என் மலர்
இந்தியா

உமர் காலித்துக்கு ஆதரவாக ஜோரான் மம்தானி கடிதம்: வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்!
- தனிப்பட்ட விருப்பங்களை பொதுப்பதவியில் இருப்பவர்கள் வெளிப்படுத்துவது அழகல்ல
- நியூயார்க் நகர மேயராக பதவியேற்ற அன்று உமர் காலித்துக்கு ஆதரவாக கடிதம் எழுதினார்
டெல்லி கலவர வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு ஆதரவாக கடிதம் எழுதிய நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானிக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட விருப்பங்களை பொதுப்பதவியில் இருப்பவர்கள் வெளிப்படுத்துவது அழகல்ல என குறிப்பிட்டுள்ளது.
2020 டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலித் கிட்டத்தட்ட 5 வருடங்களாக சிறையில் உள்ளார். இந்த வார தொடக்கத்தில் இந்த கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமானை தவிர்த்து மற்றவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனிடையே உமர் காலித்துக்கு மம்தானி எழுதிய கடிதம் தொடர்பான பேச்சுகள் வெளிவரத் தொடங்கின.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஜன.1ஆம் தேதியன்று ஜோரான் மம்தானி பதவியேற்றார். அன்று டெல்லி கலவர வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் குறிப்பில் மம்தானி, "கசப்புணர்வு குறித்து நீங்கள் கூறிய வார்த்தைகளையும், அது ஒருவரை ஆட்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தையும் நான் அடிக்கடி நினைவுகூர்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்," என்று எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்தை உமர் காலித்தின் இணையர் பனோஜ்யோத்ஸ்னா லஹிரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். இதற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மம்தானிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
"பொதுப் பிரதிநிதிகள் மற்ற ஜனநாயக நாடுகளின் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்துவது பொதுப்பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல. இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பதற்குப் பதிலாக, நியூயார்க் மக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்." என தெரிவித்துள்ளார்.






