search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayyappa devotees"

    • திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை சீசனை போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதனால் பம்பை, மரக்கூட்டம், நடைப்பந்தல், பதினெட்டாம்படி, சன்னிதான பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    மகரவிளக்கு தினத்திலும் நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு எடுத்தது. அதன்படி கடந்த 10-ந்தேதி) முதல் உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் மகரவிளக்கு பூஜை தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து இன்று (13-ந்தேதி) மதியம் புறப்படுகிறது. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவாபரணங்கள் சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த திருவாபரணங்கள் நாளை மறுநாள் (15-ந்தேதி) மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

    • இன்று திருவாபரண ஊர்வலம்.
    • நாளை மறுநாள் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை காலமான தற்போது தினமும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மகரஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்கிடையே அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுக்கள் சார்பில் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நேற்று நடந்தது.

    மத ஒற்றுமைக்கு சான்றாக பக்தர்கள் அனைவரும் சமம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி ஐயப்ப பக்தர்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் முகம், உடல் மீது வண்ண, வண்ண பொடிகளை பூசி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கொண்டு இலை தழைகளை கையில் ஏந்தியவாறு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    அப்போது மேள தாளம் முழங்க, ஐயப்பனின் சரண கோஷமும் எதிரொலித்தது. எருமேலி கொச்சம் பலத்தில் இருந்து வாவர் மசூதியை சுற்றி நெற்றிப்பட்டம் சூட்டிய யானையில், அம்பலப்புழை கிருஷ்ணசாமி கோவிலில் இருந்து பூஜித்து எடுத்து வரப்பட்ட ஐயப்ப விக்ரகத்தை சுமந்து வந்து காணிக்கை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து வலியம்பலமான தர்ம சாஸ்தா கோவிலில் சாமி தரிசனம் செய்ததும் பக்தர் குழுவினர் சபரிமலைக்கு புனித பயணம் புறப்பட்டனர்.

     பின்னர் ஐயப்பனுக்கு நடத்தப்படும் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான பம்பை விருந்து, பம்பை விளக்கு ஏற்றுதல் போன்ற சிறப்பு வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து பக்தர் குழுவினர் சபரிமலை நோக்கி மலையேறி சென்று அன்றைய தினம் இரவு அங்கு ஓய்வெடுக்கிறார்கள். மகரஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு பக்தர் குழு சார்பில் சிறப்பு நிவேத்யம், நெய்யபிஷேகம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    இன்று திருவாபரண ஊர்வலம்

    இதற்கிடையே இன்று (சனிக்கிழமை) பந்தளத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு திருவாபரண ஊர்வலம் சபரிமலை நோக்கி புறப்படும். இந்த திருவாபரணம் நாளை மறுநாள் மாலையில் மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

    அதனை தொடர்ந்து சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தருவார். மகரவிளக்கு தினத்தன்று காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து மலையேறி சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மகரவிளக்கு பூஜை நாளில் 40 ஆயிரம் பக்தர்கள், முந்தைய நாளில் 50 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    • தொடர்மழை காரணமாக கடந்த மாதம் 3-ந்தேதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே குளிர்ச்சியான ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையாடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அருவியில் நீர்பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல், வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக கடந்த மாதம் 3-ந்தேதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர். மேலும் அருவியை கண்காணித்து வந்தனர். நீர்வரத்து சீராகாததால் 43 நாட்களாக தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே குளிர்ச்சியான ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்தனர்.

    மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு வந்திருந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை அப்துல் மஜித்(வயது55) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவர்களது ஆட்டோ செட்டியங்காடு என்ற பகுதியில் சென்ற போது, எதிரே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித், தஸ்னிமா(33), அவரது குழந்தைகள் ரின்ஷா பாத்திமா(12), ரைஹா பாத்திமா(4), சகோதரி முஹ்சினா(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    ஆட்டோவில் இருந்த மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆட்டோவில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர்.

    பின்பு படுகாயம் அடைந்தவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த ஐயப்ப பக்தர்கள் யாரும் காயம் அடையவில்லை. சாலை திருப்பத்தில் பஸ் வேகமாக திரும்பிய போது தவறுதலாக ஆட்டோ மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. பலியான ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித் தனது மகளுக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மகள் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதே போல் விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். அப்போது புல்லூரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்ற போது தனது 2 குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் பலியாகிவிட்டார்.

    இந்த விபத்து பலியானவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாம்படி.
    • பலனை எதிர்ப்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

    முதல்படி:

    விஷாத யோகம், பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பை விஷாத யோகம். இதுவே முதல்படி.

    இரண்டாம்படி:

    சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாம்படி.

    மூன்றாம்படி:

    கர்மயோகம், உபதேசம் பெற்றால் போதுமா? மனம்பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்ப்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

    நான்காம் படி:

    ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம்படி.

    ஐந்தாம்படி:

    சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

    ஆறாம்படி:

    தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

    ஏழாம்படி:

    ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்... எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவதுபடி.

    எட்டாம்படி:

    அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

    ஒன்பதாம் படி:

    ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம், கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மீகம் என்று உணர்வது ஒன்பதாம்படி.

    பத்தாம்படி:

    விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தை கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம்படி.

    பதினொன்றாம்படி:

    விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது பதினொன்றாம் படி.

    பன்னிரண்டாம்படி:

    பக்தி யோகம். இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை-பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம்படி.

    பதின்மூன்றாம்படி:

    ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம்படி.

    பதினான்காம்படி:

    குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

    பதினைந்தாம் படி:

    தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

    பதினாறாம் படி:

    சம்பத் விபாக யோகம், இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

    பதினேழாம் படி:

    சிரித்தாத்ரய விபாக யோகம், சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாம் படி.

    பதினெட்டாம் படி:

    மோட்ச சன்யாச யோகம், யாரிடமும் எந்த உயிர்களிடமும் பைதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி.

    சத்தியம் நிறைந்த இந்த பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பைரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

    • கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
    • தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    சபரிமலை:

    மண்டலபூஜை சீசனையொட்டி, கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு சபரிமலையில் குவிந்து வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவு தவிர நிலக்கல்லில் உடனடி முன்பதிவும் நடைபெற்று வருவதால் சபரிமலையில் தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    ஆனால், 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு அதிகபட்சமாக 70 பக்தர்கள் மட்டுமே செல்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,200 பக்தர்கள் மட்டுமே சன்னிதானத்தில் தரிசனம் செய்ய முடியும். தினசரி 17 மணிநேரம் வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் சபரிமலையில் குவிந்து வரும் பக்தர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் சாமியை தரிசனம் செய்ய முடிவதில்லை. இதனால் 18 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

    அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரித்து 18 மணி நேரமாக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதன்படி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு அதாவது ஒரு மணி நேரம் முன்னதாக நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.

    இந்த நிலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் சபரிமலையில் முகாமிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில், 'சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வசதியாக, தரிசனம் முடிந்த பக்தர்கள் சன்னிதானத்தில் தங்காமல் உடனுக்குடன் மலையிறங்க வேண்டும்' என்று ஐ.ஜி ஸ்பர்ஜன் குமார் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் சீசனையொட்டி பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், நிலக்கல்லில் நடந்து வரும் உடனடி தரிசன முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவஸ்தானத்தையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பேட்டைதுள்ளல் என்பது மகிழ்ச்சியாக ஆடப்படும் நடனம்.
    • பம்பை நதியில் பக்தியுடன் ஐயப்பனை நினைவில் கொண்டு நீராட வேண்டும்.

    எருமேலி:

    தர்மசாஸ்தா சன்னதி (எருமேலி) ஐயப்ப பக்தர்கள் இச்சன்னதியில் அவசியம் பேட்டை துள்ள வேண்டும். மணிகண்டன் ராஜசேகரமன்னன் ஆணைப்படி காட்டுக்கு வேட்டையாடச் சென்று வந்ததன் நினைவாக இது செய்யப்படுகிறது. பேட்டைதுள்ளல் என்பது மகிழ்ச்சியாக ஆடப்படும் நடனம், பேட்டை துள்ளலின் போது சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தக்கத்தோம் என்று பாடவேண்டும் காணிக்கைகளை உண்டியலில் போடவேண்டும்.

    பம்பா நதி வழிபாடு:

    பம்பை நதியில் பக்தியுடன் ஐயப்பனை நினைவில் கொண்டு நீராட வேண்டும். நீராடியபின், குருதட்சணை, அன்னதானம், பம்பை விளக்கு ஆகிய சக்திக்குரிய பூஜைகளை நடத்த வேண்டும். பம்பை நதிக்கரையில் பம்பா சத்யா எனும் அன்னதானம் செய்ய வேண்டும். காட்டிலுள்ள மூலிகை மரம், வேர் போன்றவற்றை விறகாகக் கொண்டு தயாரிக்கப்படும் அன்னத்தையும் மற்றும் உள்ள பதார்த்தங்களையும் உண்பதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகின்றன.

    பம்பை-ஸ்ரீராமர் அனுமர் கோவில் வழிபாடு:

    பம்பை நதிக்கரையில் உள்ள கணபதி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டபின் ஸ்ரீராமர் கோவிலிலும், ஸ்ரீஅனுமார் கோவிலிலும் வழிபட வேண்டும்.

    பந்தள ராஜ வந்தனம்:

    நீலிமலை ஏறுவதற்கு முன்பாக நதிக்கரையில் வீற்றிருக்கும் பந்தளராஜா ஆசிரமத்திற்கு வந்து இறைவனை வழிபட்ட பிறகே செல்ல வேண்டும்.

    அப்பாச்சிக்குழி, இப்பாச்சிக்குழி:

    ஐயப்ப சுவாமியின் முக்கியமான பூதகணமான கடுவரனால் துர்பூதங்களும், துர்வேதனங்களும் இங்கு அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கன்னி சுவாமிகள் தங்கள் மூத்த குருசுவாமி ஆணைப்படி இந்த இடத்தில் அரிசி மாவு உருண்டையும் வெல்ல உருண்டை களையும் இந்தக்குழியில் போட வேண்டும்.

    சரஸ்குழி ஆல்துறை:

    கன்னிசுவாமிகள் குருதட்சணை வழங்கியபிறகு இந்த இடத்தில் சரக்கோல் குத்த வேண்டும்.

    நெய் அபிஷேகம்:

    நெய் அபிஷேகம் ஸ்ரீ சன்னிதானத்தில் செய்ய வேண்டிய ஒன்றாகும். ஐயப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்து கிடைக்கும் நெய்யை பிரசாதமாக உபயோகப்படுத்த வேண்டும்.

    கணபதி சுவாமி சன்னதி:

    இங்கு ஒரு ஹோமகுண்டம் இருக்கும். இதில் நெய், தேங்காயின் ஒரு பங்கை போட வேண்டும்.

    சண்முக சுவாமி சன்னதி:

    இதுவும் மகா கணபதி சன்னி தானத்தைப்போல சன்னதிக்குள் இருக்கிறது. இங்கு பன்னீர், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் முதலியவற்றை ஏற்றி வழிபட வேண்டும். மாளிகைப்புறத்தம்மா ஐயப்ப சக்தி ஸ்வரூபிணி தேங்காய் உருட்டல் அந்த அம்மனுக்குரிய முக்கியமான வழிபாடு, இங்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலைப்பாக்கு முதலியவற்றை தேவியின் முன்வைக்க வேண்டும். இங்கு பிரசாதம் வாங்கிக் கொள்ளவும்.

    கருத்த சுவாமிகள்:

    அவல், நெல்பொறி, வெல்லம், பழம், தேங்காய், வறுத்தபொடி முதலியவற்றை செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.

    கருப்ப சுவாமிகள்:

    இங்கு கற்கண்டு திராட்சைப்பழம், கற்பூரம் ஆகியவற்றை காணிக்கையாக வைத்து வழிபட வேண்டும்.

    நாகராஜா, நாகஷியம்:

    இங்கு மஞ்சள்பொடி, கற்பூரம் வைத்து வணங்க வேண்டும். பின் சர்ப்ப தோஷம் ஏற்படாமல் இருக்க சர்ப்ப பாட்டு பாட வேண்டும்.

    வாபர் சுவாமி:

    இந்த சன்னதியில் வாசனை திரவியங்களான பன்னீர், ஊதுபத்தி, தேங்காய், நெல், மிளகு ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும்.

    • ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா ஓம் இன்பத்தமிழ் சுவையே சரணம் ஐயப்பா
    • ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

    1.ஓம்கன்னிமூல கணபதியேசரணம் ஐயப்பா

    2.ஓம்காந்தமலை ஜோதியேசரணம் ஐயப்பா

    3.ஓம் அரிஹர சுதனேசரணம் ஐயப்பா

    4.ஓம் அன்னதான பிரபுவேசரணம் ஐயப்பா

    5.ஓம் ஆறுமுகன் சகோதரனே சரணம் ஐயப்பா

    6.ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா

    7.ஓம் இன்பத்தமிழ் சுவையே சரணம் ஐயப்பா

    8.ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா

    9.ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா

    10.ஓம் ஈடில்லாத தெய்வமே சரணம் ஐயப்பா

    11.ஓம் உண்மைப் பரம்பொருளேசரணம் ஐயப்பா

    12.ஓம் உலகாளும் காவலனேசரணம் ஐயப்பா

    13.ஓம் ஊழ்வினை அழிப்பவனேசரணம் ஐயப்பா

    14.ஓம் எளியோர்க்கு அருள்பவனேசரணம் ஐயப்பா

    15.ஓம் எங்கள் குலதெய்வமே சரணம் ஐயப்பா

    16.ஓம் ஏழைப்பங்காளனே சரணம் ஐயப்பா

    17.ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா

    18.ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா

    19.ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனேசரணம் ஐயப்பா

    20.ஓம் ஒப்பில்லாத திருமணியேசரணம் ஐயப்பா

    21.ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா

    22.ஓம் ஓங்கார பரம்பொருளே சரணம் ஐயப்பா

    23.ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா

    24.ஓம் ஔதடங்கள் அருள்பவனேசரணம் ஐயப்பா

    25.ஓம் சவுபாக்கியம் அளிப்பவனேசரணம் ஐயப்பா

    26.ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா

    27.ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    28.ஓம் சிவன் மால் திருமகனே சரணம் ஐயப்பா

    29.ஓம் சிவ வைணவ ஐக்கியமேசரணம் ஐயப்பா

    30.ஓம் அச்சங்கோவில் அரசே சரணம் ஐயப்பா

    31.ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா

    32.ஓம் குளத்துப்புழை பாலகனேசரணம் ஐயப்பா

    33.ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா

    34.ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா

    35.ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா

    36.ஓம் உத்திரத்தில் உதித்தவனேசரணம் ஐயப்பா

    37.ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா

    38.ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா

    39.ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா

    40.ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

    41.ஓம் சாந்தம் நிறைமெய்ப்பொருள்சரணம் ஐயப்பா

    42.ஓம் குருமகனின் குறை தீர்த்தவனேசரணம் ஐயப்பா

    43.ஓம் குருதட்சணை அளித்தவனேசரணம் ஐயப்பா

    44.ஓம் புலிப்பால் கொணர்ந்தவனேசரணம் ஐயப்பா

    45.ஓம் வன்புலியின் வாகனனேசரணம் ஐயப்பா

    46.ஓம் தாயின் நோய் தீர்ப்பவனேசரணம் ஐயப்பா

    47.ஓம் குருவின் குருவேசரணம் ஐயப்பா

    48.ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா

    49.ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா

    50.ஓம் தூய உள்ளம் அளிப்பவனேசரணம் ஐயப்பா

    51.ஓம் இருமுடிப்பிரியனே சரணம் ஐயப்பா

    52.ஓம் எருமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா

    53.ஓம் நித்திய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா

    54.ஓம் நீல வஸ்திரதாரியே சரணம் ஐயப்பா

    55.ஓம் பேட்டை துள்ளும் பேரருளேசரணம் ஐயப்பா

    56.ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனேசரணம் ஐயப்பா

    57.ஓம் சாஸ்தாவின் நந்தவனமேசரணம் ஐயப்பா

    58.ஓம் சாந்திதரும் பேரழகே சரணம் ஐயப்பா

    59.ஓம் பேரூர்த்தோடு தரிசனமேசரணம் ஐயப்பா

    60.ஓம் பேதமையை ஒழிப்பவனேசரணம் ஐயப்பா

    61.ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா

    62.ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா

    63.ஓம் அழுதை மலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    64.ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா

    65.ஓம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா

    66.ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

    67.ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா

    68.ஓம் கரியிலந்தோடே சரணம் ஐயப்பா

    69.ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    70.ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா

    71.ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா

    72.ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா

    73.ஓம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    74.ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா

    75.ஓம் திருவேணி சங்கமே சரணம் ஐயப்பா

    76.ஓம் திரு ராமர் பாதமே சரணம் ஐயப்பா

    77.ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா

    78.ஓம் சபரிக்கு அருள்செய்தவனே சரணம் ஐயப்பா

    79.ஓம் தீபஜோதி திருஒளியே சரணம் ஐயப்பா

    80.ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா

    81.ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

    82.ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா

    83.ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா

    84.ஓம் திருபம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா

    85.ஓம் நீலமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

    86.ஓம் நிறையுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா

    87.ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா

    88.ஓம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா

    89.ஓம் சபரி பீடமேசரணம் ஐயப்பா

    90.ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா

    91.ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா

    92.ஓம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா

    93.ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா

    94.ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா

    95.ஓம் பகவானின் சன்னதியே சரணம் ஐயப்பா

    96.ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா

    97.ஓம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா

    98.ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா

    99.ஓம் நாகராஜப் பிரபுவே சரணம் ஐயப்பா

    100. ஓம் மாளிகை புறத்தம்மனே சரணம் ஐயப்பா

    101. ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா

    102. ஓம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா

    103. ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா

    104. ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா

    105. ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

    106. ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா

    107. ஓம் ஜோதி சொரூபனே சரணம் ஐயப்பா

    108. ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

    • குழந்தை அற்புதங்கள் பல செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.
    • சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.

     மகிஷாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் இருந்து தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்ற வரம் பெற்றான்.

     முப்பெரும் தேவியர் சண்டிகாதேவி என்ற அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தனர்.

     மகிஷாசுரனின் சகோதரி மகிஷி தன் சகோதரன் கொல்லப்பட்டதற்கு பரிகாரம் காண்பதற்காக கடும் தவம் இருந்தாள். ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால் தான் தனக்கு அழிவு வரவேண்டும் என்ற வரத்தை பெற்றாள்.

     மகிஷியை அழிப்பதற்காக அய்யப்ப அவதாரத்தை சிவ பெருமான் உண்டாக்கினார். பாற்கடலை கடைந்த போது அசுரர் களை மயக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்தார். அவர் அழகை கண்டு பரவசம் அடைந்த சிவன் அவளை தழுவினார். இதனால் சிவ விஷ்ணுவின் ஆற்றல் கொண்ட தர்மசாஸ்தா அவதரித்தார்.

     பந்தள மன்னர் ராஜசேகரன் குழந்தை இல்லாமல் இருந்து வந்தார். அவர் தனக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று சிவனிடம் தினமும் மனம் உருக வேண்டினார்.

     மார்கழி மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று பந்தள மன்னர் காட்டுக்கு வேட்டையாட சென்ற போது அங்கு கிடந்த ஒரு குழந்தையை கண்டெடுத்தார். அந்த குழந்தையை அரண்மனைக்கு எடுத்துவந்தார். வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தை கழுத்தில் கனகமணி மாலை அணிவித்து மணிகண்டன் என்ற பெயரை சூட்டினார்.

     குழந்தையை ராணியிடம் பந்தள மன்னர் கொடுத்தார். ராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். அந்த குழந்தையை தாலாட்டி சீராட்டி வளர்த்தாள். அந்த குழந்தை அற்புதங்கள் பல செய்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.

     குருகுலத்தில் சேர்க்கப்பட்ட மணிகண்டன் எல்லா கலைகளிலும் தேர்ச்சி பொற்றான். குருவின் வாய் பேச முடியாத மகனை பேச வைத்து அற்புதம் நிகழ்த்தினான்.

     இந்த நிலையில் ராணிக்கு அழகான ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜன் என பொயர் சூட்டினர். என்றாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை மந்திரி ஒருவர் விரும்பவில்லை. ராணி மனதை மாற்றி மணிகண்டனை விரட்ட முடிவு செய்தனர்.

     மந்திரி திட்டப்படி ராணி தலைவலி வந்தது போல் நடித்தாள். புலி பால் கொண்டு வந்தால் தான் ராணி தலைவலியை சரிப்படுத்த முடியும் என்று மருத்துவர்களை அந்த மந்திரி சொல்ல வைத்தான்.

     புலி பாலை யார் கொண்டு வரமுடியும் என அரசவையில் உள்ள எல்லோரும் திகைத்து நின்றனர். அப்போது மணிகண்டன் நான் காட்டுக்குள் சென்று புலி பாலை கொண்டு வருகிறேன் என்று கூறி புறப்பட்டு சென்றான்.

     காட்டுக்குள் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் கடும் போர் ஏற்பட்டது. மகிஷியை அம்பு ஏய்தி மணிகண்டன் வீழ்த்தினார். தன்னை வீழ்த்தியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவன் என்பதை உணர்ந்த மகிஷி மறுஉருவம் பொற்று எழுந்தாள். ஐயப்பனை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். ஆனால் இந்த அவதாரத்தில் பிரம்மச்சாரியாக வாழப்போவதாக கூறிய ஐயப்பன் அவளை தனது இடது பக்கத்தில் சிறு தூரத்தில் நிலைக்கொள்ளும்படி செய்தார். அவளே மஞ்சமாதா என்று அழைக்கப்படுகிறாள்.

     அதன்பிறகு புலி மீது ஏறி பந்தள நாட்டு அரண் மனைக்கு அய்யப்பன் திரும்பி வந்தார். அவரை கண்டு அனைவரும் பயபக்தியுடன் வணங்கினார்கள்.

     12 வயது முடிந்ததும் தான் ஒரு தெய்வ பிறவி என்பதை பந்தள மன்னர் ராஜசேகரனுக்கு ஐயப்பன் உணர்த்தினார். தனக்கு சபரிமலையில் ஆலயம் எடுக்க உத்தரவிட்டார்.

    சபரிமலையில் தான் ஒரு அம்பை எய்வதாகவும் அந்த அம்பு எந்த இடத்தில் போய் விழுகிறதோ அங்கு கோவில் கட்டும்படி அருள்பாலித்தார்.

     அதன்படி பந்தள ராஜா ஐயப்பன் கோவிலை கட்டினார். பரசுராமர் உதவியுடன் மகரசங்கர நாளில் சனிக்கிழமையன்று கோவில் கட்டி திறக்கப் பட்டது. இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதி வடிவில் இன்றும் அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

    • ஐயப்பனை நம்பி வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
    • 80 ஆண்டுகளுக்கு முன் கேரள மக்களுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.

    ஐயப்பனை கண்கண்ட தெய்வமாக நம்பி வழிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த தெய்வத்தைப் பற்றி 80 ஆண்டுகளுக்கு முன் கேரள மக்களுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.

    ஐயப்பன் புகழை பாமர மக்களும் உணரும்படி செய்த பெருமை `ஐயப்பன்' நாடகம் நடத்திய நவாப் டி.எஸ்.ராஜமாணிக்கத்தையே சேரும்.

    இந்நாடகம் மூலம் மக்களை அவர் பக்தி பரவசத்தில் மூழ்கச் செய்தார். இவர் 1400 தடவை ஐயப்பன் நாடகங்கள் நடத்தி இருக்கிறார்.

    1942 முதல் 1946 வரை நவாபின் நாடகக் கம்பெனியான மதுரை தேவி பால வினோத சங்கீத சபையினர் கேரளாவில் நாடகங்கள் நடத்தி வந்தனர். அப்போது கார்த்திகை பிறந்து விட்டால் `சாமியே சரணம் ஐயப்பா' கோஷம் காதைத் துளைக்கும் செண்டை வாத்தியங்களில் ஒலி காது செவிடுபடும். இது என்னக் கத்தல், இது என்ன வாத்தியம் என்றே நவாபும் அவரைச் சேர்ந்தவர்களும் நினைத்து வந்தார்களாம்.

    நாடகக் கம்பெனி கோட்டயத்தில் முகாமிட்டபோது ஐயப்ப சாமி என்ற பெரியவர் நவாபிடம் வந்து `ஐயா! நான் நாகர்கோவிலில் இருந்து வருகின்றேன். நீங்கள் நடத்தும் நாடகம் ஒவ்வொன்றும் தெய்வ காவியமாக இருக்கிறது. உங்களுக்கு தெய்வ ஆதரவு இருக்கிறது.

    ஆகவே கலியுக வரதனாக விளங்கும் ஐயப்பன் சரித்திரத்தையும், நாடகமாக நடத்த வேண்டும். இது மலையாளத்தில் நடந்த உண்மைக் கதை என்றார்.

    நவாப், `புதிய நாடகம் என்றால் அதிக பொருட் செலவாகும். மேலும் இது மலையாளக் கதை. தமிழ்நாட்டில் எடுபடுமா என்பதையும் பார்க்க வேண்டும்' என்று கூறி விட்டார்.

    அப்பெரியவர், `நீங்கள் நாடகம் நடத்தாவிட்டால் பரவாயில்லை. நான் ஐயப்பன் கதையை கதாகாலட்சேபமாக நடத்தி வருகிறேன். அதை நீங்கள் வந்து கேட்க வேண்டும்' என்று வற்புறுத்தினார்.

    நவாப் தாங்கள் முகாமிட்டிருந்த கம்பெனி வீட்டிலேயே அவர் கதாகாலட்சேபத்திற்கு ஏற்பாடு செய்தார். கதையைக் கேட்டு ராஜமாணிக்கம் உருகி விட்டார். பந்தள அரசனின் மகனாக வளர்ந்து பனிரெண்டே ஆண்டுகள் மானிட உருவில் வாழ்ந்து பல அற்புதங்களைச் செய்து சபரிமலையில் குடிகொண்ட ஐயப்பன் சரிதம் எல்லோருடைய உள்ளத்தையும் உலுக்கி விட்டது. ராஜமாணிக்கம் அன்று முதல் அயப்பனுக்கு அடிமையானார்.

    `என்ன ஆனாலும் இதை நாடகமாகவே நடத்தியாக வேண்டும். கதை எங்கு நடந்திருந்தாலும் அதிலுள்ள நீதி மனித சமுதாயத்திற்கே இன்றியமையாதது. இப்பேர்ப்பட்ட ஒரு அருள் தெய்வத்தின் கதையை நாடகமாக நடத்தி உலக மக்கள் அறிய செய்கிறேன்' என்று ராஜமாணிக்கம் உறுதி பூண்டார்.

    1944-ம் ஆண்டு ஆலப்புழையில் ஐயப்பன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. மக்கள் ஏராளமாக வந்து நாடகத்தைப் பார்த்து பரவசமானார்கள்.

    சபரிமலையே பார்த்தறியாத ஏராளமான பேர் நாடகத்தைப் பார்த்தபின் மலைக்குச் சென்று அயப்பனை நேரில் தரிசித்தனர்.

    தமிழ்நாட்டில் முதல் முறையாக ஐயப்பன் நாடகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது.

    மதுரையில் இந்த நாடகம் நடந்த போது அந்த நகரை இந்நாடகம் ஒரு கலக்கு கலக்கி விட்டது. இப்படித்தான் தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தி மக்களிடம் மெல்ல, மெல்ல பரவியது. இன்று தமிழர்களின் மனதில் ஐயப்பன் இரண்டற கலந்து நீக்கமற நிறைந்துள்ளார்.

    சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மகிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது.

    பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பன் கோவில் இருக்கிறது. கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் கோவில் காணப்படுகிறது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.

    நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் பழமையான ஆலயங்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் சிதலம் அடைந்த பகுதிகளை காணலாம்.

    ஆண்டு தோறும் சுமார் 5 கோடி முதல் 7 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.

    10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பல்வேறு காரணங்களால் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற அதீகமே. மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும், மகர விளக்கன்றும் (ஜனவரி 14 `மகா சங்கராந்தி') மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

    • ஒருமண்டல காலம் (48 நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்.
    • குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை 108 சரணம் கூறி பூஜை செய்ய வேண்டும்.

    1.சபரிமலை செல்பவர்கள் ஒருமண்டல காலம் (48 நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்.

    2.கருப்பு, நீலம், பச்சை, காவி போன்றவற்றில் ஏதாவது ஒரு நிற வேஷ்டியையும்,சட்டையையும் அணிய வேண்டும்.

    3.கார்த்திகை முதல் நாள் பெற்றோர்களை வணங்கி அவர்களின் அனுமதி பெற்று குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ளவேண்டும். பெற்றோர் மூலமும் மாலை அணிந்து கொள்ளலாம்.

    4.அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை 108 சரணம் கூறி பூஜை செய்ய வேண்டும். இதேபோல சூரியன் மறைந்த பின்பு மாலையில் நீராடி 108 சரணம் கூறி ஐயப்பனுக்குப்பூஜை செய்ய வேண்டும். குளிப்பதற்குச் சோப்பு உபயோகிக்கக்கூடாது.

    5.இரவில் தூங்கும் போது தலையணை, மெத்தை உபயோகிக்க கூடாது. பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

    6. பிரம்மச்சரிய விரதத்தை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது மனோ வலிமையைப் பெருக்கி மனித வாழ்க்கையை உயர்த்துவதற்கு உதவுகிறது. மாதர்கள் யாவரையும் மாதாவாகக் காண வேண்டும். மாதவிலக்குச் சமய மாதர்களுடன் பேசுவதோ, பார்ப்பதோ கூடாது.

    7.சைவ உணவு மட்டும் உண்ண வேண்டும். மது அருந்தக் கூடாது. பீடி, சிகரெட், பான்மசாலா போன்றவற்றை அறவே நீக்கி விட வேண்டும்.

    8. திரிகரண சுத்தி (மனம், வாக்கு, செயல்) ஆகிய வற்றில் கவனமாக இருக்க வேண்டும். ஐயப்பனை எண்ணத்தில் எப்பொழுதும் மனதில் நினைத்து, பக்திப்பூர்வமாக அய்யன் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் எண்ணங்கள் தூய்மையாகும். செய்யும் செயல்களும், பேசும் பேச்சுக்களும் நல்லவிதமாக அமையும்.

    9.சண்டை, சச்சரவுகளில் கலந்து கொள்ளக்கூடாது. எல்லோரிடமும் சாந்தமாகப் பழக வேண்டும்.

    10.காமம், கோபம், கஞ்சத்தனம், மோகம், அகம் பாவம், துவேஷம் முதலிய குணங்களைக் குறைப்பதற்கு உதவ எப்பொழுதும் அய்யப்பன் திருநாமத்தை உறுதுணையாக் கொள்ள வேண்டும். பக்தனின் நெஞ்சினில் எப்பொழுதும் நிறைந்து நிற்பது அய்யப்பனின் பேரொளி திருவுருவமேயாகும்.

    11. உரையாடும் போது சுவாமி சரணம் என்று சொல்லி துவங்குவதும், முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்று சொல்லி முடிப்பதும் நன்மைகளைத் தரும்.

    12. ஒரு ஐயப்ப பக்தரை வழியில் காண நேர்ந்தால் அவர் தெரியாதவராக இருந்தாலும் சுவாமி சரணம் என வணங்க வேண்டும்.

    13. மாலை அணிந்து காணப்படும் ஆண்களை ஐயப்பன் என்றும் பெண்களை மாளிகைப்புறம் என்றும் சிறுவர்களை மணிகண்டன் என்றும் சிறுமிகளைக் கொச்சு சுவாமி என்றும் அழைக்கவேண்டும்.

    14. குடை, காலணிகள், சூதாடுதல், திரைப்படங் களுக்குச் செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

    15. விரத காலங்களில் உணவின் அளவைக் குறைத்து உடலைக்குறைத்துக் கொள்ள வேண்டும். மார்கழி மாதத்தில் பதினைந்து தினங்களுக்காவது ஒரு வேளை உணவை விடுத்து விரதம் இருக்க வேண்டும்.

    16. இலையில் சாப்பிடுவது நல்லது. உணவு உண்ண ஆரம்பிக்கும் பொழுது ஐயனை மனதில் நினைத்து, சரணம் கூறி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

    17. கன்னி சுவாமிகள் கன்னி பூஜை நடத்த வேண்டும் அல்லது ஒரு சுவாமிக்காவது அன்னதானம் செய்ய வேண்டும்.விரத காலங்களில் இயன்ற வரை அன்னதானம் செய்ய வேண்டும்.

    18. நமது நெருங்கிய ரத்தத் தொடர்பு உள்ள தாய், தந்தை, சகோதரிகள் போன்றவர்களில் யாருக்காவது மரணம் ஏற்படுமாயின் மாலையைக் கழற்றி விட வேண்டும்.

    19. பெண்கள் ருது மங்கல சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக்கூடாது.

    20. விரத காலங்களில் தலைமுடி வெட்டிக் கொள்வதோ, சேவிங் செய்து கொள்வதோ கூடாது.

    21. மாலை அணிந்த எந்த ஐயப்பன் வீட்டிலும் உணவு அருந்தலாம். கடைகளில் சாப்பிடுவது, தெருக்களில் விற்கும் பலகாரங்களை உண்பது கண்டிப்பாகக்கூடாது.

    22. பக்தர்கள் நடத்தும் ஐயப்ப பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

    • நெய் பண்டம் அதிக நாள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
    • நைவேத்தியப் பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல்.

    சபரிமலை ஐயப்பன் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார். அவரைக்காண வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி செல்வார். செல்லும் பாதை படுமோசமாக இருக்கும். அவரது இருப்பிடத்தை அடைய பல நாட்களாகும். மகனைக்காண செல்லும் தந்தை பண்டங்களை கொண்டு செல்வார்.

    நீண்ட நாட்கள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக நெய் பண்டங்களை கொண்டு செல்வார். நெய்ப்பண்டம் அதிக நாள் கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த வழக்கத்தின் காரணமாகத்தான் பிற்காலத்தில் ஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு போகும் பழக்கம் ஏற்பட்டது.

    சபரிமலையில் செய்ய வேண்டிய நியதிகள்

    1. இருமுடியுடன் 18 படி ஏறுதல்

    2. நெய் அபிஷேகம்

    3. தீபஸ்தம்பத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல்

    4. நைவேத்தியப் பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல் (கற்பூர ஆழி எடுத்தல்)

    5. ஐயப்ப தரிசனம்

    6. மஞ்சமாதா தரிசனம்

    7. மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு

    8. கடுத்த சுவாமிக்குப் பிரார்த்தனை

    9. கருப்பசுவாமிக்குப் பிரார்த்தனை

    10. நாகராஜா, நாகயட்சிக்குப் பிரார்த்தனை

    11. வாபர் சுவாமிக்கு காணிக்கை செலுத்துதல்

    12. திருவாபரணம் பெட்டி தரிசனம்

    13. ஜோதி தரிசனம்

    14. பஸ்மகுளத்தில் குளித்தல்

    15. மகரவிளக்குத் தரிசனம்

    16. பிரசாதம் பெற்றுக்கொள்ளுதல் (அரவனை, பாயசம், அப்பம் உள்பட)

    17. தந்திரி, மேல் சாந்திகளை வணங்குதல்

    18. 18 படி இறங்குதல்

    இவை ஜோதி சமயம் செல்பவர்களுக்கு உள்ள நியதி. மற்றவர்கள் ஜோதி தரிசனம் திருவாபரணம் பெட்டி தரிசனம் தவிர மற்றவை - செய்யலாம்.

    ×