search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தண்ணீரின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது குற்றாலம்: சீசன் தொடங்குவது எப்போது?
    X

    தண்ணீரின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது குற்றாலம்: சீசன் தொடங்குவது எப்போது?

    • குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
    • அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் குளிர்ந்த காற்று வீசும்.

    கேரள மாநிலம் மூணாறு போன்று இங்கு குளுகுளு சீசன் நிலவும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி மற்றும் குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும்.

    இந்த அருவிகளில் குளித்து சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். இங்குள்ள அருவிகளின் தண்ணீர் மூலிகை குணம் நிறைந்தது. இதனால் எவ்வளவு நேரம் அருவியில் குளித்தாலும் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருந்தாலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் வந்து குளிக்கும் ஒரே இடமாக குற்றாலம் திகழ்கிறது. இந்த குற்றாலம் சீசனை நம்பி குற்றாலம், காசிமேஜர்புரம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் வியாபாரிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    இதே போல் தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் மூலமாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும். ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் சீசன் அறிகுறிகள் தொடங்கும்.

    தொடர்ந்து கேரளா மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கியதும் குற்றாலத்திலும் மழை பெய்ய தொடங்கும். இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசனுக்கான அறிகுறிகள் தென்படவில்லை. அருவிக்கரைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அருவிகளில் வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன.

    ஆனாலும் சீசன் இந்த மாதத்தில் தொடங்கிவிடும் என்ற நம்பிக்கையில் அருவிக்கரைகளில் உள்ள கடைகளை சீரமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலத்தில் குற்றாலத்தில் மட்டும் தினமும் ரூ. 20 லட்சம் வரை பணப்புழக்கம் இருக்கும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமல்லாது குற்றாலம் அருவியில் நீர்வரத்தை பொறுத்தே தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து இருக்கும். அதனை நம்பியும் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் குற்றாலம் சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    Next Story
    ×