என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists"

    • குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.
    • வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.

    ஊட்டி:

    நீலகிரி மலைப்பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் புல்வெளி பகுதிகளில் காட்டு டேலியா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துகுலுங்கி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து உள்ளன.

    சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை உள்ளிட்ட பல வண்ணங்களில் மலரும் இந்த டேலியா மலர்கள் ஊட்டி சாலையோரங்கள், கேத்தரின் நீர்வீழ்ச்சி சாலைகள், மலைச்சரிவுகள் மற்றும் தொட்டபெட்டா மலைச்சாலைகளில் பூத்து பரவி உள்ளது.

    மலையின் குளிர்காற்றில் சூரியஒளி படும்போது இந்த காட்டு மலர்கள் ஆடும் தோற்றம், பயணிகள் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற அழகிய இயற்கை காட்சியாக அமைந்து உள்ளது.

    ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், "இத்தனை வண்ண மலர்கள் இயற்கையாகவே இங்கு மலர்கின்றன என்பது ஆச்சரியம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி மலையின் இயற்கை சமநிலையை பேணுவதில் இத்தகைய காட்டு மலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை பறிப்பது அல்லது சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    நீலகிரி மலைப்பகுதிகளில் பசுமையும் மலர்களும் இணையும் இந்த காலத்தில் ஊட்டியில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை அழகின் சிறந்த அனுபவமாக திகழ்கின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், டைத்தோனியா டைவர்சிபோலியா எனப்படும் மெக்சிகன் காட்டு சூரியகாந்தி விதைகள், குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.

    வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.

    வழக்கமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி, தற்போது, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பரவலாக பூத்துக் குலுங்குகின்றன. வாசம் இல்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சிதரும் வண்ணம் கொண்டிருப்பதால், இந்த பூக்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக சூரியகாந்தி செடிகள் செழுமையாக வளர்ந்து இருப்பதால், நிலச்சரிவு ஆபத்து நீங்கி இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    • குறிஞ்சி மலர் பூத்துள்ள பகுதிகளில் அடுத்த 12 ஆண்டுகளுக்கு பின்னரே பூக்கள் பூக்கும்.
    • மலைத்தொடரின் பெரும்பாலான பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் என்பது கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முக்கிய பகுதியாகும்.

    சுற்றுச்சூழலில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் மைய பகுதியாகவும் கூடலூர் வனக்கோட்டம் விளங்கி வருகிறது. இந்த மலைத்தொடரில் கோடையிலும் வற்றாத ஆறுகள் மற்றும் நீரைகள் உள்ளன.

    இந்த நிலையில் கூடலூர் அடுத்துள்ள நாடுகாணி, ஓவேலி பகுதிகளில் உள்ள மலைத்தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    லேசான வெளிர் ஊதா நிறத்தில் பூக்கும் இந்த பூக்களை சிறு குறிஞ்சி எனவும் அழைக்கின்றனர். வருடத்தில் செப்டம்பர் மாத தட்பவெப்பநிலை குறிஞ்சி பூக்கள் பூப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

    இதனால் பெரும்பாலும் செப்டம்பர் மாதங்களில் குறிஞ்சி பூக்கள் பார்ப்பதை காணமுடிகிறது. தற்போது பூத்துள்ள இந்த நீலக்குறிஞ்சி மலர்களை அடுத்த ஓரிரு வாரங்கள் வரை பார்த்து ரசிக்க முடியும்.

    அதன்பின்னர் குறிஞ்சி மலர் பூத்துள்ள பகுதிகளில் அடுத்த 12 ஆண்டுகளுக்கு பின்னரே பூக்கள் பூக்கும். ஓவேலி மற்றும் நாடுகாணி பகுதிகளில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி மலர்களை உள்ளூர் மக்களும், அந்த வழியாக செல்லக்கூடிய வெளியூர் வாசிகள், சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தபடியே செல்கின்றனர்.

    இந்த மலைத்தொடரின் பெரும்பாலான பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இருப்பதாலும், அடிக்கடி யானைகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் வனத்துறை யாரையும் அனுமதிப்பது இல்லை. இருப்பினும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் மைய பகுதியான ஓவேலி மலைத்தொடரை குறிஞ்சி மலர்கள் பூத்து அலங்கரித்து இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

    இதற்கிடையே தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, நீலகிரி மாவட்டம் கூடலூரில் புதிதாக அறிவிக்கப்பட்ட காப்புக்காடுகளில் தற்போது நீலக்குறிஞ்சி மலர்கள் பூக்க தொடங்கி விட்டன என பூக்களின் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    • டலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் சுதந்திர தின விழா தொடர் விடுமுறை சனி மற்றும் ஞாயிற்றுகிழமை வார இறுதி விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். பின்னர் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் சுற்றுலா பயணிகள் படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் கடலில் அமைந்துள்ள கண்ணாடி பாலத்தை படகு மூலம் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்து 147 சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், காந்தி நினைவு மண்டபம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அதனைதொடர்ந்து, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இன்று சாரல் திருவிழா தொடங்கப்பட உள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில், அருவிகளில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளில் தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுவதாய் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அருவியில் தண்ணீர் வரத்து சீரான உடன் உடனடியாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என குற்றாலம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சாரல் திருவிழா தொடங்கப்பட உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் குற்றாலம் பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டி வருகிறது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

    • சேலம் மாநகரம், வாழப்பாடி, கரியகோவில், ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
    • ஓமலூர்-7.4, டேனிஷ் பேட்டை-21 என மாவட்டம் முழுவதும் 122.7 மி.மீ. மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் மேக கூட்டம் இருட்டாக திரண்டு மழை வருவது போல் இருந்தது.

    இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென சாரல் மழை பெய்தது. குறிப்பாக நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. திடீரென ஏற்காட்டில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் அது கனமழையாக சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பின்னர் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. இதை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ரசித்து குதூகலம் அடைந்தனர்.

    இதே போல் சேலம் மாநகரம், வாழப்பாடி, கரியகோவில், ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    இதன் காரணமாக இரவில் கடுங்குளிர் நிலவியது. இன்று காலையும் குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சேலம்-16.5, ஏற்காடு-25.2, வாழப்பாடி-13, ஆனைமடுவு-6, ஆத்தூர்-2, கெங்கவல்லி-4, தம்மம்பட்டி-3, ஏத்தாப்பூர்-7, கரிய கோவில்-13, எடப்பாடி-1, மேட்டூர்-3.6, ஓமலூர்-7.4, டேனிஷ் பேட்டை-21 என மாவட்டம் முழுவதும் 122.7 மி.மீ. மழை பெய்தது.

    • தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.80 அடியாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத தொடக்கத்தில் தீவிரம் அடைந்து அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அணைகள், அருவிகள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேகமலை பகுதியிலும் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வார விடுமுறை நாட்களில் அருவிகளில் நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ளது. நீர்வரத்து 1466 கன அடி. நீர் திறப்பு 969 கன அடி. நீர் இருப்பு 4337 மி.கன அடி.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.80 அடியாக உள்ளது. வரத்து 921 கன அடி. திறப்பு 1419 கன அடி. இருப்பு 4654 மி.கன அடி.

    மாவட்டத்தில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகாரிக்கும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவிற்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கொட்டியது.
    • விடுமுறை நாளான இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் விழுந்து வந்தது. இந்த நிலையில் தென்காசி மற்றும் குற்றாலம் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக இன்று அதிகாலை குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவிற்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் நின்று குளிக்கும் தடுப்புக் கம்பிகள் வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விடுமுறை நாளான இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
    • குற்றால சாரல் திருவிழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்த நிலையில் சாரல் மழையின் எதிரொலியாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.

    கடந்த ஒரு வார காலமாக போதிய மழை இல்லாமல் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் தற்போது பெய்து வரும் சாரல் மழையினால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் சாரல் திருவிழா ஏற்பாடுகளும் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குற்றாலம் பஸ் நிலையம், குற்றாலம் பேரூராட்சி, தென்காசி காசி விஸ்வ நாதர் கோவில் மற்றும் தென்காசியில் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குற்றால சாரல் திருவிழாவிற்கு அனைவரையும் வரவேற்கும் வகையில் வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    குற்றாலத்தில் இன்று காலையில் குளிர்ந்த காற்றுடன் விட்டுவிட்டு லேசான சாரல் மழை பெய்ததால் குற்றாலம், தென்காசி பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.

    • சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
    • கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் முழுமையாக இருக்கும்.

    இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தற்போது கேரளாவில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்து வருகிறது.

    தொடர் தடைக்கு பின்பு நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இதனால் குற்றாலத்தில் உள்ள பஜார் பகுதியில் அமைந்திருக்கும் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

    மேலும் பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதால் அதனை போலீசார் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி உள்ளன. மேலும் சிற்றாற்று தண்ணீர் மூலம் பல்வேறு குளங்களும் நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் அதனை நம்பி விவசாய பணியிலும் விவசாயிகள் ஈடுபட தொடங்கி உள்ளனர். 

    • மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும், ஐந்தருவில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுந்து வருவதால் அனைத்து அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும், ஐந்தருவில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுந்து வருவதால் அனைத்து அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது குற்றால அருவிகளில் குளிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகள் தூரத்தில் நின்று அருவிகளை ரசித்து பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மழைப்பொழிவு குறைந்து அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • குற்றாலம் பகுதிகளில் காலை முதல் வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது.
    • வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி, மெயின் அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் தென்காசியில் திருமண நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள வருகை புரிந்த வெளியூர் நபர்கள் பலரும் குற்றால அருவிகளில் அலைமோதினர். அவர்கள் காலை முதலே குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குற்றாலம் வருகை புரிந்தனர்.

    குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் காலை முதல் வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் குற்றாலத்தில் உள்ள பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 26-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவியை பார்வையிடவும் வனத்துறை தடை விதித்தது.
    • தொடர்ந்து மழை நீடித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது.

    நெல்லை:

    தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. அதன் தொடக்கத்தில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது.

    இதன் காரணமாக அம்பாசமுத்திரம் அருகே வனப்பகுதிக்குள் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 26-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவியை பார்வையிடவும் வனத்துறை தடை விதித்தது.

    தொடர்ந்து மழை நீடித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் மணி முத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான நிலையில் 10 நாட்கள் விதிக்கப்பட்டிருந்த தடைக்கு பின்னர் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை குறைந்த நிலையிலும் மாஞ்சோலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாஞ்சோலையில் 3 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 5 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 9 மில்லி மீட்டரும், ஊத்தில் 6 மில்லி மீட்டரும் இன்று மழை பதிவாகி உள்ளது.

    ×