என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை மழை"

    • கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 24 மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 122 அடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அந்த அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 130.71 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 11 அடி உயர்ந்து 141.27 அடியை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 6 ஆயிரத்து 178 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 700 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 118 அடி கொண்ட மணி முத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,974 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மலைப்பகுதியில் தொடரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் சற்று அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நீர் ஆற்றில் கலந்து காட்டாற்று வெள்ளமாக செல்கிறது. இதன் காரணமாக வழக்கத்தை விட ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

    நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை டவுன் குறுக்குத்துறையில் உள்ள முருகன்கோவில் மண்டபம் முழுவதுமாக மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகரில் நேற்று பகலில் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது.

    நள்ளிரவு வரையிலும் பெய்த கனமழையால் சாலை பள்ளங்களில் குளம் போல் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. அதிகபட்சமாக நெல்லையில் 56 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    புறநகர் பகுதியை பொறுத்தவரை சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 1 வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் அடவிநயினார், குண்டாறு அணைகள் நிரம்பி வழியும் நிலையில், நேற்றும் பரவலாக பெய்த மழையால் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக அந்த அணைகளும் முழு கொள்ளளவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    குண்டாறு அணை பகுதியிலும், கடனா அணை பகுதிகளிலும் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. ராமநதி, கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 71 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 73 ½ அடியாகவும் இருக்கிறது. 71 அடி கொண்ட கருப்பாநதி அணை நீர் மட்டம் 62 அடியை நெருங்கி உள்ளது.

    நகர் பகுதியை பொறுத்தவரை செங்கோட்டை, தென்காசி மற்றும் ஆய்குடி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    இதேபோல் சங்கரன் கோவில் மற்றும் சிவகிரி சுற்று வட்டாரத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து பெய்த மழையால் குளங்கள் நீர்இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளான திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினம் சுற்று வட்டாரத்தில் மிக கனமழை பெய்தது. குலசேகரன்பட்டினம், திருச்செந்தூரில் 13 சென்டி மீட்டரும், காயல்பட்டினத்தில் 10 சென்டிமீட்டரும் மழை பெய்தது.

    கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்தி குளம், சூரங்குடி, ஒட்டப்பிடாரம், மணியாச்சி, வேடநத்தம், கீழஅரசடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளும் தீவிரம் எடுத்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

    • குளங்களை பொருத்தவரை 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
    • தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கழுகுமலை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு எஸ்டேட் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளுக்கு முன்பிருந்தே அந்த பகுதிகளில் தொடர் கனமழை பெய்கிறது.

    இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கில் 30 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 26 மில்லி மீட்டரும் மழை பெய்தது. காக்காச்சி, மாஞ்சோலையி லும் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. தொடர்மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் 14-வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கிறது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தபோதிலும் வினாடிக்கு 1,084 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 143 அடி கொண்ட அந்த அணை நீர் இருப்பு இன்று மேலும் 1 அடி உயர்ந்து 108 அடியை கடந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 121.32 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 102 அடியை தொட்டது.

    மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் குளிர்ந்த ஈரப்பதமான மெல்லிய சாரல் காற்று வீசியபடி இருந்தது. இதனால் சீதோஷண நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தில் இந்த மாதத்தில் கடந்த 23-ந்தேதி வரை 198.95 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது வழக்கமான அளவான 166 மில்லிமீட்டரை விட 19.85 சதவீதம் அதிகமாகும்.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 498 ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. குளங்களை பொருத்தவரை 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நகர பகுதிகளான தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்றுவட்டாரங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் மெல்லிய சாரல் அடித்தது. ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த மேற்கு திசை சாரல் காற்று வீசியது.

    ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தின்போது வீசும் காற்றை போல வீசியதால் சீதோஷண நிலை மாறியது.

    அணைகளை பொறுத்தவரை குண்டாறு அணை பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    இந்த அணை மூலமாக செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக இந்த அணை நிரம்பி வழியும் நிலையில் விவசாய பணிகள் தீவிரம் எடுத்துள்ளது.

    கடனா அணை நீர்மட்டம் 58½ அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 69½ அடியாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று காலை 129.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 48 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    அந்த அணை நிரம்ப இன்னும் 3 அடி தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றும் காலை முதலே பரவலாக மழை பெய்வதால் இன்று இரவுக்குள் அணை நீர்மட்டம் முழு கொள்ள ளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கழுகுமலை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. வைப்பாறு, காடல்குடி பகுதியில் லேசான சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். கோவில்பட்டி சுற்ற வட்டாரத்தில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    • களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 102.33 அடியாக உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. 2 நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, ராதாபுரம், களக்காடு, மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டாரத்தில் 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் சாலைகள், வயல்வெளிகளில் வெள்ளம் தேங்கி கிடக்கிறது. அம்பை, சேரன்மகாதேவி சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது.

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் சுற்று வட்டாரத்தில் நேற்று பகலில் தொடங்கி இரவு வரையிலும் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நான்குவழிச்சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. அங்குள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையம் பகுதியில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதுவே மாவட்டத்தின் அதிகபட்ச மழை அளவாகும்.

    நெல்லையில் மாநகர் மற்றும் புறநகர் என அனைத்து இடங்களிலும் பெய்து வரும் தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் செல்கிறது. அணை பகுதிகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படாத சூழ்நிலையிலும், காட்டாற்று வெள்ளம் வந்து ஆற்றில் சேருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை நீடிக்கிறது. சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் 37 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ராதாபுரத்தில் அதிகபட்சமாக 47 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. அணைகளுக்கு வினாடிக்கு 1614 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 2 அடி உயர்ந்து 88 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 102.33 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 1 அடி உயர்ந்து 94 அடியை எட்டியுள்ளது.

    அதேநேரம் கொடுமுடியாறு அணை நீர் இருப்பு நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்திருந்த நிலையில் இன்று மேலும் 4 அடி உயர்ந்து 35½ அடியை எட்டியுள்ளது. அணைகள் நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாநகரில் நேற்று பகலில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் தீபாவளி விற்பனை சற்று பாதிக்கப்பட்டது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் டவுன் ரதவீதிகளில் சாலையோர வியாபாரிகள் அதிக அளவு கடை அமைத்திருந்தனர். ஆனால் மழை பெய்வதும், ஓய்வதுமாக இருந்ததால் கடும் அவதி அடைந்தனர். மாநகரில் பாளையில் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து, மாஞ்சோலையில் 8 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 9 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாமல் நீடித்து வருகிறது.

    • 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 86 அடியை எட்டியுள்ளது.
    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மதியம் வரையிலும் கனமழை பெய்த நிலையில், மாலை நேரத்திலும் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாநகரில் நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்தது. பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து ஓடியது.

    டவுனில் நேற்று பகலில் பெய்த கனமழை காரணமாக டவுன் சுந்தரர் தெருவில் ஒரு வீட்டின் மாடி அறையானது முழுமையாக இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வேளாண்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசாமி என்பவர் தனது மனைவி மற்றும் மகன்களான சிவா, பரமேஸ்வரன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

    தற்போது சிவா, பரமேஸ்வரன் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று 2 பேரும் வெளியே சென்ற நேரத்தில் வீடு இடிந்தது. இதனால் பெரிய அளவு பாதிப்பு இல்லை. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், டவுன் தாசில்தார் தலைமையில் குழு சென்று பார்வையிட்டனர்.

    மாநகரில் இன்று காலை நிலவரப்படி பாளையில் 26 மில்லிமீட்டரும், நெல்லையில் 21.60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,425 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 944 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 86 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 93 அடியாக உள்ளது.

    மாவட்டத்தில் களக்காடு சுற்றுவட்டாரத்தில் 8 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நம்பியாற்றிலும் வெள்ளம் அதிக அளவு சென்றது. நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் கொட்டித்தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.

    இந்த பகுதிகளில் பிற்பகலில் மழை குறைந்த நிலையில், இன்று காலை வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. அம்பை பகுதியில் நேற்று இரவில் சற்று கனமழை பெய்தது. அங்கு 77 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொடுமுடியாறு, நம்பியாறு என அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக 52 அடி கொண்ட கொடுமுடியாறு அணை பகுதியில் தொடர் மழையால் நேற்று ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்து 31.25 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 201 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் வறண்டு போன குளங்கள், கால்வாய்களில் நீர்வரத்து சற்று ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகாலை தொடங்கி மாலை வரையிலும் கொட்டித்தீர்த்த கனமழையால் கடனா அணையில் 1 அடியும், ராமநதி அணையில் 1½ அடியும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 42.28 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 47½ அடியானது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 115 அடியை கடந்துள்ளது.

    நகர் பகுதியை பொறுத்தவரை செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 35 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி பகுதியில் நேற்று பிற்பகலில் இருந்து மழை சற்று குறைந்துவிட்டது. எனினும் நேற்று முன்தினம் தொடங்கி பெய்த மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தொடர்மழையால் மின்தடை ஏற்பட்டது. சில கிராமங்களில் மாலையில் தொடங்கி சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. ஆனாலும் மின் ஊழியர்கள் கொட்டும் மழையிலும் மின்தடங்கலை சீர் செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகரில் பரவலாக மழை பெய்தது. கழுகுமலை சுற்றுவட்டாரத்தில் 10 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. திருச்செந்தூர், கோவில்பட்டி, சூரன்குடி, வைப்பார், கீழ அரசடி, மணியாச்சி, கயத்தாறு சுற்றுவட்டாரங்களில் பரவலான மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    • தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும்.
    • சென்னையில் இன்று பகலில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை தொடர்ந்து 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெரிய மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும். பின்னர் படிப்படியாகக் குறையும். கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லையின் பிற உள் பகுதிகளில் நண்பகல் அல்லது மாலை வரை மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் இன்று பகலில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். 

    • மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி நகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 118 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று அணையில் 118.55 அடி நீர் இருந்த நிலையில், இன்று நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 119.75 அடியாக உள்ளது.

    மற்றொரு பிரதான அணையான சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் சுமார் 15 அடி வரை உயர்ந்துள்ளது. நேற்று அந்த அணையில் நீர் இருப்பு 118.11 அடியாக இருந்தது.

    தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்து 123.52 அடியாக உயர்ந்தது அந்த அணையில் ஒரே நாளில் 5 அடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாலுமுக்கு மற்றும் ஊத்து எஸ்டேட்டுகளில் தொடர்ச்சியாக 3 நாட்கள் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 6½ சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மேலும் காக்காச்சியில் 5½ சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி நகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டமாக காட்சியளிப்பதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணைகளை பொறுத்த வரை 85 அடி கொண்ட கடனா அணைக்கு வினாடிக்கு 132 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் நேற்று இன்று ½ அடி உயர்ந்து 67½ அடியை எட்டியுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 2½ அடி உயர்ந்து 72½ அடியை எட்டியது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 61 அடியை நெருங்கி உள்ளது.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • தண்டவாளங்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளதால் ரெயில்கள் இயக்க முடியாத நிலை.

    திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினத்தில் இருந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. கோவில்பட்டியில் எங்கு பார்த்தாலும் மழை வெள்ளமாக உள்ளது.

    இதனால் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியிலும் குளம்போல் வெள்ளம் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை- நெல்லை, நெல்லை- சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நிஜாமுதீன்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் விரைவு ரெயில் ஆகியவை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சாத்தூர் ரெயில் நிலையத்தில் கோவை பயணிகள் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் ரெயில் பயணிகள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    • அம்பாசமுத்திரத்தில் அதிகபட்சமாக 41.66 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
    • மணிமுத்தாறில் 31.70 செ.மீட் மழை பெய்துள்ளது.

    திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலியின் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்று காலை 4.30 நிலவரப்படி 41.66 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறில் 31.70 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

    தற்போதும் மழை பெய்து வருவதால் அம்பையில் உள்ள மணிமுத்தாறு அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 86.66 அடி உயரமாக இருந்த நிலையில், ஒன்று ஒரே நாளில 108.8 அடியாக உயர்ந்துள்ளது.

    அணைக்கு தற்போது 17 அயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் 143.6 அடி உயரம் கொண்டி கரையாறு அணையில் 133 அடி உயரமாக நீர்மட்டம் உள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் இந்த மூன்று அணைகளும் விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதாவது அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இந்த மூன்று அணைகளிலும் இருந்து சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது 80 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் ஓடுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்று கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தாமிரபரணி ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சியளிக்கின்றன. சாலைகள், தெருக்களில் ஆற்றில் வெள்ளம் ஓடுவதுபோல் ஓடுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்துள்ளது.

    காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84.5 செ.மீ. மழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் 66.9 செ.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 60.70 செ.மீ. மழை பெய்துள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 59.7 செ.மீ. மழையும், பாளையங்கோட்டையில் 42.0 செ.மீ. மழையும, அம்பாசமுத்திரத்தில் 41.6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

    • மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.
    • நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.

    மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் - நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்.

    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • 4 மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    கனமழை பெய்துவருதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை செல்கிறார்.

    வெள்ளம் பாதித்த இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

    • ஒரு சில இடங்களில் பாலங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், கால்வாய் நிரம்பி வழிவதாலும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது.
    • தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

    நெல்லை:

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இந்த மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இன்று (திங்கட்கிழமை) மதியம் வரை நீடிக்கிறது. நேற்று பகல் முழுவதும் 3 மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது.

    இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் அதிக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் அதிக கனமழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து 2 நாட்களாக சுமார் 30 மணி நேரத்துக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்து உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணை பகுதிகளிலும் கனமழை பெய்வதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    பாபநாசம் பாணதீர்த்த அருவியில் இருந்து காட்டாற்று வெள்ளம் வெளியேறுவதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சுமார் 32,000 கனஅடி நீர் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது. இது தவிர மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியை கடந்து இருப்பதால் அந்த அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.


    மேலும் கடனா அணையில் இருந்து 4500 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தற்போது 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. அங்கு இரு கரைகளையும் தொட்ட படி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. கொக்கிரகுளம் சுலோச்சனா முதலியார் பாலம் மற்றும் அதன் அருகில் அமைக்கப்பட்டு உள்ள புதிய பாலம் ஆகியவற்றை தொட்டபடி வெள்ளம் செல்கிறது.

    இதன் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் தண்ணீர் புகுந்து உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கும் பொதுமக்கள், அதிகாரிகள் யாரும் செல்ல முடியாத வகையில் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    மாநகரப் பகுதியில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வாறுகால்களில் அடைப்பு, சாலையோர ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவற்றின் காரணமாக மழை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் கழுத்து அளவுக்கு தேங்கி நிற்கிறது.


    நெல்லை மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கிறது. பழைய பேட்டையில் தொடங்கி வழுக்கோடை, தொண்டர் சன்னதி, நயினார் குளம் சாலை, டவுன் ரத வீதிகள், நெல்லையப்பர் கோவிலை சுற்றி அமைந்து உள்ள தெருக்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வழுக்கோடை பகுதியில் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அங்கும் காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் ஓடுகிறது. காட்சி மண்டபம், கோடீஸ்வரன் நகர் உள்ளிட்ட பகுதிகள் தீவுகள் போல் காட்சி அளிக்கிறது.

    இதுபோல் எஸ். என். ஹைரோட்டில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சந்திப்பு மீனாட்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில், சி.என். கிராமம், தச்சநல்லூர், சிந்து பூந்துறை, சமாதானபுரம், கே.டி.சி. நகர், ரஹ்மத் நகர், தியாகராஜ நகர், மகாராஜா நகர், அன்பு நகர், பொதிகை நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    ஒரு சில இடங்களில் பாலங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், கால்வாய் நிரம்பி வழிவதாலும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான காம்பவுண்டுகளில் வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ள முகாம்களில் மீட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். டவுன் குறுக்குத் துறையில் இருந்து கருப்பன் துறை வழியாக மேலப்பாளையத்துக்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கி விட்டது.

    தீயணைப்புத் துறையினரும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து மாநகரப் பகுதி முழுவதும் வெள்ளம் புகுந்த வீடுகளில் தத்தளிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். திருப்பணி கரிசல்குளம், பேட்டை, திருவேங்கடநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை குளத்தில் இருந்து வெளியேறும் நீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக நெல்லை மாநகராட்சி முழுவதுமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இன்று காலை முதல் மாநகரப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்களின் பாடு மேலும் திண்டாட்டமாகி வருகிறது.

    இன்று காலை 7 மணி நிலவரப்படி மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 60 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. அதற்கு அடுத்த படியாக பாளையில் 42 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 41 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. சேரன்மகாதேவியில் 40 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை புதிய பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வேய்ந்தான் குளமும் நிரம்பி விட்டதால் பஸ் நிலையத்தில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லையிலிருந்து மற்றும் கன்னியாகுமரியில் இருந்து வடக்கு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பெரும்பாலான பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாநகரப் பகுதியிலும் இயங்கி வரும் பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1200 குளங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் கடந்த 2 நாட்களில் பெய்த மழையின் காரணமாக நிரம்பும் தருவாயில் இருக்கிறது. அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் வயல்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் நாற்றுகளை மூழ்கடித்தபடி தேங்கிக் கிடக்கிறது.


    மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, கூடங்குளம், உவரி உள்ளிட்ட கட லோர பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கூட்டப்பனை கூடுதாழை மற்றும் 9-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டம் ரெட் அலர்ட் எச்சரிக்கையில் இருந்து மஞ்சள் அலர்ட்டுக்கு மாறி உள்ளது. இதனால் இன்று காலை சற்று மழை குறைந்துள்ளது. எனினும் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்த வண்ணம் உள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக ஒரு சில அணைகளை தவிர மற்ற அனைத்து அணைகளும் நிரம்பி விட்ட நிலையில் குளங்கள் உள்ளிட்டவற்றுக்கு நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. தற்போது 2 நாட்களாக பெய்து வரும் அதிக கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளிலும் வெளியேறும் தண்ணீர் சிற்றாறு கால்வாய் மூலமாக குளங்களை வேகமாக நிரப்பி வருகிறது.

    ஏற்கனவே 50 சதவீதத்திற்கும் மேலாக குளங்கள் நிரம்பிய நிலையில் தற்போது பெய்த மழையால் இதுவரை பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த குளங்கள் கூட ஒரே நாள் இரவில் பெய்த மழையால் நிரம்பிவிட்டன. தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது.

    இதேபோல் சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், சுரண்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்புவதோடு காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடுகிறது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக கொட்டி தீர்க்கும் மழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்கு மேல் நிரம்பாத பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து உள்ளது. காயல்பட்டினம் பகுதியில் மட்டும் இன்று காலை நிலவரப்படி சுமார் 93 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அங்கு அதிக அளவு மழை பொழிந்து உள்ளது.

    இதேபோல் திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து உள்ளது. திருச்செந்தூரில் அதிகபட்சமாக 69 செ.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 61 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கோவில்பட்டியில் 49 செ.மீ., சாத்தான்குளத்தில் 46 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழையால் பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து அதிலிருந்து பொதுமக்கள் தற்போது மீண்ட நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை மேலும் சிரமம் அடைந்துள்ளது. மாநகர பகுதி முழுவதும் தீவு போல் காட்சியளிக்கிறது.

    ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து உள்ளது.

    3 மாவட்டங்களிலும் கிராமங்கள் தனித்தனி தீவாக மாறி விட்டதால் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை இன்று முடங்கி போனது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் தகவல் தொடர்பையும் மக்கள் இழந்துள்ளனர்.

    இதனால் மக்களை மீட்க முப்படைகளும் உதவிக்கு விரைந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர்கள் தலைமையில் தீவிர ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    ×