என் மலர்
இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு- என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல்
- பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 உள்ளூர் பயங்கரவாதிகள் உதவி இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டது.
- தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 3டி வரைபடம், 40-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன.
புதுடெல்லி:
தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடா்ந்து பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உண்டாகும் சூழலுக்கு காரணமான இந்த தாக்குதல் வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) கடந்த 27-ந் தேதி ஏற்றது. தாக்குதலை தொடா்ந்து தலைமறைவாகியுள்ள பயங்கரவாதிகள் குறித்து தகவல்களை சேகரிக்க 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஐ.ஜி. தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் வரைபடங்களும் வெளியிடப்பட்டு அவா்கள் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ. தலைமை இயக்குனர் சதானந்த் தாத்தே நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. தெரிவித்தது.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் மூலம் இந்த சதி திட்டத்தை ஐ.எஸ்.ஐ. நடத்தியதாக தேசிய புலனாய்வு முகமை தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டி என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
என்.ஐ.ஏ. விசாரணையில் இந்த தாக்குதலில் 5 முதல் 7 பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், இவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 உள்ளூர் பயங்கரவாதிகள் உதவி இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளான ஹாஷ்மி மூசா என்கிற சுலைமான், அலி பாய் என்கிற தல்ஹா பாய் ஆகியோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், தங்குமிடம், வழி, உளவு பார்த்தல் உள்ளிட்ட விவரங்களை உள்ளூர் தொழிலாளர்களிடம் பெற்றதும் தெரிய வந்தது.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 3டி வரைபடம், 40-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன. 3 செயற்கைகோள் தொலைபேசிகள் செயல்பாட்டில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் இரண்டு தொலைபேசியில் இருந்து சிக்னல்கள் கண்டு பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு 24-ந் தேதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. நள்ளிரவில் நடைபெறும் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் 8-வது நாளாக தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டது. குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்கினார்கள். இதற்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்தது.






