என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain"

    • தொடர் மழை காரணமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
    • திருப்பூர் மாநகரில் தினமும் சுமார் 750 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை பெரும்பாலான இடங்களில் இடைவிடாது சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது. குளு, குளுவென வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் திருமூர்த்தி மலைக்கு வந்த பக்தர்கள், அமணலிங்கேசுவரர் கோவில் அருகே குளித்து விட்டு, மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர். தொடர் மழையால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 988 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 883 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    90 அடி உயரம் கொண்ட அந்த அணையில், இன்று காலை நிலவரப்படி 73 அடியாக தண்ணீர் உள்ளது. இதனால் தற்போது அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையொட்டி அணைக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் திருமூர்த்தி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 60 அடி உயரம் கொண்ட அந்த அணையில் 46.21 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையானது காலை 8 மணிக்கு மேலும் நீடித்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் மணீஷ் நாரணவரே உத்தரவிட்டார்.

    8 மணிக்கு மேல் விடுமுறை விடப்பட்டதால் அதற்கு முன்னதாக பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டனர். விடுமுறை விடப்பட்டதால் மீண்டும் பள்ளிக்கு சென்று குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதனால் பெற்றோர்கள்-மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    தொடர் மழை காரணமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    திருப்பூர் மாநகரில் தினமும் சுமார் 750 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், பொதுமக்கள் நள்ளிரவு வரை பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். இதன் காரணமாக அனைத்து வீதிகளிலும் பட்டாசு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன.

    தொடர்மழை காரணமாக துப்புரவு பணியாளர்களால் முழுமையாக குப்பையை அகற்ற முடியவில்லை. இருந்தபோதிலும் முடிந்த அளவுக்கு மழையில் நனைந்தபடி குப்பை அள்ளும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். 

    • சேலம் மாநகரம், வாழப்பாடி, கரியகோவில், ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
    • ஓமலூர்-7.4, டேனிஷ் பேட்டை-21 என மாவட்டம் முழுவதும் 122.7 மி.மீ. மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் மேக கூட்டம் இருட்டாக திரண்டு மழை வருவது போல் இருந்தது.

    இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென சாரல் மழை பெய்தது. குறிப்பாக நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. திடீரென ஏற்காட்டில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் அது கனமழையாக சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பின்னர் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. இதை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ரசித்து குதூகலம் அடைந்தனர்.

    இதே போல் சேலம் மாநகரம், வாழப்பாடி, கரியகோவில், ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    இதன் காரணமாக இரவில் கடுங்குளிர் நிலவியது. இன்று காலையும் குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சேலம்-16.5, ஏற்காடு-25.2, வாழப்பாடி-13, ஆனைமடுவு-6, ஆத்தூர்-2, கெங்கவல்லி-4, தம்மம்பட்டி-3, ஏத்தாப்பூர்-7, கரிய கோவில்-13, எடப்பாடி-1, மேட்டூர்-3.6, ஓமலூர்-7.4, டேனிஷ் பேட்டை-21 என மாவட்டம் முழுவதும் 122.7 மி.மீ. மழை பெய்தது.

    • மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவிற்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கொட்டியது.
    • விடுமுறை நாளான இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் விழுந்து வந்தது. இந்த நிலையில் தென்காசி மற்றும் குற்றாலம் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக இன்று அதிகாலை குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவிற்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் நின்று குளிக்கும் தடுப்புக் கம்பிகள் வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விடுமுறை நாளான இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • ஐந்தருவியில் மட்டும் தொடர்ந்து இன்று 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மெயினருவியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை வரை தடை நீடித்தது.

    இந்நிலையில் மலைப்பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளில் நீர் வரத்து சீரானது. இதனால் 3 நாட்களுக்கு பின்னர் மெயினருவியில் இன்று காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    ஏற்கனவே பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் தொடர்ந்து இன்று 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காலை முதலே குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது. மெயினருவியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். 

    • குஜராத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் இன்று இரவு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடைய வேண்டும்.
    • நெல்லை வரும் ரெயில் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    நெல்லை:

    குஜராத் மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு வாரம் ஒருமுறை ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 13-ந்தேதி இரவு 9.30 மணிக்கு குஜராத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் இன்று இரவு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தடைய வேண்டும். இந்நிலையில் நேற்று முன்தினம் புறப்பட்ட இந்த ரெயில் இன்று அதிகாலை மங்களூர் மற்றும் உடுப்பி இடையே வந்தபோது அந்த வழித்தடத்தில் தொடர்மழையால் மண் சரிவு ஏற்பட்டது.

    இதனால் அந்த ரெயில் மேற்கொண்டு செல்ல முடியாமல் நடுவழியல் நிறுத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் ஒரே இடத்தில் நிற்கிறது. இதனால் நெல்லை வரும் ரெயில் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நின்ற ரெயிலை இன்று காலை 8.30 மணி அளவில் எஞ்ஜின் பின்னோக்கி இழுத்துச் சென்றது. சுமார் 5 கிலோ மீட்டர் பின்னால் இழுக்கப்பட்டு அங்குள்ள ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்று பாதையில் இயக்கப்படுமா? அல்லது இதே பாதையில் மண் முழுவதும் அகற்றிய பிறகு இயக்கப்படுமா? என்பது குறித்த எந்த ஒரு தகவலும் ரெயில்வே தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக கூறப்படவில்லை எனவும் பயணிக்கும் மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும், ஐந்தருவில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுந்து வருவதால் அனைத்து அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும், ஐந்தருவில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுந்து வருவதால் அனைத்து அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது குற்றால அருவிகளில் குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் தூரத்தில் நின்று அருவிகளை ரசித்து பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மழைப்பொழிவு குறைந்து அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பருவமழை துவங்கும் முன்பாகவே அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் 10 நாட்களில் அணை நிரம்பி வழியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து முழு கொள்ளளவை எட்டுவதுண்டு.

    கடந்த ஜனவரி மாதம் முதல் 3 மாதங்களுக்கு மழை இல்லாத நிலையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து மே மாத துவக்கத்தில் 46 அடியாக சரிவடைந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 5 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் மழை வெளுத்து வாங்குகிறது. தமிழ்நாடு-கேரள எல்லை பகுதியான மறையூர், காந்தளூர், கோவில் கடவு போன்ற பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை நீடித்து வருவதால் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, கூட்டாறு போன்றவற்றிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் ,வால்பாறை மற்றும் கேரள வனப்பகுதி போன்றவற்றில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது

    கடந்த 22-ந்தேதி அணையின் நீர்மட்டம் 47 .74 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 109 கன அடியாக இருந்தது. 23-ந்தேதி அணையின் நீர்மட்டம் 47.90 அடியாக உயர்ந்தது. 25ந்தேதி அணையின் நீர்வரத்து 233 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 48 அடியாக உயர்ந்தது. 26-ந் தேதி அணைக்கு நீர்வரத்து 1590 கன அடியாக உயர்ந்தது. 27 மற்றும் 28-ந்தேதியில் அணையின் நீர்வரத்து 4809, 4850 கன அடி என புதிய உச்சத்தை தொட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டியது. தொடர்ந்து இரவு பகலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை நீடிப்பதால் நீரூற்றுகளும் சிற்றாறுகளும் உருவாகி அணையை வந்தடைவதால் அணையின் நீர்மட்டம் 68 அடியை தாண்டி உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அமராவதி அணைக்கு 3769 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 68.57 அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைய துவங்கியதால் ஒரே வாரத்தில் அணையின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் 10 நாட்களில் அணை நிரம்பி வழியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பருவமழை துவங்கும் முன்பாகவே அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை , திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பிஏபி., திட்டத்தில் பாசன வசதி பெறுகின்றன. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலமாகவும் பாலாறு மூலமும் தண்ணீர் வருகிறது.

    தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அணையில் நீர்மட்டம் 53.92 அடியாக உள்ளது. அணைக்கு 252 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 1167 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    • சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதிகள் மற்றும் குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய தடையானது இன்று காலை வரை 3-வது நாளாக நீடிக்கிறது.


    இரவிலும் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை முதல் மீண்டும் இதமான காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மேலும் நேற்று பழைய குற்றால அருவி பகுதியில் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது பழைய குற்றால அருவியை திறந்து வைத்ததற்கான கல்வெட்டு நிறுவப்பட்டிருந்ததை வனத்துறையினர் அப்புறப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியை அடுத்து அங்கு தென்காசி எம்.எல்.ஏ.வும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கல்வெட்டுகள் எதுவும் அகற்றப்படவில்லை என வனத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவருடன் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
    • நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் மங்களுரு, குடகு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இந்த இரு அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 6,233 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9,698 கன அடியாக அதிகரித்தது.

    இன்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 12,819 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 110.03 அடியாக உயர்ந்துள்ளது.

    நீர் இருப்பு 78.45 டி.எம்.சி.உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
    • பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், படகு குழாம், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், கிளியூர் நீர் வீழ்ச்சி உள்பட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் கன மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவியது. அதனை தொடர்ந்து நேற்றும் ஏற்காட்டில் சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு மேலும் குளிர்ச்சி அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவுகிறது. நேற்று சாரல் மழையிலும் படகு குழாமில் குடும்பத்துடன் ஆனந்தமாக சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    இதே போல சேலம் மாவட்டம் சங்ககிரியில் நேற்று கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி என மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது
    • ஊத்துக்கோட்டை, சோழவரம், திருத்தணி, பொன்னேரியில் விடிய விடிய மழை கொட்டியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது.

    ஊத்துக்கோட்டை, சோழவரம், திருத்தணி, பொன்னேரியில் விடிய விடிய மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் நிற்கிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி- 32

    பள்ளிப்பட்டு- 15

    ஆர்.கே.பேட்டை- 21

    சோழவரம்- 80

    பொன்னேரி- 60

    செங்குன்றம்- 33

    ஜமீன்கொரட்டூர்- 36

    பூந்தமல்லி- 49

    திருவாலங்காடு- 6

    பூண்டி- 36

    தாமரைப்பாக்கம்- 59

    திருவள்ளூர்- 21

    ஊத்துக்கோட்டை- 95

    ஆவடி- 43

    • திருச்செந்தூர்,பரமன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது.
    • செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு சாலையில் மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    திருச்செந்தூர்:

    வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ள நிலையில் திருச்செந்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, ஆலந்தலை, கல்லாமொழி, காயாமொழி, தளவாய்புரம், குமாரபுரம், இராணிமகாராஜபுரம், அடைக்கலாபுரம், நடு நாலுமூலைகிணறு, கீழநாலுமூலைகிணறு, பரமன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூரில் பெய்த மழையால் பகத்சிங் பஸ் நிலையத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்து வருகிறது. மேலும் டி.பி ரோட்டில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி, செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு சாலையில் மழைநீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலையில் தேங்கி உள்ளது. அவற்றை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×