search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenkasi Rain"

    • களக்காடு, சேரன்மகாதேவி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
    • தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு பிறகு பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அம்பை, மூலக்கரைப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.

    அம்பை ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் கொட்டும் மழையில் நனைந்தவாறு சோப்பு போட்டு குளித்து கொண்டிருந்தார். இதனை அப்பகுதியில் நின்றவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    களக்காடு, சேரன்மகாதேவி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பையில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மூலக்கரைப்பட்டியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாநகரில் பாளையில் 2 மில்லிமீட்டர் மழை கொட்டியது. மாநகர பகுதியில் லேசான மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசத்தில் பலத்த மழை பெய்தது. அங்கு 58 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சேர்வலாறில் 23 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 22.8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணைகளுக்கு வினாடிக்கு 975 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் 45.35 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணைக்கு 20 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. வடக்கு பச்சையாறு அணை 50 அடி கொள்ளளவு கொண்ட நிலையில், அந்த அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் 6.75 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 செ.மீட்டர் மழை பெய்துஉள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அதனை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக செங்கோட்டை, ஆய்குடியில் மணிக்கணக்கில் மழை கொட்டியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 62 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. ஒரு சில கிராமங்களில் இடி-மின்னலுடன் பெய்த கனமழையால் வீடுகளில் டி.வி, இன்வெட்டர்கள், பிரிட்ஜ்கள் சேதம் அடைந்தன. மேலும் இடி-மின்னலால் மின்தடை ஏற்பட்டது. இரவிலும் ஒரு சில கிராமங்களில் நீடித்த மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டர் மழை கொட்டியது. குண்டாறு அணையில் 22 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, மணியாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததது. அதிகபட்சமாக கயத்தாறில் 30.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. விளாத்திகுளம், எட்டயபுரம், கீழ அரசடி, வேடநத்தம், சூரன்குடியிலும் பலத்த மழை பெய்தது. சாத்தான்குளத்தில் 7.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    • ராதாபுரத்தில் 13 மில்லி மீட்டரும், நாங்குநேரியில் 14 மில்லி மீட்டரும், களக்காட்டில் 9 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
    • கொடுமுடியாறு அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நெல்லை:

    தென்கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

    அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்தது.

    இந்நிலையில் நேற்று இரவு முதல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணை பகுதிகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் மலைப்பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாபநாசம், ராதாபுரம், களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    ராதாபுரத்தில் 13 மில்லி மீட்டரும், நாங்குநேரியில் 14 மில்லி மீட்டரும், களக்காட்டில் 9 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. கொடுமுடியாறு அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நாலுமுக்கில் 18 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 17 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இதுதவிர காக்காச்சி, ஊத்து பகுதியில் தலா 9 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாநகரப் பகுதியிலும் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இன்று மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசு செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. ஆனால் அதிகாலை முதலே பெய்து வரும் மழை காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    மாநகரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பேட்டை செக்போஸ்ட் முதல் நயினார் குளம் ஆர்ச் வரையிலான சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் தொண்டர் சன்னதி, நயினார் குளம் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன.

    இதன் காரணமாக காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியில் சரக்கு இறக்கும் வாகனங்கள் சரக்குகளை இறக்காமல் அப்படியே நயினர்குளம் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளதால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.

    வண்ணார்ப்பேட்டை புதிய பஸ் நிலையம், மேலப்பாளையம், பாளை சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மீண்டும் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மாவட்டம் முழுவதிலும் தற்போது நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த சூழ்நிலையில் மழை பெய்வதால் விவசாயிகள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர். ஒரு சில இடங்களில் ஏற்கனவே அறுவடை பணிகள் முடிந்து விட்டாலும் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் அறுவடை பணிகள் முடியவில்லை என்பதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருச்செந்தூர், குலசேகரபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்து வரும் பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குலசேகரப்பட்டினத்தில் அதிகபட்சமாக 20 மில்லி மீட்டரும், திருச்செந்தூரில் 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    தூத்துக்குடி, சாத்தான்குளம் காயல்பட்டினம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எட்டயபுரம், காடல்குடி, வைப்பாரு, கீழ அரசடி ஆகிய இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. கயத்தாறு, மணியாச்சி, கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    ×