என் மலர்
நீங்கள் தேடியது "என்ஐஏ சோதனை"
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் தூத்துக்குடி வந்து முஸ்பிக் ஆலம் மற்றும் அவருடன் தங்கியிருந்த 7 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தினார்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் முஸ்பிக் ஆலம் உள்பட 4 பேரையும் தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி:
சென்னை அருகே பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்பவருடன் அவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
மேலும் முஸ்பிக் ஆலம் தற்போது தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள சிலுவைப்பட்டி பகுதியில் தங்கி அங்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வருவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று தூத்துக்குடி வந்து முஸ்பிக் ஆலம் மற்றும் அவருடன் தங்கியிருந்த 7 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தினார். அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை செய்தனர். முஸ்பிக் ஆலமின் செல்போனை வாங்கி அதில் இருந்த தகவல்களை ஆய்வு செய்தனர். அவர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதிகள் முழுவதும் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் அவருடன் நெருங்கி பழகிய 3 பீகார் வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் முஸ்பிக் ஆலம் உள்பட 4 பேரையும் தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் 4 பேரிடமும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உளவுப்பிரிவு அதிகாரிகள் உள்பட பல்வேறு அதிகாரிகளும் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 4 பேரிடமும் போலீஸ் கண்காணிப்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முகமது யாசின் என்பவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார்.
- 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னாநகரை சேர்ந்தவர் சேக்அப்துல்லா. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொருளாளராகவும் இருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் மதமாற்ற நடவடிக்கைகளை கண்டித்து போராடியதால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேர சோதனைக்கு பிறகு வீட்டில் இருந்த ஆவணங்கள், சேக்அப்துல்லா மற்றும் அவரது மனைவியின் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.
விசாரணை முடிவுற்ற நிலையில் வருகிற 25ந்தேதி சென்னையில் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டது. இந்த சோதனையால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஏராளமானோர் அங்கு திரண்டு சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு பகுதியான சம்சுதீன் காலனியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் முகமது யாசின் என்பவருடைய வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 5ந் தேதி கும்பகோணத்தில் மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்து போராடிய ராமலிங்கம் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை காவல்துறையினருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் வசித்து வரும் முகமது யூசுப் என்பவரின் மகன் முகமது யாசின் (35) வீட்டில் இன்று அதிகாலை முதல் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முகமது யாசின் என்பவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்டுள்ள இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் அதிகாலையில் அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென உள்ளே நுழைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகமது யாசின் பயன்படுத்தி வரும் செல்போன் மற்றும் வீட்டில் உள்ள நபர்களின் தொலைபேசிகளையும், வீட்டில் உள்ள அவரின் முக்கிய ஆவணங்கள், டைரிகள், உள்ளிட்ட வைகளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் நடைபெறும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தை அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர்.
வத்தலக்குண்டு காந்திநகர் கணவாய்ப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட குறிஞ்சி நகரில் உமர் கத்தாப் (72) என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடந்து வருகிறது. ராமலிங்கம் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவரது மருமகன் முகமதுஅலிஜின்னா என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதன்பின் முகமது அலி ஜின்னாவின் மகள் நிஷா தற்போது தந்தை உமர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் டி.எஸ்.பி.சஞ்ஜீவ்மோன் தலைமையில் வந்த 5 பேர் கொண்ட அதிகாரிகளும், வங்கி அதிகாரிகள் 2 பேரும் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக இவர்களது வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் நடந்ததா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடைக்கானலில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது. கொடைக்கானல் பில்லிஸ் வில்லா பகுதியில் உள்ள 2 இடங்கள், அப்சர்வேட்டரி சாலை, கான்வென்ட் ரோடு மற்றும் மேல்மலை கிராமமான பூம்பாறை பகுதியில் ஒரு இடத்திலும் கொடைக்கானல் அண்ணா சாலையில் முபாரக் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
ஆம்பூர் பிரியாணி கடை வைத்து நடத்தி வரும் உரிமையாளர் இம்தாத்துல்லாவின் கொடைக்கானல் வீட்டிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
- தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
- ரகசிய தகவல்களை கசியவிட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த மோதிராம் ஜாட் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மோதிராம் பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை கசியவிட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
டெல்லி, மராட்டியம் (மும்பை), அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் சத்தீஸ்கர், அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களில் 15 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பல மின்னனு சாதனங்கள், முக்கியமான நிதி ஆவணங்கள், குற்றவியல் பொருட்கள் இந்த சோதனையின்போது கைப் பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
- டெல்லி மற்றும் ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை.
- பிஷ்னோய் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரித்தபோது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியானது.
புதுடெல்லி:
டெல்லி மற்றும் ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் பிரபல தாதாக்களான நவீன் தபாஸ், சுனில் பலியான் என்ற தில்லு தாஜ்புரியா உள்ளிட்ட 6 பேரை கடந்த வாரம் என்.ஐ.ஏ. காவலில் எடுத்து விசாரணை நடத்தி இருந்தது.
அதில் இவர்கள் சிறையில் இருந்தவாறு பல்வேறு குற்ற செயல்களை செய்தது தெரியவந்தது. இந்த கும்பலுக்கு பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி கிடைத்திருக்கலாம் எனவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கருதுகிறார்கள்.
மேலும் பிஷ்னோய் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரித்தபோது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியானது.
இந்த கும்பலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் சர்வதேச பயங்கரவாத தொடர்பு பற்றிய தகவல்களும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் 20 நபர்களின் இடங்களில்தான் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 கட்டங்களாக 102 இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்போர் மீது தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது.
- அனந்த் நாக்கில் உள்ள ஹதிகம் கிராமத்தில் அரசு ஆசிரியர் இக்பால் ஷேக் மற்றும் டெய்லர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள்.
பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளிப்போர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக காஷ்மீரில் ஏற்கனவே பல இடங்களில் சோதனை நடத்தியது. இது தொடர்பான வழக்கும் பதிவாகி இருக்கிறது.
இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வது தொடர்பான வழக்கில் காஷ்மீர், டெல்லியில் 17 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
காஷ்மீரில் உள்ள அனந்த்நாக், குல்காம், பெக்ரம் போரா, சோபரே, அவந்தி போரா, ஜம்மு ஆகிய பகுதியிலும் டெல்லியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அனந்த் நாக்கில் உள்ள ஹதிகம் கிராமத்தில் அரசு ஆசிரியர் இக்பால் ஷேக் மற்றும் டெய்லர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
புல்வாமாவில் உள்ள ராஜ்போரா கிராமத்தில் ஓய்வு பெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் அஹ்சன் மிரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
- முதல் கட்டமாக இன்று கேரளா முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, அதன் துணை குழுக்களின் அலுவலகங்கள் என 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும், எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், மலப்புரம், ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும் என 56 இடங்களில் சோதனை நடைபெற்றது.
திருவனந்தபுரம்:
பாப்புலர் பிரண்டு அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை தமிழகத்திலும் நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றினர். இதையடுத்து அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச்சோதனையை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். கேரளாவிலும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மேலும் பல துணை குழுக்கள் இருப்பது தெரியவந்தது.
இத்துணைக்குழுக்கள் மூலம் இந்த அமைப்பினர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவித்தனர். எனவே கைதானவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதில் பல முக்கிய தகவல்கள் என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது. அதன்அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பு மற்றும் இந்த அமைப்புக்கு தொடர்புடைய துணை குழுக்களின் அலுவலகங்களில் சோதனை நடத்த என்.ஐ.ஏ. முடிவு செய்தது.
அதன்படி முதல் கட்டமாக இன்று கேரளா முழுவதும் பாப்புலர் பிரண்ட் அமைப்பு, அதன் துணை குழுக்களின் அலுவலகங்கள் என 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரத்தில் 3 இடங்களிலும், எர்ணாகுளத்தில் 8 இடங்களிலும், மலப்புரம், ஆலப்புழாவில் தலா 4 இடங்களிலும் என 56 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது. இதுபோல பாப்புலர் பிரண்ட் அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் இச்சோதனை நடைபெற்றது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை வேர் அறுக்கும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 50 இடங்களில் நடத்திய சோதனையில் பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத கும்பல்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நடந்த விசாரணையின் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரகசியமாக இந்தியாவில் உள்ள சமூக விரோத கும்பல்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகள் செய்வது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அடுத்தடுத்து பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். உத்தரபிரதேசத்தில் பிலிபிட் நகரில் ஆயுத வியாபாரி ஒருவர் வீட்டில் நடந்த சோதனையில் பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்கள் சமூக விரோத கும்பல்களுக்கு விற்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் 72 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை வேர் அறுக்கும் வகையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று நடந்து வரும் சோதனையில் பல இடங்களில் ஆயுதங்கள் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆயுதங்களை வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.
இன்று பஞ்சாப்பில் மட்டும் 30 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. சமூக விரோத மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் 4-வது முறையாக இந்த சோதனையை அதிரடியாக மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- 9 பேரில் நால்வருக்கு பாட்னாவில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
- குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரின் வீடுகளில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு பீகாரின் பாட்னாவில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் அருகே குண்டு வெடித்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் நால்வருக்கு பாட்னாவில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்த நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரின் வீடுகளில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. பாட்னாவில் முகமது சினான், இக்பால், சர்பாஸ் நவாஸ், நெவுபல் ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை நடந்தது. இவர்கள் வெடிகுண்டுகளை வைப்பதற்கு நிதியுதவி செய்ததாக கூறப்படுகிறது.
- சென்னை, திருவள்ளூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளது.
- போரூர் பகுதி சேர்ந்த ஐயப்பா என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
1500 கோடி ரூபாய் போதை பொருள் மற்றும் ஆயுதம் கடத்தப்பட்ட வழக்கில் கொச்சியை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஹவாலா பண பரிவர்த்தனையில் இலங்கை மற்றும் சென்னையை சேர்ந்த குருவிகள் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட கடலோர எல்லை பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறிய ரக படகு ஒன்றை கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்தனர். அதில் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கிகள் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திற்காக நிதி திரட்டும் முயற்சியில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்கிற அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, திருவள்ளூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வளசரவாக்கம் பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த சபேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக விழுஞ்சியம் ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர், மேலும் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்த ஏழு இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பான ஆவணங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அடுத்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிரடி சோதனையாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டு ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் இருந்தும் பல்வேறு செல்போன் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏழு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக குன்றத்தூரை சேர்ந்த பிளாரன்ஸ் கோவூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார், பம்மல் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் ஆகியோரின் இல்லங்களிலும் மண்ணடி பகுதியில் இயங்கி வரும் ஆப்பிள் பேலஸ், ஆரஞ்சு பேலஸ், கிரீன் பேலஸ் ஆகிய தனியார் விடுதிகளிலும், பாரிமுனை ஈவினிங் பஜார் பகுதியில் இயங்கி வரும் ஒரு கடையிலும் என எட்டு இடங்களில் சோதனை நடைபெற்றது.
குறிப்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை ஹவாலா பணமாக மாற்றி பல்வேறு நபர்களுக்கு சிறிய தொகையாக வங்கி கணக்குகளில் செலுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் எந்தெந்த இடங்களில் இதுபோன்று பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது என்பது குறித்து வங்கி கணக்குகள் மூலம் ஆய்வு செய்த தேசிய புற்றுநோய் முகமை அதிகாரிகள் அதன் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி சென்னை வேளச்சேரியை சேர்ந்த நீசா பாத்திமா என்பவருக்கு சொந்தமான ஈவினிங் பஜார் பகுதியில் உள்ள கடையில் சுமார் 70 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 300 கிராம் தங்க நகைகள், 1000 சிங்கப்பூர் டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடையில் பணியாற்றிய முகமது இலியாசிடம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து அந்த கடையில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து மண்ணடி பகுதியில் இருக்கக்கூடிய மூன்று தனியார் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆரஞ்ச் பேலஸ் தனியார் விடுதியில் 12 லட்சம் ரூபாய் கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போரூர் பகுதி சேர்ந்த ஐயப்பா என்பவரது வீட்டில் நடத்திய சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பொதுவாக இலங்கையில் இருந்து குருவியாக சென்னைக்கு வந்து ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்துவிட்டு செல்வதற்கு ஏதுவாக மண்ணடி பகுதியில் இயங்கி வரும் சில தனியார் லாட்ஜூகள் உதவுவதாக அதிகாரிகள் சோதனையில் தெரிய வந்துள்ளது.
மேலும் சென்னையில் அவ்வப்போது குருவிகள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும்போது சில நபர்கள் பின்தொடர்ந்து அவர்களை தாக்கி பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்றது. இவர்கள் எங்கு யார் வங்கிக்கு இந்த பணத்தை செலுத்துகிறார்கள் என்பது குறித்த விவரங்களும் முழுமையாக கிடைக்கப்பெறாத நிலையில், தற்போது அவர்கள் சிறிய அளவிலான செலுத்தப்படும் தொகைகள் ஹவாலா பண பரிமாற்றம் என தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஒரு வங்கி கணக்கிற்கு மொத்தமாக பணம் செலுத்தும்போது அது வருமான வரித்துறை, வங்கி அதிகாரிகள் கவனத்திற்கு சென்று சந்தேகத்தை ஏற்படுத்தும். எனவே அதை தவிர்க்க பல்வேறு தனிநபர்களிடம் சிறிய தொகையாக இந்த பணத்தை கொடுத்து அவர்கள் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கிற்கு இந்த பணத்தை செலுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் விழுஞ்சியம் கடற்பகுதியில் பிடிபட்ட போதை மற்றும் ஆயுத பொருட்கள் கடத்தல் வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்ட சோதனைகள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டு 20-க்கும் மேற்பட்ட நபர்களை இதுவரை கைது செய்துள்ளனர். அதன் அடுத்த கட்டமாக இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 8 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் ரொக்க பணமும் 300 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பஞ்சாப் மாநிலத்தில் பல பிரிவினைவாத அமைப்புகள் உள்ளன.
- ஜஸ்விந்தர் சிங்கின் கூட்டாளிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தில் பல பிரிவினைவாத அமைப்புகள் உள்ளன. அதில் எஸ்.எப்.ஜே. என்ற அமைப்பும் இருக்கிறது. இந்த அமைப்பு பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் மத்திய அரசு அந்த அமைப்பை தடை செய்து இருந்தது.
தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான எஸ்.எப்.ஜே.யின் தலைவராக குர்பத் சிங் உள்ளார். அவருக்கு மிகவும் நெருக்கமானவர் ஜஸ்விந்தர் சிங் முல்தானி.
கடந்த ஆண்டு சண்டிகரில் உள்ள மாடல் புரைல் ஜெயில் அருகே நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவன். மேலும் லூதியானா கோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவன். மேலும் விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயிகள் தலைவர் பல்வீர் சிங்கை கொல்லவும் சதி திட்டம் தீட்டியவன்.
ஜஸ்விந்தர் சிங்கை ஜெர்மனியில் வைத்து கைது செய்தனர். அவன் மீது பயங்கரவாதத்தில் ஈடுபட்டது, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட 5 வழக்குகள் இருக்கிறது.
ஜஸ்விந்தர் சிங்கும் அவனது கூட்டாளிகளும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு நிதியுதவி அளித்து பயங்கரவாதத்தை பரப்பி வந்தனர்.
இந்த நிலையில் ஜஸ்விந்தர் சிங்கின் கூட்டாளிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றனர்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றனர். இவர்களை ஒடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயங்கரவாத செயலில் ஈடுபடும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு சிலர் நிதி உதவி அளித்து வருகின்றனர். ஆதரவு தெரிவித்த இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா, குப்வாரா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. சோதனையின் முடிவில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.
- இந்த கொலை தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிந்து பலரை கைது செய்தனர்.
- பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
சென்னை:
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க. முன்னாள் நகர செயலாளரான இவர் கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டர். இவர் அப்பகுதியில் நடைபெற்ற மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். அது தொடர்பான மோதலிலேயே கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குறிச்சி மலையை சேர்ந்து முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. அவர்கள் தனியாக வழக்கு பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடரபாக மேலும் பல தகவல்களை திரட்டும் வகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 24 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன் விவரம் வருமாறு:-
திருச்சி பீமநகர் பண்டரிநாதபுரம், ஹாஜி முகமது உசேன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் அப்சல் கான் என்பவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு வாடகைக்கு குடிவந்துள்ளார். மேற்கண்ட கொலை வழக்கு தொடர்பான 2 சாட்சிகளுடன் என்.ஐ.ஏ. ஆய்வாளர் ரஞ்சித் சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது செல்போன் குறுந்தகவல்கள், லேப்டாப் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் உசிலஙகுளத்தில் உள்ள ரசித் முகமது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹாஜி இப்ராஹிம் ராவுத்தர் வீதியில் உள்ள அப்பாஸ் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டிற்கு இன்று காலை வந்த 3 அதிகாரிகள், வீட்டி ற்குள் சென்று ஒவ்வொரு அறையாக பார்வையிட்டு, அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
சோதனையின் போது வீட்டில் இருந்த ரூ.90 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
சோதனையையொட்டி அவரது வீட்டிற்குள் வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை 8.45 மணி வரை நடந்தது. பின்னர் அப்பாசை என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு நேரில் வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி தெரிவித்து விட்டு அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், திருபுவனம், ராஜகிரி , அதிராம்பட்டினம், வடக்கு மாங்குடி, திருமங்கலக்குடி உள்ளிட்ட 9 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை நடராஜபுரம் பகுதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பக்ருதீன் என்பவரது வீட்டுக்கு இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்தனர். பின்னர் கதவை பூட்டிவிட்டு சோதனையை தொடர்ந்தனர். இதற்காக வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.தொடர்ந்து அவரது வீட்டில் ஏதாவது ஆவணங்கள் உள்ளதா ? என சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேப்போல் கும்பகோணத்தை சேர்ந்த அப்துல் மஜீத், ராஜகிரியை சேர்ந்த முகமது பாரூக், திருபுவனம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா, அதிராம்பட்டினம் ஆசாத் நகர் காஜாவுதீன், வடக்கு மாங்குடி புருகானுதீன் உள்பட 9 பேர் வீடுகளில் பலத்த பாதுகாப்புடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டு விசாரித்து வருகின்றனர். இந்த சோதனையில் 25-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை பேரளந்தூர் தெற்கு பட்டக்கால் தெரு நிஷார்அகமது (38) வீட்டிலும் ராமலிங்கம் கொலை வழக்கு தொட ர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விழுப்புரம்-புதுவை மெயின் ரோட்டில் உள்ள தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் பாபு. இவருக்கு சொந்தமான வீட்டில் இன்று காலை 6.30 மணியளவில் தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த (என்.ஐ.ஏ.) 5-க்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது பாபு அங்கு இல்லை. அதனால் அதிகாரிகள் அவரது தாய் மற்றும் சகோதரரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். பாபு கடந்த சில ஆண்டுகளாக கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் உள்ள ஒரு மசூதியில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார் என்ற தகவல் தெரிய வந்தது. ஒரு மணி நேரம் விசாரணையை முடித்துக் கொண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் ஹக் காலனியில் அமைந்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று அதிகாலை சென்னை தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையில் ஒரு பெண் உள்பட 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நெல்லை முபாரக் வீட்டிற்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த முபாரக்கிடம் சோதனைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். அவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்த சோதனை நடக்கும் பகுதியில் நெல்லை மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முபாரக்கின் வீட்டு முன்பு குவிந்துள்ளனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் பள்ளிவாசல் அருகே உள்ள குலாம்காதர் கார்டன் 8-வது வீதியில் உள்ள முபாரக் பாட்சா(வயது 42) என்பவரது வீட்டிற்கு இன்று காலை 5-30மணிக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டின் பல்வேறு அறைகளுக்கு சென்று அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
காலை 5-30மணிக்கு தொடங்கிய சோதனை 9-30 மணி வரை 4மணி நேரம் நடைபெற்றது. இதில் ஒரு லேப்டாப், ஒரு செல்போன் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முபாரக் பாட்சா தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் பேச்சாளர். தற்போது எஸ்.டி.பி.ஐ., கட்சியில் நிர்வாகியாக உள்ளார். திருப்புவனம் பா.ம.க. நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
என்.ஐ.ஏ., சோதனையையொட்டி திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எஸ்.கீழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன் என்ற அப்துல் ரசாக் (வயது 67). இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி. இவரது வீட்டுக்கு இன்று காலை 7 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரி கள் வந்தனர். இன்ஸ்பெக்டர் குல்தீப்சிங் தலைமையில் அவர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்துல் ரசாக் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்தது. இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி னர். மேலும் வீட்டில் ஏதே னும் முக்கிய ஆவணங்கள் உள்ளதா? எனவும் அங்கு லம் அங்குலமாக சோதனை நடத்தினர்.
என்.ஐ.ஏ. சோதனையை யொட்டி அப்துல் ரசாக் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்ப நாயக்கனூர் காமராஜர் நகரில் வசிக்கும் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி ஜாகீர்உசேன் என்பவரது வீட்டிலும் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.






