search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓட்டலில் குண்டு வைத்த குற்றவாளி கர்நாடகத்தை சேர்ந்தவர்... என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
    X

    ஓட்டலில் குண்டு வைத்த குற்றவாளி கர்நாடகத்தை சேர்ந்தவர்... என்.ஐ.ஏ. தீவிர விசாரணை

    • பெங்களூருவில் குண்டுவெடிப்பை நடத்திவிட்டு துமகூரு, பல்லாரி மற்றும் கலபுரகிக்கு மர்மநபர் தப்பித்து சென்றிருந்தார்.
    • கர்நாடகத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது.

    பெங்களூரு:

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறியதில் 10 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கூட்டாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் ஓட்டல், அரசு பஸ்களில் மர்மநபர் பயணம் செய்த போது சிக்கிய வீடியோ காட்சிகள் மூலமாக, அவரது உருவப்படங்கள் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மர்மநபர் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால் குண்டுவெடிப்பு நடந்து 11 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

    பெங்களூருவில் குண்டுவெடிப்பை நடத்திவிட்டு துமகூரு, பல்லாரி மற்றும் கலபுரகிக்கு மர்மநபர் தப்பித்து சென்றிருந்தார். அதன்பிறகு, மர்மநபர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. கல்யாண கர்நாடக மாவட்டங்களான ராய்ச்சூர், கலபுரகியில் மர்மநபர் பதுங்கி இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் மர்மநபர் கலபுரகியில் இருந்து ஐதராபாத் அல்லது மும்பைக்கு தப்பித்து சென்றிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் தற்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றாரா? என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் ஐதராபாத், மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களிலும் குண்டுவெடிப்பு குற்றவாளியை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார், என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக பெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பை நடத்திய மர்மநபர் யார்? என்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அடையாளம் கண்டுபிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர், கர்நாடகத்தை சேர்ந்தவர் தான் என்றும், பிற மாநிலங்களை சேர்ந்தவர் இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    இதற்கு முன்பு கர்நாடகத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. ஆன்லைன் மூலமாக வந்த உத்தரவை தொடர்ந்து ஓட்டல் குண்டுவெடிப்பை மர்மநபர் அரங்கேற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுபற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந் தேதி குண்டுவெடிப்பு நடந்திருந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட மர்மநபரை பிடிக்க போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குண்டுவெடிப்பை நடத்தியது யார்?, அந்த நபருக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உள்ளிட்ட பிற தகவல்களை வைத்து குண்டுவெடிப்பை நிகழ்த்திய மர்மநபர் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அடையாளத்தை வைத்து குண்டு வெடிப்பு குற்றவாளி குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கூடிய விரைவில் குண்டு வெடிப்பு குற்றவாளி கைது செய்யப்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×