என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல்
    X

    மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல்

    • லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
    • தாக்குதலுக்கு பிறகு ராணாவிடம் ஹெட்லி மும்பைக்கு செல்ல வேண்டாம் என வெளிப்படையாக எச்சரித்து உள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூர் ராணாவுக்கு 18 நாள் என்.ஜ.ஏ. காவல் அளித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இதையடுத்து அவர் என்.ஐ.ஏ. தலைமை அலுவலகம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள ராணாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் மும்பை தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தாவூத் கிலானி என்று அழைக்கப்படும் டேவிட் கோல்மன் ஹெட்லியின் நம்பிக்கைக்கு உரியவராக ராணா திகழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் ராணுவ பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அன்று தொடங்கிய அவர்கள் நட்பு தொழிலில் பங்குதாரராக ஆகும் அளவுக்கு விரிவடைந்தது. பின்னர் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு முன்பாக துபாயை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரை ராணா சந்தித்து சதிதிட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் யார்? அவருக்கும், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ராணாவிடம் துருவி துருவி கேள்வி கேட்டனர்.

    அப்போது அவரை பற்றிய பல்வேறு விவரங்களை ராணா கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த நபர் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    மும்பை தவிர இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் ராணா தனது மனைவியுடன் இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்கு வந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர், ஆக்ரா மற்றும் டெல்லி, கேரள மாநிலம் கொச்சி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் அவர் தனது மனைவியுடன் தங்கிய விவரம் தெரிய வந்துள்ளது.

    அவர் இந்தியாவை வேவு பார்க்க வந்து இருக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு ராணாவிடம் ஹெட்லி மும்பைக்கு செல்ல வேண்டாம் என வெளிப்படையாக எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக ராணாவிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விசாரணையின் முடிவில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×