என் மலர்
இந்தியா

அதிபர் டிரம்ப் இந்தியா வருகிறாரா?: வெளியுறவுத்துறை விளக்கம்
- இந்தியா வருகை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை.
- இது குறித்து பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை என வெளியுறவுத்துறை கூறியது.
புதுடெல்லி:
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்கமுடியாது. ஆகையால் நாங்களும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்வோம். இதுதொடர்பாக போர்த்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை குறித்த டிரம்பின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். உறுப்பு நாடுகளுக்கு இடையே முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்கும், இந்தியா பசுபிக் பிராந்திய நலன் குறித்து விவாதிக்கவும் மதிப்புமிக்க தலமாக குவாட் அமைப்பை இந்தியா கருதுகிறது.
குவாட் அமைப்பு தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது. சமீபத்தில் மும்பையில் இந்திய கடலோர பாதுகாப்பு வாரம் நடந்தது. குவாட் துறைமுகம் தொடர்பான கருத்தரங்கமும் நடந்தது.
இந்தியா வருகை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை. இது குறித்து பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை. இது குறித்து அறிந்ததும் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
கடந்த சில மாதங்களாக ரஷிய ராணுவத்தில் பல இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை விரைவில் விடுவிக்கவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்த விஷயத்தை மீண்டும் ரஷிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளோம்.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி 44 இந்தியர்கள் தற்போது ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். ரஷிய தரப்புடன் தொடர்பில் இருக்கிறோம். இவர்களின் குடும்பங்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ரஷிய ராணுவத்தில் பணியாற்ற வழங்கப்படும் சலுகைகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.






