என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: கடனா அணை பகுதியில் 24 செ.மீ. பதிவு
- நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- மாவட்டம் முழுவதும் அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையிலும் பரவலாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வழக்கமான வெயில் அடித்தது. மாலையில் நாங்குநேரி பகுதியில் லேசான சாரல் பெய்தது.
இந்நிலையில் சேரன்மகாதேவி, அம்பை சுற்று வட்டாரங்களில் இரவில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இடைவிடாமல் கனமழையாக பொழிய தொடங்கியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சேரன்மகாதேவி சுற்று வட்டாரத்தில் இன்று காலை நிலவரப்படி 10 சென்டி மீட்டர் மழை பெய்தது. அம்பையில் 9 சென்டி மீட்டரும், கண்ணடியன் கால்வாய் பகுதி, களக்காடு சுற்றுவட்டாரங்களில் 5 சென்டிமீட்டரும், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டியில் தலா 4 சென்டிமீட்டரும் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. மாஞ்சோலையில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 8 சென்டி மீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 281 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 955 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் நேற்று மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 78 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 465 கனஅடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டம் முழுவதும் அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் அம்பை சுற்றுவட்டாரத்தில் பிசான பருவ நெல் சாகுபடி பணியையொட்டி நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் இரவில் பெய்த கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வயல்வெளிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவில் தொடங்கிய மழை இன்று காலை வரையிலும் இடைவிடாமல் பெய்தது.
கடனா அணை நீர்பிடிப்பு பகுதியில் 52 கனஅடி நீர் வந்த இடத்தில் இன்று காலை வினாடிக்கு 1,265 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் ராமநதி அணைக்கு 312 கனஅடியும், கருப்பாநதியில் 25 கனஅடியும் வந்து கொண்டிருக்கிறது.
கடனா அணை நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக 24 சென்டிமீட்டர் மழை கொட்டியது. அணை அடி வாரத்தில் உள்ள சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, சம்பன் குளம், கல்யாணிபுரம் சுற்றுவட்டாரத்திலும் மிக கனமழை கொட்டியது.
ராமநதியில் 12 சென்டி மீட்டரும், கருப்பாநதியில் 7½ சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ஆய்குடி சுற்றுவட்டாரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதேபோல் சிவகிரி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டாரங்களில் விடிய, விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதேபோல் ஆலங்குளம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு தொடங்கி இடைவிடாது கனமழை பெய்தது. இன்று அதிகாலை வரையிலும் சற்று கூட இடைவெளி விடாமல் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. திடீர் கனமழையால் மக்கள் அவதி அடைந்தனர்.






