என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டவாள பராமரிப்பின் போது மண் சரிவு: ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்- பயணிகள் பரிதவிப்பு
    X

    தண்டவாள பராமரிப்பின் போது மண் சரிவு: ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்- பயணிகள் பரிதவிப்பு

    • இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
    • ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சந்திப்பு மற்றும் டவுன் ரெயில் நிலையங்களில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே உள்ள பழையாற்றில் பழைய இரும்பு பாலம் உள்ள நிலையில் புதிதாக 2 பாலங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து பழைய பாலத்தின் தூண்களை பலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது.


    பழையாற்றை ஒட்டி உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்ல வசதியாக புதிய பாலத்தில் தண்டவாளத்தின் கீழ் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பழைய தண்ட வாளத்தின் கீழ் பகுதியிலும் புதிதாக குழாய் அமைக்க ரெயில்வே துறை நேற்று நடவடிக்கை எடுத்தது. குழாய் அமைக்க வேண்டிய பகுதியில் தண்டவாளத்தை முற்றிலும் அகற்றிவிட்டு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி அதன் பிறகு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

    நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து எதுவும் இல்லாததால் அந்த நேரத்தில் பணியை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அதன் அடிப்படையில் நேற்று இரவு 11 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். தண்டவாளத்தை அப்புறப் படுத்திவிட்டு அந்த பகுதியில் 12 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.

    இந்த பணியின் போது இன்று அதிகாலை 2.15 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களான கோவையைச் சேர்ந்த ஜானகிராமன் (வயது47), பாளையங்கோட்டையை சேர்ந்த சிங்கராஜா (39), மதுரையை சேர்ந்த பால கிருஷ்ணன் (42) ஆகியோர் சிக்கி கொண்டனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண்ணுக்குள் சிக்கிய 3 தொழிலாளர்களும் மீட்கப்பட்டு 108 ஆம்பு லன்சு மூலமாக சிகிச்சைக் காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


    மண்சரிவு ஏற்பட்டதை யடுத்து அந்த பகுதியில் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குழாய் பதிக்கும் திட்டத்தை கை விட்டு விட்டு உடனடியாக ரெயில் போக்குவரத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    தோண்டப்பட்ட பள்ளம், மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் கொண்டு மூடப்பட்டது. இந்த பணி முடிய காலை 6 மணி வரை ஆகிவிட்டது. இதன் காரணமாக நாகர்கோவில், கன்னியாகுமரி வரும் ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப் பட்டன.

    சென்னை, பெங்களூரூ, கோவையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாங்குநேரி, மேலப்பாளையம், நெல்லை, கோவில்பட்டி நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் வந்த பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட னர்.

    மண் சரிவு சரி செய்யப்பட்ட பின்பு தான் இந்த ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன. மேலும் பணி நடத்த இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்க அறிவுறுத்தப்பட்டன. அந்த பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

    கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு அதி காலை 4.40 மணிக்கு வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு வந்தடைந்தது.

    இதேபோல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 3½ மணி நேரம் தாமதமாக காலை 8.05 மணிக்கு தான் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    தாம்பரம்-நாகர்கோவில் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் 8.45 மணிக்கும், பெங்களூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.30 மணிக்கு வந்து சேர்ந்தது. வழக்கமாக இந்த ரெயில் காலை 7.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் டவுன் நிலையம் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.15 மணிக்கு வந்து சென்றது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக மும்பை செல்லும் சிறப்பு ரெயில் இன்று காலை 3.15 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு வந்தது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிறகு அந்த ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு காலை 6.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    இதற்கிடையில் இணைப்பு ரெயில்கள் தாமதம் காரணமாக 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பயணிகள் ரெயில், நாகர்கோவில்-கொச்சிவேளி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    Next Story
    ×