என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல்லை, தென்காசியில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கொடுமுடியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு
- 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 86 அடியை எட்டியுள்ளது.
- சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மதியம் வரையிலும் கனமழை பெய்த நிலையில், மாலை நேரத்திலும் பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாநகரில் நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்தது. பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து ஓடியது.
டவுனில் நேற்று பகலில் பெய்த கனமழை காரணமாக டவுன் சுந்தரர் தெருவில் ஒரு வீட்டின் மாடி அறையானது முழுமையாக இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வேளாண்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசாமி என்பவர் தனது மனைவி மற்றும் மகன்களான சிவா, பரமேஸ்வரன் ஆகியோருடன் வசித்து வந்தார்.
தற்போது சிவா, பரமேஸ்வரன் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று 2 பேரும் வெளியே சென்ற நேரத்தில் வீடு இடிந்தது. இதனால் பெரிய அளவு பாதிப்பு இல்லை. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், டவுன் தாசில்தார் தலைமையில் குழு சென்று பார்வையிட்டனர்.
மாநகரில் இன்று காலை நிலவரப்படி பாளையில் 26 மில்லிமீட்டரும், நெல்லையில் 21.60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,425 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 944 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 86 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 93 அடியாக உள்ளது.
மாவட்டத்தில் களக்காடு சுற்றுவட்டாரத்தில் 8 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நம்பியாற்றிலும் வெள்ளம் அதிக அளவு சென்றது. நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் கொட்டித்தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.
இந்த பகுதிகளில் பிற்பகலில் மழை குறைந்த நிலையில், இன்று காலை வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. அம்பை பகுதியில் நேற்று இரவில் சற்று கனமழை பெய்தது. அங்கு 77 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொடுமுடியாறு, நம்பியாறு என அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக 52 அடி கொண்ட கொடுமுடியாறு அணை பகுதியில் தொடர் மழையால் நேற்று ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்து 31.25 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 201 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் வறண்டு போன குளங்கள், கால்வாய்களில் நீர்வரத்து சற்று ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகாலை தொடங்கி மாலை வரையிலும் கொட்டித்தீர்த்த கனமழையால் கடனா அணையில் 1 அடியும், ராமநதி அணையில் 1½ அடியும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 42.28 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 47½ அடியானது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 115 அடியை கடந்துள்ளது.
நகர் பகுதியை பொறுத்தவரை செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 35 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி பகுதியில் நேற்று பிற்பகலில் இருந்து மழை சற்று குறைந்துவிட்டது. எனினும் நேற்று முன்தினம் தொடங்கி பெய்த மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தொடர்மழையால் மின்தடை ஏற்பட்டது. சில கிராமங்களில் மாலையில் தொடங்கி சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. ஆனாலும் மின் ஊழியர்கள் கொட்டும் மழையிலும் மின்தடங்கலை சீர் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகரில் பரவலாக மழை பெய்தது. கழுகுமலை சுற்றுவட்டாரத்தில் 10 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. திருச்செந்தூர், கோவில்பட்டி, சூரன்குடி, வைப்பார், கீழ அரசடி, மணியாச்சி, கயத்தாறு சுற்றுவட்டாரங்களில் பரவலான மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.






