search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசியில் சாரல் மழை: குற்றாலம் அருவிகளில்  குளிக்க அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
    X

    நெல்லை, தென்காசியில் சாரல் மழை: குற்றாலம் அருவிகளில் குளிக்க அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் சேர்ந்து பனிமூட்டமாகவும் காட்சி அளித்தது
    • நேற்று இரவு மூலக்கரைப்பட்டி, களக்காடு, பாளை, நெல்லை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இன்றும் அதிகாலை 3 மணி முதல் விட்டு விட்டு சாரல் அடித்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்தது. காலையில் வானம் மேகமூட்டத்துடன் சேர்ந்து பனிமூட்டமாகவும் காட்சி அளித்தது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் அடிக்காமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மட்டும் அல்லாமல் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.

    இந்நிைலயில் நேற்று இரவு மூலக்கரைப்பட்டி, களக்காடு, பாளை, நெல்லை, நாங்குநேரி உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இன்றும் அதிகாலை 3 மணி முதல் விட்டு விட்டு சாரல் அடித்தது.

    சிரமம்

    மாநகர், புறநகர் பகுதிகளில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. சாலைகளை மறைக்கும் அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் காலையில் பணிக்கு புறப்பட்டு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக களக்காட்டில் 4.8 மில்லிமீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 4 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கன்னடியன் பகுதியில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளில் மழை குறைவால் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதலே மெயினருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    சாரல் மழை

    அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற அணைகளில் மழை இல்லை.

    மாறாக மாவட்டம் முழுவதும் வானம் இருண்டு காணப்பட்டது. குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆலங்குளம், கடையம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

    Next Story
    ×