என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
    X

    ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

    • குறிஞ்சி மலர் பூத்துள்ள பகுதிகளில் அடுத்த 12 ஆண்டுகளுக்கு பின்னரே பூக்கள் பூக்கும்.
    • மலைத்தொடரின் பெரும்பாலான பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் என்பது கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முக்கிய பகுதியாகும்.

    சுற்றுச்சூழலில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் மைய பகுதியாகவும் கூடலூர் வனக்கோட்டம் விளங்கி வருகிறது. இந்த மலைத்தொடரில் கோடையிலும் வற்றாத ஆறுகள் மற்றும் நீரைகள் உள்ளன.

    இந்த நிலையில் கூடலூர் அடுத்துள்ள நாடுகாணி, ஓவேலி பகுதிகளில் உள்ள மலைத்தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    லேசான வெளிர் ஊதா நிறத்தில் பூக்கும் இந்த பூக்களை சிறு குறிஞ்சி எனவும் அழைக்கின்றனர். வருடத்தில் செப்டம்பர் மாத தட்பவெப்பநிலை குறிஞ்சி பூக்கள் பூப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

    இதனால் பெரும்பாலும் செப்டம்பர் மாதங்களில் குறிஞ்சி பூக்கள் பார்ப்பதை காணமுடிகிறது. தற்போது பூத்துள்ள இந்த நீலக்குறிஞ்சி மலர்களை அடுத்த ஓரிரு வாரங்கள் வரை பார்த்து ரசிக்க முடியும்.

    அதன்பின்னர் குறிஞ்சி மலர் பூத்துள்ள பகுதிகளில் அடுத்த 12 ஆண்டுகளுக்கு பின்னரே பூக்கள் பூக்கும். ஓவேலி மற்றும் நாடுகாணி பகுதிகளில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி மலர்களை உள்ளூர் மக்களும், அந்த வழியாக செல்லக்கூடிய வெளியூர் வாசிகள், சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தபடியே செல்கின்றனர்.

    இந்த மலைத்தொடரின் பெரும்பாலான பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இருப்பதாலும், அடிக்கடி யானைகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் வனத்துறை யாரையும் அனுமதிப்பது இல்லை. இருப்பினும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் மைய பகுதியான ஓவேலி மலைத்தொடரை குறிஞ்சி மலர்கள் பூத்து அலங்கரித்து இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

    இதற்கிடையே தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, நீலகிரி மாவட்டம் கூடலூரில் புதிதாக அறிவிக்கப்பட்ட காப்புக்காடுகளில் தற்போது நீலக்குறிஞ்சி மலர்கள் பூக்க தொடங்கி விட்டன என பூக்களின் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து மகிழ்கின்றனர்.

    Next Story
    ×