என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "courtallam"

    • கடந்த 2 நாட்களாக மெயின் அருவி பகுதியில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக கடந்த 16-ந்தேதி முதல் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மீண்டும் 20-ந்தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிக்கரைகள், பாதுகாப்பு தடுப்பு கம்பிகள், சேதமடைந்தன.

    பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

    கடந்த 2 நாட்களாக மெயின் அருவி பகுதியில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சீரமைப்பு பணிகள் நேற்றுடன் முடிவுற்றதால் இன்று காலை முதல் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    பழைய குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது. பழைய குற்றாலத்தில் அருவிக்கு செல்லும் சாலைகளில் ஏற்பட்ட மண் அரிப்புகள், பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் முற்றிலுமாக சீரமைத்த பிறகே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயிலின் தாக்கம் எதுவும் இல்லாமல் இதமான சூழ்நிலை குற்றாலம் பகுதியில் நீடிக்கிறது.

    விடுமுறை நாளான இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

    • ஐந்தருவியில் மட்டும் தொடர்ந்து இன்று 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மெயினருவியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை வரை தடை நீடித்தது.

    இந்நிலையில் மலைப்பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளில் நீர் வரத்து சீரானது. இதனால் 3 நாட்களுக்கு பின்னர் மெயினருவியில் இன்று காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    ஏற்கனவே பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் தொடர்ந்து இன்று 4-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காலை முதலே குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது. மெயினருவியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். 

    • குற்றாலம் பகுதிகளில் காலை முதல் வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது.
    • வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி, மெயின் அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் தென்காசியில் திருமண நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள வருகை புரிந்த வெளியூர் நபர்கள் பலரும் குற்றால அருவிகளில் அலைமோதினர். அவர்கள் காலை முதலே குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குற்றாலம் வருகை புரிந்தனர்.

    குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் காலை முதல் வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் குற்றாலத்தில் உள்ள பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
    • வெண்ணமடை படகு குழாமில் படகு சவாரி போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை பெய்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வார காலமாக சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அருவிகளிலும் குளிக்க தடையானது விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மழைப்பொழிவு குறைந்து வெயில் முகம் காட்டி வருவதால் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று பக்ரீத் விடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து வருகின்றனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் வெண்ணமடை படகு குழாமில் படகு சவாரி போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. படகுகளுக்கு வண்ணம் தீட்டும் பணி, பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படகு குழாமில் தண்ணீர் சற்று அதிகரித்ததும் படகு சவாரி தொடங்கி வைக்கப்படும் என சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் குற்றாலம் சாரல் திருவிழா நடத்தப்பட இருப்பதாகவும் 5 நாட்கள் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட விழாவானது இந்த ஆண்டு 7 நாட்களாக அதிகரிக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதிகள் மற்றும் குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய தடையானது இன்று காலை வரை 3-வது நாளாக நீடிக்கிறது.


    இரவிலும் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை முதல் மீண்டும் இதமான காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மேலும் நேற்று பழைய குற்றால அருவி பகுதியில் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது பழைய குற்றால அருவியை திறந்து வைத்ததற்கான கல்வெட்டு நிறுவப்பட்டிருந்ததை வனத்துறையினர் அப்புறப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியை அடுத்து அங்கு தென்காசி எம்.எல்.ஏ.வும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கல்வெட்டுகள் எதுவும் அகற்றப்படவில்லை என வனத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவருடன் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வனத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • ஐந்தருவியில் 5 கிளைகளும் தெரியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது.
    • மழை பெய்து வருவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் தென்காசி மாவட்டத்தில் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையத்தால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனப்பகுதிக்குள் தொடர்ந்து கனமழை பெய்தது.

    இதன் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 6 மணி முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இரவு முதல் இன்று காலை வரை வனப்பகுதிக்குள் மழை தொடர்வதால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து செம்மண் நிறத்தில் விழ தொடங்கியுள்ளது.

    ஐந்தருவியில் 5 கிளைகளும் தெரியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும், பழைய குற்றால அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.


    குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகள் முழுவதும் வானம் கருமேகக் கூட்டங்கள் நிறைந்து, சாரல் மழை பெய்து வருவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் தென்காசி மாவட்டத்தில் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.

    வனப்பகுதிக்குள் மழைப்பொழிவு குறைந்து அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    தடையால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் தூரத்தில் நின்று அருவிகளை பார்த்து குளிக்க முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

    • தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம்.
    • ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவர்.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் சீசன் காலமாக இருக்கும்.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமாக இருக்கும்போது அதனை ஒட்டிய பகுதி தென்காசி மாவட்டம் என்பதால் அங்கும் 3 மாதங்களும் சாரல் மழை பொழியும். இதனால் குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் கொட்ட தொடங்கும்.

    சுற்றுலா பயணிகள் அனைவரையும் சுண்டி இழுக்கும் வண்ணம் அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால் வியாபாரிகள் பலர் அருவி பகுதிகளை சுற்றிலும் அரசு அனுமதியுடன் தற்காலிக கடைகளை அமைத்து வியாபாரங்களை மேற்கொள்வர்.

    ஒவ்வொரு ஆண்டும் சீசன் தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் ஏலம் விடப்பட்டு வியாபாரிகள் கடைகளை அமைப்பதற்கான பணிகளை தொடங்குவர். தென்காசி மாவட்டத்தில் தற்போது கோடை காலம் என்பதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து குற்றால சீசன் தொடங்குவதற்கு முன்பாக குளிர்ந்த காற்று வீசத் தொடங்கும் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதால் சீசன் தொடங்க வாய்ப்புள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் வருகிற 4-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளதால் குற்றாலம் சீசனும் இன்னும் ஒரு சில தினங்களில் சாரல் மழையுடன் தொடங்கும் எனும் எதிர்பார்ப்பில் வியாபாரிகள் அனைவரும் தற்காலிக கடைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டை போன்று குற்றால சாரல் திருவிழா இந்த ஆண்டும் மிகப் பிரமாண்டமாக அரசு சார்பில் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் தென்காசி மாவட்ட மக்க ளிடையே ஏற்பட்டுள்ளது.

    • குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
    • அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் குளிர்ந்த காற்று வீசும்.

    கேரள மாநிலம் மூணாறு போன்று இங்கு குளுகுளு சீசன் நிலவும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.

    இந்த அருவிகளில் குளித்து சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். இங்குள்ள அருவிகளின் தண்ணீர் மூலிகை குணம் நிறைந்தது. இதனால் எவ்வளவு நேரம் அருவியில் குளித்தாலும் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருந்தாலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் வந்து குளிக்கும் ஒரே இடமாக குற்றாலம் திகழ்கிறது. இந்த குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இதே போல் தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மூலமாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும். ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சீசன் அறிகுறிகள் தொடங்கும்.

    தொடர்ந்து கேரளா மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கியதும் குற்றாலத்திலும் மழை பெய்ய தொடங்கும். இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசனுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

    ஆனாலும் சீசன் இந்த மாதத்தில் தொடங்கிவிடும் என்ற நம்பிக்கையில் அருவிக்கரைகளில் உள்ள கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலத்தில் குற்றாலத்தில் மட்டும் தினமும் ரூ. 20 லட்சம் வரை பணப்புழக்கம் இருக்கும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்லாது குற்றாலம் அருவியில் நீர்வரத்தை பொறுத்தே தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருக்கும். அதனை நம்பியும் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் குற்றாலம் சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    • உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
    • நவதிருப்பதி நவகைலாயங்கள் கோவில்களுக்கும் சுற்றுலா வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லையில் கொக்கிரகுளம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு ஓட்டலை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு முழுவதும் 28 ஓட்டல்களை நடத்தி வருகிறது. நெல்லை நெல்லையப்பர் கோவில், பாபநாசம் கோவில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில், கிருஷ்ணாபுரம் கோவில், திருக்குறுங்குடி கோவில், உவரி கப்பல் மாதா கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    நவதிருப்பதி நவகைலாயங்கள் கோவில்களுக்கும் சுற்றுலா வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது.
    • நேற்று மாலையில் பெய்த சாரல் மழையினால் குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் காலங்களில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.

    அதாவது ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கி சீசன் களைகட்டும். இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கிவிட்ட நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் மிதமான சாரல் மழை பொழிய தொடங்கியது.

    செங்கோட்டை, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்தது. அங்கு இதமான குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நேற்று மாலையில் பெய்த சாரல் மழையினால் குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. வார விடுமுறை நாள் என்பதால் அதில் தற்போது சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ தொடங்கியுள்ளனர். மெயின் அருவி முழுவதும் பாறையாக காட்சியளித்த நிலையில் அதில் சற்று தண்ணீர் வழிய தொடங்கி உள்ளதால் எப்பொழுது தண்ணீர் அதிகரிக்கும் ஆனந்த குளியல் போடலாம் என சுற்றுலா பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், அண்டை மாநிலம் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் முகாமிடுவார்கள்.
    • மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சீசன்களை கட்டும்.

    அப்போது குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், அண்டை மாநிலம் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் முகாமிடுவார்கள்.

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் இன்னும் பொழியாததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் உட்பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மலை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு மட்டும் தண்ணீர் வரத்து தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    அருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அருவியில் குளிக்க வந்த பயணிகள் அனைவரையும் வரிசையில் நின்று குளித்து செல்ல அறிவுறுத்தினர்.

    • கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • வெளியூர்களில் இருந்து குடும்பமாக வாகன மூலம் வருகிறோம். ஆனால் இரவில் தங்குவதற்கு போதிய விடுதிகள் இல்லை.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக குற்றாலம் அருவிகள் உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படும் பல்வேறு மூலிகை செடிகள், மரங்கள் நிறைந்த வனப்பகுதியின் நடுவே வந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய அருவிகளில் குளித்தாலே தனி உற்சாகம் தான் எனவும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் நீர்வீழ்ச்சிகளாக கருதப்பட்டு வருகிறது.

    இதனால் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை நேரத்தில் இங்கு சீசன் களைகட்டும். குற்றால அருவிகளில் குளிப்பதற்காக உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் படையெடுத்து வருவார்கள்.

    தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்றும், இன்றும் அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்களின் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

    இன்று காலை ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது. அவர்களை போலீசார் வரிசையில் நின்று பாதுகாப்புடன் குளித்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் வாகன நிறுத்தும் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டது. வாகன நெருக்கடி மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் அருவி பகுதிகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

    அருவி பகுதிகளை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்வதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    குற்றாலத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் கூறுகையில், சீசன் காலங்களில் வந்து குளிப்பதற்காக நாங்கள் வெளியூர்களில் இருந்து குடும்பமாக வாகன மூலம் வருகிறோம். ஆனால் இரவில் தங்குவதற்கு போதிய விடுதிகள் இல்லை. கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது. விடுமுறை நாட்களில் வரும் பொழுது அரசு விடுதிகள் மட்டுமின்றி தனியார் விடுதிகளும் நிரம்பி வழிவதால் தங்கும் அறைகளை தேடி சுற்றுலா பயணிகள் அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாத்துறை மற்றும் தமிழக அரசின் சார்பில் குறைந்த விலையில் கூடுதல் தங்கும் விடுதிகளை சுற்றுலா பயணிகளுக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றனர்.

    ×