என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாகர்கோவில் வட்டவிளையில் பரபரப்பு- வாலிபரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
- ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் நாகர்கோவிலுக்கு வந்தனர்.
- விசாரணைக்காக வாலிபரை விசாகப்பட்டினம் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வருமாறு கூறினர்.
நாகர்கோவில்:
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சிலரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை கண்டறிய, அவர்களது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் செல்போன் மூலம் யார் யாருடன் பேசினார்கள்? சமூக வலைதளங்களில் யாரையெல்லாம் பின் தொடர்ந்தனர்? மேலும் யாரெல்லாம் கைதானவர்களை பின் தொடர்ந்தார்கள்? என்பது குறித்து தீவிர ஆய்வு நடந்தது.
அப்போது கைதான ஒருவருடன் குமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டவிளை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் சமூக வலைதளம் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக ஆந்திரா, டெல்லி மற்றும் சென்னையில் இருந்து 6 பேர் அடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் வாலிபரின் வீட்டை கண்டறிந்து சோதனை நடத்த அங்கு சென்றனர். ஆனால் அந்த வாலிபர் வீட்டில் இல்லை.
அவரது பெற்றோர் மட்டும் வீட்டில் இருந்தனர். வாலிபரை பற்றி அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்களது மகன் வேலை விஷயமாக சென்னை சென்றிருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை 9 மணி வரை நடைபெற்றது.
அப்போது வாலிபர் குறித்த அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், விசாரணைக்காக வாலிபரை விசாகப்பட்டினம் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட வாலிபரின் வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.






