என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்ப பக்தர்கள்"

    • இன்று உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
    • பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் உடனடி முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்ததால் கடந்த வாரத்தில் சன்னிதானம், பம்பை மட்டுமின்றி மலைப்பாதையிலும் கூட்ட நெரிசல் எற்பட்டது. நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவரும் பலியானார்.

    இதையடுத்து பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    மேலும் பம்பை உள்ளிட்ட 3 இடங்களில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன. தேவசம்போர்டின் இந்த அதிரடி நடவடிக்கையால் உடனடி முன்பதிவு மூலமாக சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலும் இல்லை.

    உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) எண்ணிக்கையை பக்தர்களின் வருகைக்கு தகுந்தாற்போல் அதிகரித்துக்கொள்ள தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் பக்தர்கள் வருகைக்கு தகுற்தாற்போல் "ஸ்பாட் புக்கிங்" மூலமாக அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சபரிமலையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக கேரள மாநில டி.ஜி.பி. ரவுடா சந்திரசேகர் சபரிமலைக்கு வந்தார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது மட்டுமின்றி, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரது தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உடனடி முன்பதிவு மூலமாக அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை, பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இன்று உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. அது 5 ஆயிரமாகவே இருந்தது. ஆனால் ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் இன்று அதிகளவில் சபரிமலைக்கு வந்தனர். இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பதினெட்டாம் படி ஏறி சாமி தரசனம் செய்வதற்காக நின்ற பக்தர்களின் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. அங்கிருந்து பதினெட்டாம் படியை அடைய பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்தபோது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார்.
    • யாத்திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான்.

    ஐயப்ப பக்தர்கள் தன் தலையில் தாங்கி நிற்கும் இருமுடியின் தத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியம். மணிகண்டன் என்ற நாமத்துடன் ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்தபோது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார். அப்போது குலதெய்வமாகிய சிவபெருமானை துணைக்கு அழைப்பது போல் 3 கண்ணுடைய தேங்காயை எடுத்துக் கொண்டு போகும்படி மணிகண்டனுக்கு மன்னன் ஆலோசனை வழங்கினார்.

    அவரும் அப்படியே செய்தார். அதே பழக்கத்தை தான் இப்போது சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்வதன் மூலம் கடைபிடித்து வருகிறார்கள்.

    இருமுடியில் ஒருபுறம் பக்தனுக்கு தேவையான பொருட்கள், யாத்திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான். ஆண்டவனின் பதினெட்டு படிகளை கடக்கிறான். ஆண்டவனை நெருங்கும்வரை தான் தனக்கென்று தேவைப்படுகிறது. நெருங்கியவுடன் நமக்கென்று ஒன்றும் தேவை இல்லை, எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் ஆகி விடகிறது என்பது தான் இருமுடியின் தத்துவம்.

    • ஒரு பஸ்சில் 90 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சிறப்புப் பஸ் இயக்கப்படும்.
    • இருக்கைகளை ஒரு பெரிய குழுவாகவோ அல்லது பல குழுக்கள் இணைந்தோ முன்பதிவு செய்யலாம்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல பூஜை யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்காக, 72 ஆன்மிக சுற்றுலாத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    யாத்திரையின்போது வழியில் உள்ள முக்கியக் கோவில்களில் பக்தா்கள் தரிசனம் செய்யும் வகையில், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) இந்தப் புதிய திட்டத்தை முதல்முறையாகத் தொடங்கியுள்ளது.

    சபரிமலை கோவில் நடை, வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக நேற்று திறக்கப்பட்டது.

    இந்நிலையில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்துடன் இணைந்து, யாத்திரையின் முதல் கட்டமாக இந்த 72 சிறப்பு ஆன்மிக சுற்றுலாத் தொகுப்புகள் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின்கீழ் 1,600 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் பயணங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வடக்கு மாவட்டங்களில் இருந்து தொடங்கும் பயணங்கள் பெரும்பாலும் இரண்டு நாள் சேவைகளாக இருக்கும். ஆலப்புழா, பத்தனம்திட்டா போன்ற சபரிமலைக்கு அருகில் உள்ள இடங்களிலிருந்து தொடங்கும் பயணங்கள் ஒரு நாள் சேவையாக இருக்கும்.

    ஐயப்பனின் வாழ்க்கையோடு தொடா்புடைய, வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், பந்தளம் வலிய கோய்க்கல் ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா கோவில்கள் இந்தச் சுற்றுலாத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன. வட மாவட்ட பக்தா்களுக்கான திட்டங்களில் குருவாயூா் கோவிலும், தென் மாவட்ட பக்தா்களுக்கு கொட்டாரக் கரை கணபதி கோவிலும் இடம்பெறும்.

    இந்தச் சுற்றுலாத் திட்டங்கள் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். உதாரணமாக, திருச்சூா் போன்ற இடங்களில் இருந்து தொடங்கும் பயணங்களுக்கான கட்டணம் ஒரு நபருக்கு சுமாா் ரூ.500 முதல் 700 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு பஸ்சில் 90 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சிறப்புப் பஸ் இயக்கப்படும். இருக்கைகளை ஒரு பெரிய குழுவாகவோ அல்லது பல குழுக்கள் இணைந்தோ முன்பதிவு செய்யலாம்.

    குழு முன்பதிவை ஊக்குவிக்க சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் முன்பதிவு செய்தால் குழுத் தலைவருக்கு 3 சதவீதமும், வார நாள்களில் முன்பதிவு செய்தால் 2.5 சதவீமும் கமிஷன் வழங்கப்படும்.

    இந்தத் திட்டங்களில் பயணம் செய்வோருக்கு, பம்பை கேஎஸ்ஆா்டிசி பணிமனையில் கூடுதல் வசதிகள் செய்துதரப்படும். சந்நிதானத்தில் பக்தா்களுக்கு நேரடியாக உதவ (கே.எஸ்.ஆர்.டி.சி.) ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்படுவா். கூடுதல் தகவல்களுக்கு, பத்தனம் திட்டா(91889 38524), செங்கனூா்(91889 38525) கே.எஸ்.ஆர்.டி.சி. சுற்றுலாப் பிரிவு ஒருங்கிணைப்பாளா்களைத் தொடா்பு கொள்ளலாம்.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் தொடங்கின.
    • சபரிமலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிவது வழக்கம். 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    அந்த வகையில், இந்த ஆண்டு கார்த்திகை மாதம் இன்று பிறந்ததையொட்டி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதற்காக, பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டார்கள்.



    இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜைகள் தொடங்கின. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

    அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய நடை பந்தல், சிறிய நடை பந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

    • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.
    • பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.

    அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும். பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொலைந்து போன செல்போன்களை மீட்க பம்பை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
    • செல்போன்கள் கூரியர் மூலம் உரியவர்களுக்கு அனுப்பி வைக்க பம்பை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். குறிப்பாக மண்டல மகர விளக்கு சீசன் காலங்களில் பக்தர்களில் வருகை அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் கூட்ட நெரிசல் உள்பட பல்வேறு காரணங்களால் பக்தர்கள் சிலர் சில நேரங்களில் தங்களது செல்போன் மற்றும் உடைமைகளை தவற விடுவது வாடிக்கையாகி வருகிறது. அந்தவகையில் கடந்த மண்டல சீசன் முதல் இதுவரை ஐயப்ப பக்தர்களின் 230 செல்போன்கள் காணாமல் போனதாக பம்பை போலீசில் புகார் பெறப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தொலைந்து போன செல்போன்களை மீட்க பம்பை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். அந்தவகையில் இதுவரை 102 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்த செல்போன்கள் கூரியர் மூலம் உரியவர்களுக்கு அனுப்பி வைக்க பம்பை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு திட்டங்களை திருவிதாங்கூர் தேவசம்போடு அமல்படுத்தி வருகிறது. அதன்படி சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் பத்தினம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கக்கூடிய விபத்தில் சிக்கினால் மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் எங்கு விபத்து நடந்து ஐயப்ப பக்தர்கள் பலியானாலும், ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் விபத்துகளில மரணமடைபவர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் தொகை வழங்க முடியும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் நிபந்தனை விதித்திருந்தது.

    இந்த நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் எந்த பகுதியில் சாலை விபத்தில் சிக்கி ஐயப்ப பக்தர்கள் மரணமடைந்தாலும், அவர்களது குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.

    சபரிமலை வரும் வழியில் மாரடைப்பு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாக இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாக மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.3லட்சம் இன்சூரன்ஸ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி சேகரிக்க திட்டம் இருக்கிறது. மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து கட்டணமாக ரூ.5 வசூலிக்கவும் ஆலேசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • கார்த்திகை மாதத்தையொட்டியும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடினர்.

    பவானி:

    பவானி கூடுதுறையில் இன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலுக்கு பின்னால் உள்ள இரட்டை விநாயகர் படித்துறை பகுதியில் காவிரி பவானி மற்றும் அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் உள்ளூர், வெளியூர் வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் பலரும் அதிகாலை முதலே பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வார்கள்.

    அதேபோல், தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும்போது இங்கு உள்ள சங்கமேஸ்வரர் சாமியை தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    அதன்படி கார்த்திகை மாதத்தையொட்டியும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடினர்.

    • வண்டிப்பெரியாறு, புல்மேடு வழியாக 30 கி.மீ. தூரத்தில் மற்றொரு பாதை உள்ளது.
    • பாதயாத்திரை பக்தர்கள் ஏராளமானோர் புல்மேடு பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக தரிசனத்துக்கு கோவில் நடை திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

    தேனி மாவட்டம் குமுளியில் இருந்து வண்டிபெரியாறு, முண்டக்கயம், எரிமேலி, பம்பை வழியாக 160 கி.மீ. சாலை வசதி உள்ளது. இந்த சாலையில் பக்தர்கள் வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் வந்தவண்ணம் உள்ளனர். இதேபோல் வண்டிப்பெரியாறு, புல்மேடு வழியாக 30 கி.மீ. தூரத்தில் மற்றொரு பாதை உள்ளது.

    புல்மேடு, சத்திரம் வரை 24 கி.மீ. தூரத்துக்கு ஜீப், பஸ் வசதி உள்ளது. சத்திரம் வரை வாகனங்களில் சென்று பின்னர் அங்கிருந்து 12 கி.மீ. தூரம் வனப்பகுதியில் பாதயாத்திரையாக சென்றால் சன்னிதானத்தை அடைந்து விடலாம்.

    பாதயாத்திரை பக்தர்கள் ஏராளமானோர் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வருடம் மண்டல பூஜைக்காக கடந்த 16ந் தேதி நடை திறக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முன்பதிவு செய்த பக்தர்களும் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.

    மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகுதான் புல்மேடு பாதை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு நடைதிறக்கும்போதே புல்மேடு பாதையும் திறக்கப்பட்டது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்கள் இந்த பாதையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது புல்மேடு பாதையை பயன்படுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வனத்துறை, சுகாதாரத்துறை, போலீசார் முகாம் அமைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

    • அப்பம் மற்றும் அரவணை தயாரிப்பதற்கு மாவு ஆலை அமைக்கப்படுகிறது.
    • பம்பை நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டவும் முடிவு.

    சபரிமலை:

    மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட நிலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று வரை 16.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நடப்பாண்டில் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

    முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் ரூ.15 கோடி மதிப்பில் அப்பம் மற்றும் அரவணை தயாரிப்பதற்கு தேவையான மாவு ஆலை அமைக்கப்பட உள்ளது.

    மேலும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க குன்னூர் அணையில் இருந்து சபரிமலைக்கு குழாய் பதிக்கும் திட்டம், பம்பை நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டுவது, நிலக்கல் அடிவாரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் புதிய பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது உள்பட 5 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

    • ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது.
    • குற்றாலநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    குற்றாலநாதர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

    • புதுவை அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர்.
    • மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் அரசு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டெல்லியை அணுக வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமீபமாக பலமாக எழுந்துள்ளது.

    அரசியல் கட்சிகளிடையே இதுதொடர்பாக நாள்தோறும் விவாதமும் நடந்து வருகிறது. சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில், மாநில அந்தஸ்து வேண்டும் என்ற குரலை உயர்த்தியுள்ளனர்.

    இந்நிலையில் புதுவை அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அந்த பக்தர்கள் கோவிலின் 18-ம் படிக்கு கீழே புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு பேனரை பிடித்துள்ளனர்.

    இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த பேனரில், புதுவை மக்கள் சுயமரியாதையை காக்க மாநில அந்தஸ்து வேண்டும். இது புதுவை மக்களின் குரல் என குறிப்பிட்டுள்ளனர்.

    மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் அரசு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டெல்லியை அணுக வேண்டும். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பாராளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். அதை விடுத்து கோவில் முன்பு பேனர் பிடிப்பதால் மாநில அந்தஸ்து கிடைத்துவிடுமா? என்ற விவாதமும் எழுந்துள்ளது.

    ×