என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பரோட்டா-பீப் கறி திருவிழா.. தி கேரளா ஸ்டோரி 2வை வைத்து செய்யும் மலையாளிகள்
    X

    பரோட்டா-பீப் கறி திருவிழா.. 'தி கேரளா ஸ்டோரி 2'வை வைத்து செய்யும் மலையாளிகள்

    • மாட்டிறைச்சியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.
    • பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது

    சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'.

    கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது.

    வெளியான சமயத்தில் நாடு முழுவதும் இப்படம் பெரும் பதற்றத்தை இப்படம் ஏற்படுத்தியது.

    தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

    இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது. காமக்யா நாராயண் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாக உள்ளது.

    முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், இந்துப் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி ஊட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

    கேரளாவின் உணவு கலாச்சாரத்தில் 'பீப்-பரோட்டா' என்பது அனைத்து மதத்தினரிடையேயும் பிரபலமானது. அங்கு யாரும் யாருக்கும் கட்டாயப்படுத்தி உணவளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி சமூக ஊடகங்களில் கேரள மக்கள் இந்தப் படத்தின் காட்சியை விமர்சித்து வருகின்றனர்.

    கேரள சுற்றுலாத் துறை "No Beef With Anyone" (யாருடனும் எங்களுக்குப் பகை இல்லை) என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டரைப் பகிர்ந்துள்ளது.

    சிபிஐ(எம்) கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI மற்றும் மாணவர் அமைப்பான SFI ஆகியவை மாநிலம் முழுவதும் 'பீப் திருவிழா' நடத்தித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

    திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பீப் கறியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.

    கேரளாவின் மதச்சார்பற்ற பிம்பத்தைச் சிதைக்கவும், மத வெறுப்பைத் தூண்டவும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கேரளா மத நல்லிணக்கம் மற்றும் சட்ட ஒழுங்கிற்கு முன்மாதிரியான மாநிலம். இத்தகைய பொய்யான பரப்புரைகளை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், "பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது" என்று கூறியுள்ளார்.

    மேலும், படத்தின் முதல் பாகத்திற்கு தேசிய விருது வழங்கி பாஜக இத்தகைய படங்களை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

    கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், இது கருத்து சுதந்திரம் என்றும், முதல்வர் பினராயி விஜயன் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார்.

    கேரளாவின் கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தின் மீது இந்தப் படம் தாக்குதல் நடத்துவதாக பெரும்பான்மையானோர் கருதுகின்றனர்.

    இதற்கிடையே இந்த படத்துக்கு வாங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    Next Story
    ×