என் மலர்
தென்காசி
- வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
- இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார்.
தென்காசி:
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காசிநாதபுரத்தில் சீவலப்பேரி சுடலை கோவிலில் சாமி கும்பிடுவதில் வரி வசூலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு மணிவேல் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 3 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார். இந்த கொலை வக்கீல் குற்றம் சாட்டப்பட்டிருந்த விநாயகம், உலகநாதன், சிவ சுப்பிரமணியன், சுடலை, முத்துக்குமார், சுப்பிரமணியன், சந்தானம், சிவன் சேட், மாரி ராஜ், பிச்சையா, வேல் துரை, கருப்பையா, ரமேஷ், பண்டாரம், மணிவேல், கலைவாணன், முத்துராஜ் ஆகியோருக்கு கொலை குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் கொலை முயற்சிக்கு ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனை தனித்தனியாக அறிவித்தும் மற்ற குற்றவாளிகள் அனைவருக்கும் தலா ரூ. 41 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் வேலுச்சாமி வாதாடினார்.
- படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கவலைக்கிடமாக நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் கூலக்கடை பஜார் என்ற இடத்தில் அவரது அலுவலகத்திலேயே வைத்து அவர் மர்ம நபரால் அரிவாளால் வெட்டப்பட்டார்
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கவலைக்கிடமாக நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை வெட்டிவிட்டு, எந்த பயமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு வழக்கறிஞர் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- எஸ்.ஐ.ஆரில் எந்தவிதமான குளறுபடியும் இல்லை.
- எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை.
தென்காசி:
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் 4.0 என்ற நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.
இதையொட்டி தெற்கே உள்ள காசியாம் தென்காசியில் இருந்து வடக்கே உள்ள காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன பயணம் இன்று தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் வாகன பயணத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, தென்காசி பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாரணாசிக்கு புறப்பட்ட 15 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு எங்கு சென்றாலும் தமிழ் மொழி பற்றியும் அதன் கலாச்சாரத்தை பற்றியும் பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டினை 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
எஸ்.ஐ.ஆரில் எந்த விதமான குளறுபடியும் இல்லை. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக தான் தி.மு.க. போராடுகிறது.
மேலும், 50 வருட கால அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து விட்டு, அப்போது நல்லாட்சி இல்லாதது போல் தற்போது த.வெ.க.வின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது.
பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். அ.தி.மு.க.வில் இருந்து தற்போது செங்கோட்டையன் த.வெ.க.விற்கு சென்று உள்ள நிலையில், அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது.
எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
- பூப்பறித்து விட்டு 3 பேரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
- சம்பவ இடத்திலேயே அருள் செல்வபிரபு, உஷா, பிளஸ்சி ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாத புரத்தை சேர்ந்தவர் அருள் செல்வபிரபு (வயது 50). இவர் சுரண்டை பகுதியில் மெட்டல் பாலீஷ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா (40). இவர் நர்சிங் முடித்து விட்டு மெடிக்கல் வைத்து நடத்தி வந்தார்.
மேலும் சுரண்டை நகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராகவும் இருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் சுரண்டையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் ரெட்டைகுளம் பகுதியில் இவர்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தோட்டத்தில் தற்போது பூ பயிரிடப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை அருள் செல்வபிரபு தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கையான அதே பகுதியை சேர்ந்த பிளஸ்சி (35) ஆகியோரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அங்கு பூப்பறித்து விட்டு 3 பேரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் வந்தபோது பின்னால் வந்த காய்கறி லாரியின் முன்பக்க பகுதி மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் 3 பேரும் சாலையில் விழுந்தனர். அப்போது மோதிய லாரியின் பின்பக்க டயர் 3 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அருள் செல்வபிரபு, உஷா, பிளஸ்சி ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேர் உடலையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக 3 பேரும் விபத்தில் பலியான செய்தியை கேட்டு அவர்களது உறவினர்கள் அங்கு சென்று உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
- பெண்கள் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
- சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது. மெயின் அருவி தவிர்த்து புலியருவி, சிற்றருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்த தடுப்புகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருந்ததால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திய பின்பு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என நேற்று வரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலையில் மழை பொழிவு முற்றிலும் குறைந்து குற்றாலம் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து பெண்கள் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
6 நாட்கள் தொடர் தடைக்கு பின்பு குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.
- தென்காசி பேருந்து விபத்தில் புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா உயிரிழந்தார்.
- உயிரிழந்த மல்லிகா பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த பேருந்து விபத்தில் தாயை பறிகொடுத்த பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு அரசு வேலைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
உயிரிழந்தவர்களில் ஒருவரான புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா, கணவரை இழந்த நிலையிலும் பீடி சுற்றி, பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது.
- விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் விழுகிறது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. சாலைகளில் எதிரில் வந்த வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு வெளிச்சம் குறைவாக இருந்தது. பெரும்பாலான வாகனங்கள் பகல் வேளையிலேயே முகப்பு விளக்கை எரிய விட்டவாறு இயக்கப்பட்டன. தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் விழுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். தற்போது இந்த தடை 5-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது. குற்றாலம் மெயின் அருவியில் விழுந்த வெள்ளம் குற்றாலம் குற்றா லநாத சுவாமி கோவில் வளாகம் மற்றும் சன்னதி பஜார் பகுதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட போலீசார் தடை விதித்தனர்.
தென்காசி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
மேலும் தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடைய நல்லூர், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய பாசன குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளது. எனவே விவசாயிகள் நெல் நாற்று நடவு செய்யும் பணிகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.
- விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாயினர்.
- காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.
பஸ்கள் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பேருந்து மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய கேஎஸ்ஆர் என்ற தனியார் பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
- சங்கரன்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது.
- பஸ்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி அதில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்து அலறித்துடித்தனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்து பற்றிய தகவல் வருமாறு:-
தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இன்று காலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
இதேபோல சங்கரன்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த 2 பஸ்களும் கடையநல்லூரை அடுத்த இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த பயங்கர விபத்தில் பஸ்களின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. பஸ்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி அதில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்து அலறித்துடித்தனர்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவஇடத்திற்கு மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், டி.எஸ்.பி.க்கள் தமிழ் இனியன், மீனாட்சி நாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
மேலும் கடையநல்லூர், தென்காசியில் இருந்து தீயணைப்பு துறையினரும், ஆம்புலன்ஸ் குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் குழுவினரும், தன்னார்வலர்களும் வரவழைக்கப்பட்டனர்.
மேலும் ஜே.சி.பி. எந்திரங்களும் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து பஸ்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.
இந்த கோர விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 6 பேர் பலியாயினர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மாற்றுப்பாதையில் வாக னங்களை திருப்பிவிட்டு போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து மீட்ப பணி நடைபெற்றது.
பஸ்கள் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- பெரும்பாலான குளங்களும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை முதல் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.
இன்றுடன் 4-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். எனினும் பலரும் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் நின்று தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் பெரும்பாலான குளங்களும் வேகமாக நிரம்பி வருவதால் விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் குளங்களுக்கு செல்லும் கால்வாய்களில் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் தென்காசி குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
- குற்றால அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருகின்றனர்.
- ஐந்தருவியிலும் காலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவியில் கன மழையின் காரணமாக சற்று தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வரை தண்ணீரின் சீற்றம் குறையாத காரணத்தினால் குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குற்றால அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருகின்றனர்.
ஐந்தருவியிலும் காலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீரென்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்ச்சியான சூழலும் நிலவியது. மதியம் 12 மணியளவில் நெல்லை மாவட்டம் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி மற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாநகர பகுதியான நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாலையிலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது.
இதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலம், தென்காசி, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், மேக்கரை, மத்தளம்பாறை, இலஞ்சி, குத்துக்கல்வலசை, வல்லம், ஆய்க்குடி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக செங்கோட்டையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
குற்றாலத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதிக்குள்ளும் கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மாலை மெயின் அருவியில் சற்று தண்ணீர் அதிகரித்ததால் அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றி, குளிக்க தடை விதித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீரென்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.






