search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indians"

    • கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியவர்கள் சட்ட விரோதமாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 'டங்கி' என்ற திரைப்படத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்து வெளிச்சம் போட்டு காட்டினார்.

    கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு கால்நடையாகச் செல்லும் ஆவணமற்ற இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்தாண்டு ஜனவரி- ஜூன் காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியவர்கள் சட்ட விரோதமாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி தனது 'டங்கி' என்ற திரைப்படத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது குறித்து வெளிச்சம் போட்டு காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கனடா-அமெரிக்க எல்லைக் கடப்பைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் இப்போது அமெரிக்காவை அணுகுவதற்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த வழியைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை, மெக்சிகோ எல்லைப் பாதையைப் பயன்படுத்தும் வழக்கமான பாதையிலிருந்து ஊடுருவல்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

    • அதை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு உணவு அளிக்காமல் அடித்து துன்புறுத்துகிறது இந்த கும்பல்.
    • லாவோஸ் நாட்டில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம்

    தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே உள்ள லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களுக்காக அடிமைகளாக பயன்படுத்தப்பட்டு வந்த 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதிக சம்பளத்தில் ஐ.டி வேலை இருப்பதாக கூறி லாவோஸ் நாட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்ட இந்தியர்கள் பலர் சைபர் குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர் என்று சமீப காலமாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

    லாவோஸ் மற்றும் கம்போடியாவில் இது போன்ற மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 635 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, லாவோஸின் பொஹியோ மாகாணத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஐடி நிறுவன போர்வையில் இயங்கி வந்த டேட்டிங் செயலி மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளின் பின்னணியில் இதுபோன்று இந்தியர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டேட்டிங் செயலிகளில் பெண்களை போன்று புரொபைல் உருவாக்கி இந்தியாவில் உள்ளவர்களிடம் சாட்டிங் செய்து அவர்களை கிரிப்டோ மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளுக்கு இட்டுச் செல்வதே இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர்களின் வேலை.

     

    அதை அவர்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு உணவு அளிக்காமல் அடித்து துன்புறுத்துகிறது இந்த கும்பல். இதுதொடர்பாக இந்தியத் தூதரகத்துக்குச் சிலர் தகவல் அளித்த நிலையில் உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

     

    மீட்கப்பட்டவர்களில் 30 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 17 பேரை இந்தியாவுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், லாவோஸ் நாட்டில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. 

    • 70,000 வெளிநாட்டு மாணவர்களின் பெர்மிட் இந்த வருட இறுதிக்குள் முடிவடைய உள்ளது
    • இந்த தீர்மானமானது வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    கடனாவில் மக்கள் தொகை அதிகரிப்பு, கனேடியர்களுக்கு வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் தற்காலிக வேலைகளுக்காக அதிகளவில் குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

    கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக நேற்று முன் தினம் அந்நாட்டுப் பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதன்படி கனடாவுக்கு வரும் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, 25 சதவீதம் வரை நிரந்தரக் குடியிருப்பு அனுமதியைக் குறைப்பது, படிப்பதற்காக மாணவர்கள் பெர்மிட், வேலைக்கான பெர்மிட் பெறுவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த இந்த தீர்மானமானது வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்த முடிவு தங்களின் எதிர்காலக் கனவுகளுடன் கனடாவில் படித்து வரும் கிட்டத்தட்ட 70,000 வெளிநாட்டு மாணவர்களில் பலரின்  பெர்மிட் இந்த வருட இறுதிக்குள் முடிவடைய உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையில் இருப்பது இந்திய மாணவர்களே ஆவர்.

    எனவே ஜஸ்டின் ட்ருடோ அரசின் இந்த முடிவை எதிர்த்து வெளிநாட்டு மாணவர்கள் பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.  பிரின்ஸ் எட்வார்ட் மாகாணத்தில் உள்ள சட்டமன்ற கட்டடத்தின் வெளியே இந்திய மாணவர்கள் திரண்டு அரசின் இந்த திடீர் முடிவை எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் ஓன்டாரியோ, மானிடோபா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறனர். ஒர்க் பெர்மிட்களின் கால அளவை  அதிகரிப்பது, நிறைந்த குடியுரிமை கிடைப்பதற்கு சிக்கல் இல்லாத நடைமுறையை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை அவர்கள் தங்களின் கோரிக்கைகளாக முன்வைத்து போராடி வருகின்றனர்.

     

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கை துண்டிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை வழங்காமல் அப்படியே சாலையோரத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்
    • வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இத்தாலி நாட்டில் உள்ள வெரோனா மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்களில் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடந்தப்பட்ட 33 இந்திய விவசாயப் பணியாளர்களை அங்கிருந்து இத்தாலிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

    கடந்த ஜூன் மாதம் அந்த பகுதியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான சத்தன் சிங் எனபரின் கை பணியின்போது இயந்திரத்தில் சிக்கி துண்டானது. அவர்க்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் அவரை அப்படியே சாலையோரம் ரத்த வெள்ளத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்.

     

    இதனைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இத்தாலிய பண்ணைகளில் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.360 கூலியாக வழங்கப்பட்டு வந்துள்ளது.

    ரூ.15 லட்சம் கட்டினால் இத்தாலியில் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித்தருவதாக 2 இந்திய ஏஜெண்டுகள் இவர்களை ஏமாற்றி சீசனல் ஒர்க்கர் பெர்மிட்டில் அங்கு அழைத்துச்சென்று வேலைக்கு சேர்த்துள்ளனர்.

    இந்த ரூ.15 லட்சம் தொகையை முழுமையாக கழிக்கும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது. மேலும் கூடுதலாக ரூ.12 லட்சம் செலுத்தினால் நிரந்தர பெர்மிட் வாங்கித்தருவதாகவும் இவர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றியுள்ளனர். தற்போது அப்படி ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக 33 இந்தியர்களை மீட்ட இத்தாலிய அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலை வாய்ப்பு மற்றும் குடியிருப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

     

    • தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தோல்வியால் மனமுடைந்து வெளியேறினர்
    • தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று இந்தியர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இறுதிப்போட்டிவரை எந்த மேட்சிலும் இரண்டு அணிகளும் தோல்வியடையாமல் முன்னேறி வந்த நிலையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.

    இந்தியர்கள் என்ற அடிப்படையில் இந்த வெற்றியை ஒரு பக்கத்தில் இருந்தே பெரும்பாலானோர் பார்க்கும் நிலையில் வெற்றிக்காக கடுமையாக போராடிய தென் ஆப்பிரிக்க அணி தோல்வியால் மனமுடைந்துள்ளதை பற்றி சிலர் மட்டுமே எண்ணியிருக்கக் கூடும்.

     

    ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று இந்தியர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர்களும், அணியின் பணியாளர்களும் மைதானத்தைவிட்டு  மிகவும் வருத்தத்துடன் வெளியேறியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் தென் ஆபிரிக்க வீரர்களை நோக்கி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் [We love you] என்று கோரஸ் செய்து  கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வரும் நெட்டிஸன்கள், இந்தியர்களின் நல்லியல்பை எண்ணி பெருமைப்பட்டு வருகின்றனர். 

    • அவர்களில் பலர் நிறுவனத்தில் கடந்த 27 வருடமாக வேலை செய்து வந்தனர்.
    • இந்திய தூதரகதின் மூலம் இறந்தவர்களின் குடுமபத்துக்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடாக அனுப்பி வைக்கப்படும்.

    குவைத்தில் 45 இந்தியர்கள் உட்பட 49 தொழிலாளர்களின் உயிரைப் பறித்த அடுக்குமாடி கட்டட தீவிபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த 45 இந்தியர்களில் கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சார்ந்த 7 பேர் மற்றும் டெல்லி உள்பட மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 14 பேர் அடங்குவர். இவர்களின் உடல்கள் தாயகம் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்கிக்கொண்ட குடுமபத்தினர் கதறி அழும் காட்சிகள் காண்போரின் நெஞ்சை உலுக்கியது.

    இந்நிலையில் இந்த விபத்துக்கு அந்த கட்டிடத்தில் தங்களது ஊழியர்களை தங்கவைத்த NBTC கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிறுவனரும் கேரளவைச் சேர்ந்தவருமான கே.ஜி.ஆபிரகாம் பேசுகையில், எங்களை மன்னித்து விடுங்கள், தீவிபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் துரதிஷ்ட வசமானது.

    உயிரிழந்தவர்களில் பலரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும், அவர்களில் பலர் எங்கள் நிறுவனத்தில் கடந்த 27 வருடமாக வேலை செய்து வந்தனர். அவர்களின் இழப்பை எண்ணி நான் எனது வீட்டில் கதறி அழுதேன். அவர்களாலேயே இந்த நிறுவனம் உருவானது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை NBTC நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.

     

    இந்திய தூதரகதின் மூலம் இறந்தவர்க்ளின் குடுமபத்துக்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடாக அனுப்பி வைக்கப்படும். 4 வருட சம்பள பணம் இன்சுரன்ஸ் தொகையாக அவர்களிடம் வழங்கப்படும். மேலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தவிர்த்து கேரள அரசு உயிரிழந்த அம்மாநிலத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நஷ்டஈடு அறிவிதுள்ளது. இதற்கிடையில் சார்ட் சர்கியூட் காரணமாவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர்.
    • கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஓட்டல்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதே போல் பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கி உண்ணும் பழக்கமும் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மக்கள் அனைவருமே வீடுகளிலேயே சமைத்தனர்.

    ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளில் சமைக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ஓட்டல்களும் பெருகி விட்டன. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களின் விற்பனையும் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக இந்தியர்கள் உணவுக்கு செலவு செய்யும் தொகையும் 2 மடங்கு எகிறியது.

    கடந்த 10 வருடங்களை ஒப்பிடும்போது நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டல் உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுவது 41.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

    நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் உணவு பட்ஜெட்டில் ஒரு பகுதியாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கான செலவு 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த கால கட்டத்தில் நகரங்களில் உயர் வருவாய் கொண்ட மக்கள், பாக்கெட்டு களில் விற்கப்படும் உணவுகளுக்கு 2.2 மடங்கு அதிகம் செலவு செய்கின்றனர்.

    கடந்த 2022 ஆண்டை காட்டிலும் கடந்த 2023-ம் ஆண்டு ஒவ்வொரு குடும்பங்களின் மளிகை பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது. பானங்கள் மற்றும் பாக்கெட் உணவுகளுக்கு செலவு செய்யும் தொகை 9 சதவீதத்தில் இருந்து 10.5 சதவீதமாகவும், பால் மற்றும் பால் பொருட்களுக்கான செலவு 7 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும், பழங்கள் மற்றும் உலர் பழங்களுக்கான செலவு 3.4 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

    அதே நேரத்தில் உணவு தானியங்களுக்கான செலவு 6.6 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாகவும், காய்கறிகளுக்கான செலவு 4.6 சதவீதத்தில் இருந்து 3.8 சதவீதமாகவும், முட்டை, மீன், இறைச்சிக்கான செலவு 3.7 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாகவும், பருப்பு வகைகளுக்கான செலவு 1.9 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாகவும், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றுக்கான செலவு 1.2 சதவீதத்தில் இருந்து 0.6 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

    • 2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது
    • ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இனி இந்தியர்களே அதிகம் இடம் பெறப் போகிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிக அளவில் கிரிக்கெட் ஆடி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள "Play HQ" என்ற செயலி ஒன்று உள்ளது.

    அதில், 2023-24-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளில் பதிவு செய்யப்பட்ட வீரர்களில் 4262 பேர் சிங் என்கிற குடும்ப பெயர்களை கொண்டுள்ளனர். இதற்கு அடுத்து, ஸ்மித் என்கிற குடும்ப பெயரை 2,364 பேர் கொண்டுள்ளனர். படேல் என்கிற குடும்ப பெயரை 2323 பேர் கொண்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் கணிசமானோர் ஸ்மித் என்கிற குடும்ப பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், ஸ்மித் என்கிற குடும்ப பெயரை விட சிங் என்கிற குடும்ப பெயர் கொண்டோர் ஆஸ்திரேலிய அணியில் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.

    2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது. அன்றிலிருந்து இப்போது வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிங் பெயர் கொண்டவரே அதிகமாக உள்ளனர்.

    சர்மா, கான், குமார் ஆகிய இந்திய வம்சாவளி குடும்ப பெயர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பதிவு செய்யப்பட்ட முதல் 16 பெயர்களில் இடம் பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் முதல்தர, ஆண்கள் மற்றும் பெண்கள் பிக் பாஷ் லீக்கில் (BBL) கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு 100 வீரர்களில், தெற்காசிய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் 4.2 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதில் உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள இந்தியர்களை அதில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என ரஷிய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பொய் வாக்குறுதிகள் அளிக்கும் ஏஜெண்ட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், ஆள் கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஏஜெண்ட் அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் யாரும் நம்பவேண்டாம். அந்த வாக்குறுதிகள் சிக்கலை ஏற்படுத்துவதுடன் ஆபத்தை ஏற்படுத்தும்.

    ரஷிய ராணுவத்திற்கு உதவியாகப் பணிபுரியும் இந்தியர்களை உடனே அந்தப் பணியில் இருந்து விடுவிப்பதுடன் அவர்களை தாயகம் அழைத்து வர உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    • கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக இந்தியர்கள் அதிகம் செலவழிக்கின்றனர்.
    • 11 ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், தனிநபர் வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சமீபத்தில் வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. 2022-23ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. இந்த முடிவு இந்திய குடும்பங்களின் செலவு முறை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிவிக்கிறது.

    சுமார் 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தனி நபர் மாதாந்திர வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

    சராசரி வீட்டுச் செலவினங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்கள் கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக அதிகம் செலவழிக்கின்றன.

    பெரும்பாலான இந்தியர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும், பெட்ரோலுக்கான செலவு பயணக் கட்டணத்தில் செலவழிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருந்தது.

    நகர்ப்புற குடும்பங்களின் மொத்த மாதாந்திர செலவில் 11.2 சதவீதம் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்காக உள்ளது. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை கிராமப்புற இந்தியாவில் 9.5 சதவீதம் ஆக உள்ளது என தெரிய வந்துள்ளது.

    • இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் கொல்லத்தைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.
    • இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இதுவரை போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் 3 பேருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்த ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டும். இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

    • இந்தியா மற்றும் கனடா இடையேயான விரிசல் அதிகரித்து இருப்பதே இதற்கு காரணம்.
    • இந்தியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் செயல்படுகின்றன.

    கனடாவில் வாழும் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. "இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியர்களுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாலும், கனடாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் கனடா செல்ல திட்டமிட்டு இருக்கும் பயணிகளும் கவனமுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக இந்தியா மற்றும் கனடா இடையேயான விரிசல் அதிகரித்து வந்ததே இதற்கு காரணம் ஆகும். அதன்படி, இந்திய அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இருக்கும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கனடாவில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளில் ஒன்றாக காலிஸ்தான் புலிப்படை அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கடந்த 2020-ம் ஆண்டு பயங்கரவாதியாத அறிவித்தது. எனினும், இவர் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார்.

    கனடாவில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனிடையே கடந்த ஜூன் 18-ம் தேதி இவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கனடா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக இம்மாத துவக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட கனடாநாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த விவகாரம் இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக கனடா நாட்டு வர்த்தகத் துறை மந்திரி இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. மேலும் கனடா குடியுரிமை பெற்ற ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் குற்றம்சாட்டினார். இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற கனடா நாட்டிற்கான வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் உள்ள கனடா நாட்டு வெளியுறவுத்துறை உயரதிகாரி ஐந்து நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கான அச்சுறுத்தல் இருப்பதால், இந்தியாவில் வாழும் கனடா நாட்டு மக்கள் கவனமாக இருக்க அந்நாட்டு மக்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    ×