என் மலர்
நீங்கள் தேடியது "mea"
- அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
- அதிபர் ஜோ பைடன் விழாவில் பங்கேற்று அதிகாரத்தை ஒப்படைப்பார்.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
பதவிக் காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன் விழாவில் கலந்துகொண்டு அதிகாரத்தை அவரிடம் ஒப்படைப்பார். பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகு டிரம்ப் உரையாற்றுவார். இந்த விழாவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்கிடையே, பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்-வான்ஸ் பதவியேற்பு குழுவின் அழைப்பின் பேரில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பதவியேற்பு விழா முடிந்ததும் புது நிர்வாகத்தினரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திபெத் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படை விரைந்து சென்றது.
புதுடெல்லி:
திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணிக்கு திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின.
இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், திபெத் நிலநடுக்கத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரமான உயிர் மற்றும் உடைமை இழப்புகளுக்கு இந்திய அரசும் மக்களும் இரங்கல் தெரிவிக்கின்றனர். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.
- இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இந்தியா வந்துள்ளார்.
- அனுர குமார திசநாயக்கை மத்திய இணை மந்திரி முருகன் வரவேற்றார்.
புதுடெல்லி:
இலங்கையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயக அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கிடையே, இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இந்தியா வந்துள்ளார்.
டெல்லி வந்தடைந்த அனுர குமார திசநாயக்கை மத்திய இணை மந்திரி எல்.முருகன் வரவேற்றார்.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகவை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் சந்தித்தார்.
தனது சுற்றுப்பயணத்தில் அதிபர் திசநாயக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்கிறார். அப்போது இருநாடுகள் இடையே நிலவும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- சிரியாவில் வசிக்கும் இந்தியர்கள் நலமாக உள்ளனர்.
- டமாஸ்கஸ் நகரில் இந்தியத் தூதரகம் செயல்படுகிறது.
புதுடெல்லி:
சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.
சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதற்கிடையே, சிரியாவுக்கான பயண அறிவுறுத்தலை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டது. அதில், அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை மக்கள் சிரியாவுக்கான பயணங்களைத் தவிர்க்கவேண்டும். பொதுமக்கள் முடிந்த வரை விரைவாக சிரியாவை விட்டு வெளியேறுங்கள். +963993385973 என்ற அவசர கால உதவி எண்ணை தொடர்பு கொள்ளும்படியும், hoc.damascus@mea.gov.in என்ற இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும் என தெரிவித்திருந்தது.
அதிபர் பஷர் அல் ஆசாத் சிரியாவை விட்டு தப்பியோடினார். கிளர்ச்சியாளர்கள் அங்கு ஆட்சியை கைப்பற்றியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், சிரியாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். டமாஸ்கஸ் நகரில் உள்ள இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது.
- சிரியாவில் கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.
- சிரியாவுக்கான பயண அறிவுறுத்தலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:
சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.
இதில், சிரியாவுக்கான அல்-கொய்தா கிளை அமைப்புடன் தொடர்பிலுள்ள ஹயத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பின் தலைவர் அபு முகமது கூறுகையில், அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என்பதே இலக்கு என தெரிவித்தார்.
இதற்கிடையே, சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடி வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவுக்கான பயண அறிவுறுத்தலை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை மக்கள் சிரியாவுக்கான பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் முடிந்த வரை விரைவாக சிரியாவை விட்டு வெளியேறுங்கள்.
+963993385973 என்ற அவசர கால உதவி எண்ணை தொடர்பு கொள்ளும்படியும், hoc.damascus@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும் தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தானின் பகவல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மசூத் அசார் உரையாற்றியதாக தகவல் வெளியானது.
- மசூத் அசார் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியது.
புதுடெல்லி:
இந்தியாவில் 2001-ல் பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், 2008-ல் மும்பை பயங்கரவாத தாக்குதல், 2019-ல் ஜம்மு-காஷ்மீரில் நடத்த புல்வாமா தாக்குதல் ஆகியவற்றின் பின்னால் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக வெளியான தகவல்களை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானின் பகவல்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மசூத் அசார் உரையாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை என நீண்ட காலமாக மறுத்து வருகின்றனர். மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உண்மையென்றால், இது பாகிஸ்தானின் போலித்தனத்தை அம்பலப்படுத்தும்.
இந்தியா மீதான எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் மசூத் அசாருக்கு தொடர்பு உள்ளது. அவரை சட்டத்தின் முன் நிறுத்தி, பாகிஸ்தான் அரசு அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
- இந்து மத தலைவர் மீதான கைது நடவடிக்கை கவலை அளிக்கிறது.
- இந்த நிகழ்வுகளை ஊடகங்களின் மிகைப்படுத்தல் என ஒதுக்கிவிட முடியாது.
புதுடெல்லி:
வங்கதேசத்தில் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பதவியேற்ற நிலையில், அங்குள்ள சிறுபான்மை மக்கள்மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, வங்கதேசத்தின் தேசிய கொடியை அவமதித்ததாகக் கூறி அந்நாட்டில் உள்ள இந்து மத அமைப்பின் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து வங்கதேசத்தில் உள்ள இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வங்கதேசத்தில் இந்து மத தலைவர் மீதான கைது நடவடிக்கை கவலை அளிக்கிறது. அந்நாட்டில் உள்ள இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வங்கதேச இடைக்கால அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. வங்கதேச இடைக்கால அரசாங்கம் அங்குள்ள அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
வங்கதேசத்தில் பயங்கரவாத சொற்பொழிவுகள், வன்முறை சம்பவங்கள் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
இந்த நிகழ்வுகளை ஊடகங்களின் மிகைப்படுத்தல் என ஒதுக்கிவிட முடியாது. சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வங்கதேசத்தை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.
இந்து மத தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட வழக்கில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதை இந்தியா கவனித்து வருகிறது.
இந்த வழக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் கையாளப்படும். சம்பந்தப்பட்ட அனைவரின் சட்ட உரிமைகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.
- இந்து மத துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் டாக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
- இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
வங்கதேச நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
இந்நிலையில், வங்கதேசத்தின் இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். இஸ்கான் அமைப்பு தலைவரான அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு கிருஷ்ண தாஸ் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அவர்மீது இந்துக்களின் போராட்டங்களைத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, சின்மோய் கிருஷ்ண தாசை விடுவிக்கக் கோரி இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.
இஸ்கான் அமைப்பு தலைவர் கைது விவகாரத்தில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கவனத்தில் கொண்டு அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்து துறவியின் கைது மற்றும் ஜாமீன் மறுப்பு ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய பல தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தீ வைத்தல், சூறையாடுதல், திருட்டு மற்றும் நாசப்படுத்துதல் மற்றும் தெய்வங்கள் மற்றும் கோவில்களை இழிவுபடுத்துதல் போன்ற பல ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்தச் சம்பவங்களை செய்தவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அமைதியான கூட்டங்கள் மூலம் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் மதத் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளது.
- தீக்குளிப்பது போன்ற பதிவு காரணமாக பதற்றம் அதிகரித்துள்ளது.
- நாங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமான வீடியோக்கள் பகிரப்பட்டதை கண்டுள்ளோம். இது கண்டிக்கத்தக்கது.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதில் இருந்து வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தற்போது சிட்டகாங்கில் ஆத்திரமூட்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் பகிரப்பட்டு வருவதால் பதற்றமான நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் "வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலுவான நடவடிக்கை எடுங்கள்" என வங்கதேசத்தை வலியுறுத்தியுள்ளார்.
தீக்குளிப்பது போன்ற பதிவு காரணமாக பதற்றம் அதிகரித்துள்ளது. நாங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமான வீடியோக்கள் பகிரப்பட்டதை கண்டுள்ளோம். இது கண்டிக்கத்தக்கது. சிட்டகாங்கில் இந்த போஸ்ட் காரணமாக இந்துக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் விசயங்கள் நடைபெறுகின்றன. இந்துக்கள் மிரட்டப்படுகின்றனர். அவர்களுடைய ஏராளமான சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கு பின்னால் தீவிரமான விசயம் உள்ளது. இதுபோன்ற விஷயங்கள் வகுப்புவாத பதற்றத்தை அதிகரிக்க வழிவகுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
- ரஷியாவிற்கு முக்கிய தொழில்நுட்பங்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது.
- இதில் 19 இந்திய நிறுவனங்களும் அடங்கும்.
புதுடெல்லி:
உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டு கடந்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
போரின் எதிரொலியாக அமெரிக்கா, ஐ.நா. ஆகியவை எவ்வளவு தடை விதித்தாலும் ரஷியா அதனை கண்டுகொள்ளவில்லை.
ரஷியாவுக்கு உதவும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து தடை விதித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவிற்கு தேவைப்படும் முக்கிய கருவிகள், அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கியதற்காக 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதில், 19 இந்திய நிறுவனங்களும் அடங்கும்.
சீனா, சுவிட்சர்லாந்து, யுஏஇ, கஜகஸ்தான், தாய்லாந்து மற்றும் துருக்கியைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்தத் தடையை எதிர்கொண்டுள்ளன.
தடைக்கு உள்ளான இந்திய நிறுவனங்கள் ராணுவம் மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவின் தடை குறித்து அறிந்துள்ளோம். தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் இந்திய சட்டத்தை மீறவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
- நிஜ்ஜார் கொலை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது.
- இரு நாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
புதுடெல்லி:
கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை துணை மந்திரி டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் விவகாரத்தில் அமித்ஷா மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்துறை மந்திரி அமித்ஷா மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனால் கனடா தூதருக்கு இந்திய வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது என தெரிவித்தார்.
- கடந்த 6 ஆண்டில் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
- விபத்துகள், மருத்துவ காரணங்கள், தாக்குதல்களால் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் இந்தியர்கள் குறித்த கேள்வி இன்று எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியதாவது:
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகள் சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
2019-ம் ஆண்டில் 6,75,541 மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 13,35,878 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.
கனடாவில் 4,27,000 பேரும், அமெரிக்காவில் 3,37,630 பேரும், இங்கிலாந்தில் 1,85,000 பேரும், ஆஸ்திரேலியாவில் 1,22,202 பேரும் படித்து வருகின்றனர்.
இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் எண்ணிக்கை வரும் காலங்களில் தொடர்ந்து உயரும் என தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்துகள், மருத்துவ காரணங்கள் மற்றும் தாக்குதல்களால் 41 நாடுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கனடாவில் 172, அமெரிக்காவில் 108, இங்கிலாந்தில் 58, ஆஸ்திரேலியாவில் 57, ரஷ்யாவில் 37, ஜெர்மனியில் 24 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், 19 உயிரிழப்புகள் கொலைகளால் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 3 ஆண்டில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.