என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
    X

    தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    • கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 24 மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 122 அடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அந்த அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 130.71 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 11 அடி உயர்ந்து 141.27 அடியை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 6 ஆயிரத்து 178 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 700 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 118 அடி கொண்ட மணி முத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,974 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மலைப்பகுதியில் தொடரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் சற்று அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நீர் ஆற்றில் கலந்து காட்டாற்று வெள்ளமாக செல்கிறது. இதன் காரணமாக வழக்கத்தை விட ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

    நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை டவுன் குறுக்குத்துறையில் உள்ள முருகன்கோவில் மண்டபம் முழுவதுமாக மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகரில் நேற்று பகலில் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது.

    நள்ளிரவு வரையிலும் பெய்த கனமழையால் சாலை பள்ளங்களில் குளம் போல் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. அதிகபட்சமாக நெல்லையில் 56 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    புறநகர் பகுதியை பொறுத்தவரை சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 1 வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் அடவிநயினார், குண்டாறு அணைகள் நிரம்பி வழியும் நிலையில், நேற்றும் பரவலாக பெய்த மழையால் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக அந்த அணைகளும் முழு கொள்ளளவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    குண்டாறு அணை பகுதியிலும், கடனா அணை பகுதிகளிலும் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. ராமநதி, கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 71 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 73 ½ அடியாகவும் இருக்கிறது. 71 அடி கொண்ட கருப்பாநதி அணை நீர் மட்டம் 62 அடியை நெருங்கி உள்ளது.

    நகர் பகுதியை பொறுத்தவரை செங்கோட்டை, தென்காசி மற்றும் ஆய்குடி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    இதேபோல் சங்கரன் கோவில் மற்றும் சிவகிரி சுற்று வட்டாரத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து பெய்த மழையால் குளங்கள் நீர்இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளான திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினம் சுற்று வட்டாரத்தில் மிக கனமழை பெய்தது. குலசேகரன்பட்டினம், திருச்செந்தூரில் 13 சென்டி மீட்டரும், காயல்பட்டினத்தில் 10 சென்டிமீட்டரும் மழை பெய்தது.

    கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்தி குளம், சூரங்குடி, ஒட்டப்பிடாரம், மணியாச்சி, வேடநத்தம், கீழஅரசடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளும் தீவிரம் எடுத்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×