search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை: ஆலங்குளத்தில் வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்
    X

    மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதையும், அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வதையும் படத்தில் காணலாம்.

    தென்காசி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை: ஆலங்குளத்தில் வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்

    • களக்காடு, சேரன்மகாதேவி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
    • தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு பிறகு பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அம்பை, மூலக்கரைப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.

    அம்பை ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் கொட்டும் மழையில் நனைந்தவாறு சோப்பு போட்டு குளித்து கொண்டிருந்தார். இதனை அப்பகுதியில் நின்றவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    களக்காடு, சேரன்மகாதேவி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பையில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மூலக்கரைப்பட்டியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாநகரில் பாளையில் 2 மில்லிமீட்டர் மழை கொட்டியது. மாநகர பகுதியில் லேசான மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசத்தில் பலத்த மழை பெய்தது. அங்கு 58 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சேர்வலாறில் 23 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 22.8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணைகளுக்கு வினாடிக்கு 975 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் 45.35 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணைக்கு 20 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. வடக்கு பச்சையாறு அணை 50 அடி கொள்ளளவு கொண்ட நிலையில், அந்த அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் 6.75 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 செ.மீட்டர் மழை பெய்துஉள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அதனை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக செங்கோட்டை, ஆய்குடியில் மணிக்கணக்கில் மழை கொட்டியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 62 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. ஒரு சில கிராமங்களில் இடி-மின்னலுடன் பெய்த கனமழையால் வீடுகளில் டி.வி, இன்வெட்டர்கள், பிரிட்ஜ்கள் சேதம் அடைந்தன. மேலும் இடி-மின்னலால் மின்தடை ஏற்பட்டது. இரவிலும் ஒரு சில கிராமங்களில் நீடித்த மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 40 மில்லிமீட்டர் மழை கொட்டியது. குண்டாறு அணையில் 22 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, மணியாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததது. அதிகபட்சமாக கயத்தாறில் 30.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. விளாத்திகுளம், எட்டயபுரம், கீழ அரசடி, வேடநத்தம், சூரன்குடியிலும் பலத்த மழை பெய்தது. சாத்தான்குளத்தில் 7.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    Next Story
    ×