search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு ஓட்டலில் வெடித்தது டைம் பாம்: என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
    X

    பெங்களூரு ஓட்டலில் வெடித்தது "டைம் பாம்": என்.ஐ.ஏ. தீவிர விசாரணை

    • ராமேஸ்வரம் கபே ஓட்டலில் வெடித்த குண்டுகளிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    • இதுவரை ஓட்டல் குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

    பெங்களூரு:

    பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற ஓட்டலில் நேற்று முன்தினம் மதியம் 12.55 மணியளவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. ஓட்டலில் கை கழுவும் இடத்திற்கு அருகே ஒரு பையில் இந்த குண்டு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 2 பேர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்கள். 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெங்களூரு நகரில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    தற்போது அந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளும், பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் மற்றொரு புறம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெடித்தது எந்த வகையான வெடிகுண்டு?, என்னென்ன பொருட்களை பயன்படுத்தி இந்த குண்டு தயாரிக்கப்பட்டது?, இந்த குண்டு எந்த பயங்கரவாத அமைப்பினர் தயாரித்தது? என்பது தொடர்பாக தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். நிபுணர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்புக்கும், மங்களூருவில் கடந்த 2022-ம் ஆண்டு ஆட்டோவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது. அதுபோன்று, பெங்களூரு சர்ச்தெருவில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கிய வெடிப்பொருட்களே, ராமேஸ்வரம் கபே ஓட்டலில் வெடித்த குண்டுகளிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    எல்லாவற்றுக்கும் மேலாக சிவமொக்கா மாவட்ட ஆற்றுப்பகுதியில் பயங்கரவாதி ஷாரிக் மற்றும் அவரது கூட்டாளிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து பயிற்சி பெற்றிருந்தனர். இந்த சம்பவத்திற்கும், தற்போது ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த ஆதாரங்கள் மூலமாக ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்திற்கு சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுவரை ஓட்டல் குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் ஓட்டல் குண்டுவெடிப்பில் சிக்கிய டெட்டனேட்டர்கள், பேட்டரி, நட்டு, போல்ட்டுகள் ஆகியவையும், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் ஒன்று போல் இருப்பதை தடய அறிவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மங்களூருவில் குக்கர் வெடிகுண்டை வெடிக்க செய்யும் முன்பாகவே வெடித்திருந்தது.

    ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குக்கர் வெடிகுண்டு, டிபன் பாக்ஸ் வெடிகுண்டுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவரை பயன்படுத்தி வெடிகுண்டை தயாரித்து, டைமர் மூலம் வெடிக்க செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கவரில் 2 குண்டுகளை வைத்து, அதற்கு டைம் செட் செய்து வெடிக்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த வகையான வெடிகுண்டுகளை தயாரிப்பதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் நிபுணத்துவம் பெற்றதும், அவர்கள் தான் ஓட்டலில் குண்டுகளை வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள்.

    ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவினரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×