என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் மழை: நாலுமுக்கு எஸ்டேட்டில் 7 செ.மீ. மழை பதிவு
    X

    மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் மழை: நாலுமுக்கு எஸ்டேட்டில் 7 செ.மீ. மழை பதிவு

    • மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி நகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 118 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று அணையில் 118.55 அடி நீர் இருந்த நிலையில், இன்று நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 119.75 அடியாக உள்ளது.

    மற்றொரு பிரதான அணையான சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் சுமார் 15 அடி வரை உயர்ந்துள்ளது. நேற்று அந்த அணையில் நீர் இருப்பு 118.11 அடியாக இருந்தது.

    தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்து 123.52 அடியாக உயர்ந்தது அந்த அணையில் ஒரே நாளில் 5 அடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாலுமுக்கு மற்றும் ஊத்து எஸ்டேட்டுகளில் தொடர்ச்சியாக 3 நாட்கள் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 6½ சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மேலும் காக்காச்சியில் 5½ சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி நகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டமாக காட்சியளிப்பதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணைகளை பொறுத்த வரை 85 அடி கொண்ட கடனா அணைக்கு வினாடிக்கு 132 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் நேற்று இன்று ½ அடி உயர்ந்து 67½ அடியை எட்டியுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 2½ அடி உயர்ந்து 72½ அடியை எட்டியது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 61 அடியை நெருங்கி உள்ளது.

    Next Story
    ×