அறிய முடிந்தது. அந்த மக்களுக்கான உதவிகளை உடனடியாக செய்வதற்காக அரசு சார்பில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டது.

    மின் இணைப்புகள் கொடுக்கும் பணி இரவு பகலாக நடந்தது. நிவாரண பணிகளில் தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மின் இணைப்பு வழங்கும் பணியில் 90 சதவீத பணிகள் முடிவடைந்திருக்கின்றன.

    பல்வேறு சூழ்நிலை காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டாலும் விரைவில் இந்த பணிகளை முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நிவாரண முகாமில் தங்கிய அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. சரிந்த தென்னை மரங்களை அகற்றவும், விவசாயிகள் மறு சீரமைப்புக்காக சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் அரசு மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான பணம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    11 லட்சத்து 66 ஆயிரம் பேர் இந்த புயலின் போது பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. புயல் நிவாரணம் பாதிப்புக்கு தகுந்த நிதியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். மத்திய அரசின் குழுவும் உடனே வந்து கணக்கீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மத்திய அரசின் நிதி உதவியும் 5 ஆண்டுகளில் 3 லட்சம் வீடுகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


    இந்த புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான நிவாரணம் ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    இதுபோன்று விவசாயிகளுக்கும் தேவையான நிவாரண உதவியை வழங்க அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்கும்.

    கஜா புயலின் போது இரவு-பகலாக மீட்பு பணிக்கு உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் அங்கேயே தங்கி இருந்து பணிகளை விரைவாக செய்ய உதவிய அமைச்சர்களுக்கும், நிவாரண நிதியாக நன்கொடை வழங்கியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கணக்கீட்டின்படி உரிய நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNCM #EdappadiPalaniswami
    கஜா புயலால் ஏராளமான பைபர் மற்றும் விசைப்படகுகள் சேதமடைந்ததால் இன்று 17-வது நாளாக காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    காரைக்கால்:

    கஜா புயல் கடந்த 16-ந் தேதி வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் புதுவை மாநிலம் காரைக்காலில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

    ஏராளமான பைபர் மற்றும் விசைப்படகுகள் சேதமடைந்தன. புயல் கரையை கடக்கும் முன்பே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால், பட்டினச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம மீனவர்கள் கடந்த 13-ந் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    கஜா புயல் கரையை கடந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். புயலால் சேதம் அடைந்த படகுகளுக்கு பதில் புதிய பைபர் படகுகள் வழங்க வேண்டும். இல்லையென்றால் படகுகளை முற்றிலும் சீரமைப்பதற்காக நிவாரண தொகையை முழு அளவில் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் புதுவை அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இது சம்பந்தமாக நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமியை மீனவர்கள் நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இருப்பினும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இன்று 17-வது நாளாக அவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் கடலூர், சிதம்பரம், மரக்காணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காரைக்காலுக்கு மீன்கள் வருகின்றன. இதனால் காரைக்காலில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


    கஜா புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார். #Gaja #GajaCyclone #Minister #jayakumar
    சென்னை:

    ‘கஜா’ புயலால் மீனவ கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘ஒக்கி’ புயலில் ஏற்பட்ட அனுபவங்களை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு, கஜா புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கடந்த 11-ந் தேதியே மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

    மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மீனவ கிராமங்களுக்கும் சென்று கண்காணித்தனர். மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

    கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 333 மீனவ கிராமங்களில் 4 ஆயிரத்து 926 விசைப்படகுகள், 18 ஆயிரத்து 364 நாட்டுப்படகுகள் கண்டிப்பாக படகுகள் நிறுத்தும் தளத்தில் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    அதனடிப்படையில் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாததால் எந்த மீனவர்களுக்கும் ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் நாட்டுப்படகுகள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் 200-க்கும் மேற்பட்ட படகுகள் கவிழ்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

    புயல் பாதித்த இடங்களில் பகுதியாக சேதமடைந்த படகுகள் எத்தனை? முழுமையாக சேதமடைந்த படகுகள் எவ்வளவு? என்பது குறித்த கணக்கெடுப்பு பணிகளை வருவாய்த்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.



    அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நிவாரணம் வழங்குவார். தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகளும் பாராட்டி உள்ளன. அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gaja #GajaCyclone #Minister #jayakumar
    ×