என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேனி மாவட்டத்தில் கனமழை- வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
- தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.80 அடியாக உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத தொடக்கத்தில் தீவிரம் அடைந்து அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அணைகள், அருவிகள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேகமலை பகுதியிலும் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வார விடுமுறை நாட்களில் அருவிகளில் நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ளது. நீர்வரத்து 1466 கன அடி. நீர் திறப்பு 969 கன அடி. நீர் இருப்பு 4337 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.80 அடியாக உள்ளது. வரத்து 921 கன அடி. திறப்பு 1419 கன அடி. இருப்பு 4654 மி.கன அடி.
மாவட்டத்தில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகாரிக்கும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






