search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtalam"

    • பாபநாசம் அணை நீர்மட்டம் 142.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.65 அடியாகவும் உள்ளது.
    • விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொட்டிய கன மழையால் களக்காடு தலையணையில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    அணை பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 50 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 36 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த அணைகளுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,753 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1,505 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 142.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.65 அடியாகவும் உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 114.29 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 1240 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 1,980 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் மாஞ்சோலை நாலு முக்கு, காக்காச்சி உள்ளிட்ட தொடர்ந்து ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதியில் இருந்தே சுமார் 2 மாதங்களாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது. தொடக்கத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. தொடர்ந்து பார்வையிட அனுமதி வழங்கிய நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிடவும் தடை விதித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 68 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் காக்காச்சியில் 52 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 48 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 45 மில்லி மீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 51 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் தாமிரபரணி ஆற்றில் இன்று காலை 5000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இதனால் விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இன்று காலையில் புலியருவி, ஐந்தருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஆண்கள் பகுதியில் மட்டும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் தடை நீடிக்கிறது.

    காலை முதல் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. கடனா, ராமநதி அணைகள் நிரம்பிய நிலையில் அந்த அணைகளுக்கு வரும் நீரானது உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மழையினால் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பரவலாக கனமழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையினால் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2 அருவிகளிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இருப்பினும் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டினாலும் சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஓரமாக நின்று குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இன்று காலையிலும் மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மற்ற அருவிகளான பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்த காரணத்தினால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • மெயின் அருவியில் ஆர்ச் வளைவை தாண்டியும், பழைய குற்றாலம் அருவியில் படிக்கட்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து வழிந்து ஓடியது.
    • ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காலையில் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்தது.

    தொடர்ந்து இரவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தென்காசியின் முக்கிய சாலைகள் எங்கும் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுகளும் சாலை எங்கும் சென்றது. மேலும் குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட முக்கிய அருவிகளில் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசாரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. மெயின் அருவியில் ஆர்ச் வளைவை தாண்டியும், பழைய குற்றாலம் அருவியில் படிக்கட்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து வழிந்து ஓடியது. இன்று காலை வரை மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் அந்த 2 அருவிகளிலும் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காலையில் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

    • தண்ணீரோடு சேர்ந்து கற்களும் அடித்து வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பிரதான அருவிகள் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் குற்றாலம் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இருப்பினும் மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதாலும் அருவியில் தண்ணீரோடு சேர்ந்து கற்களும் அடித்து வரப்படுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை முதல் தென்காசியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    • அணைகளை பொறுத்தவரை ராமநதி மற்றும் குண்டாறு அணை பகுதியில் விட்டுவிட்டு சாரல் பெய்தது.
    • அதிகபட்சமாக திருச்செந்தூரில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்றும் காலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது. பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. அங்கு 23 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி எஸ்டேட்டுகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அம்பை, ராதாபுரம், களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் பாளையில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளில் சேர்வலாறில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் காலை முதலே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்கு குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. அதிகபட்சமாக ஆய்குடியில் 36 மில்லிமீட்டரும், தென்காசியில் 32 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    அணைகளை பொறுத்தவரை ராமநதி மற்றும் குண்டாறு அணை பகுதியில் விட்டுவிட்டு சாரல் பெய்தது. கடனா அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது. கொடுமுடியாறு மற்றும் அடவிநயினார் அணைகளில் லேசான சாரல் பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று சிரமம் அடைந்தனர். உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    இதேபோல் குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி, நாலாட்டின்புதூர், எட்டயபுரம், காடல்குடி, சூரன்குடி, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கடம்பூர், கழுகுமலை ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. இரவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    • தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தினால் சுமார் 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • ஐந்தருவி மற்றும் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை கால கட்டத்தின் போது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

    இந்த சீசன் காலத்தில் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்வார்கள். வார இறுதி நாட்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். இதனையொட்டி சாலையோர கடைகள், அருவிக்கரைகளில் கடைகள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து ரம்பூட்டான் உள்ளிட்ட ஏராளமான சீசன் பழங்கள் விற்பனைக்கு வரும்.

    இந்த ஆண்டு சீசன் சற்று தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும் தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தினால் சுமார் 10 நாட்கள் மட்டுமே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

    ஆனாலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து செல்கின்றனர். நேற்று தென்காசி மாவட்டம் முழுவதும் கடுமையான வெயிலின் தாக்கம் இருப்பதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இருப்பினும் இன்று விடுமுறை தினம் என்பதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    இதனால் அனைத்து அருவிகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.

    குறிப்பாக இன்று காலை முதலே ஐந்தருவி மற்றும் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவற்றில் வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    • மெயின் அருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
    • ஐந்தருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு இருப்பதால் அங்கு குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக சீசன்களை கட்டும். அப்போது குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

    மலைகளில் உள்ள மூலிகை செடிகளின் வழியாக வரும் இந்த தண்ணீரில் குளிப்பதற்காக உள்ளூர், வெளியூர் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள். இதனால் அருவிக்கரையோரம் வியாபாரிகள் கடை அமைத்து வியாபரத்தில் ஈடுபடுவார்கள். கேராளாவில் இருந்து சீசன் பழங்கள் விற்பனைக்கு வரும். இந்நிலையில் கடந்த மாதம் தொடங்க வேண்டிய சீசன் மிகவும் தாமதமாக தொடங்கியது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பரவலாக பெய்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் மெயின் அருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு இருப்பதால் அங்கு குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம், பழைய குற்றாலம் மற்றும் சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளுக்கும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால் குற்றாலத்தில் ரம்மியமான சூழ்நிலை நிலவி வருகிறது. குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் தென்காசி நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    • பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைப்பகுதிகளில் இன்று காலை வரையிலும் மழை விட்டு விட்டு பெய்தது.

    பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு தற்போது 367 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் தற்போது 45.90 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 59 அடி நீர் உள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 26 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 19 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, கொடுமுடியாறு, நம்பியாறு, பாபநாசம், பாளை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    கொடுமுடியாறு அணை பகுதியில் 10 மில்லிமீட்டரும், நம்பியாறில் 7 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மிதமான மழை பெய்தாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு போதிய நீர்வரத்து இல்லாமல் அருவிகள் அனைத்தும் பாறைகளாகவே காட்சியளிக்கின்றன.

    • மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிக்கரைகளிலும் நடமாடும் குரங்குகளுக்கு அவர்கள் உணவளிப்பார்கள்.
    • குற்றாலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவளிப்பதை நிறுத்த வேண்டும்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருவார்கள். அப்போது மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிக்கரைகளிலும் நடமாடும் குரங்குகளுக்கு அவர்கள் உணவளிப்பார்கள்.

    இதனால் சமீப காலமாக குரங்குகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து அதிக அளவில் புறப்பட்டு அருவிக்கரைகளில் நடமாட தொடங்கிவிட்டன. இதனால் அவை உணவுக்காக கடைகளில் புகுவதும், சுற்றுலா பயணிகளை கடித்து காயப்படுத்துவதும் என பல்வேறு விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் சென்றது.

    இதையடுத்து இன்று மெயினருவி கரையில் வனத்துறை சார்பில் ஒரு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், குற்றாலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவளிப்பதை நிறுத்த வேண்டும். அவைகளுக்கு மனிதர்கள் உணவளிப்பது தவறு.

    இது அவைகளை இடையூறு செய்வதற்கு சமம். எனவே குரங்குகளுக்கு இனி யாரேனும் உணவளித்தால் வன உயிரின சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வனச்சரக அலுவலர் பெயரில் வைக்கப்பட்டுள்ள அந்த பலகையில் எழுதப்பட்டுள்ளது.

    • தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலம் சேனைத் தலைவர் விடுதியில் நடைபெற்றது.
    • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால்வசந்தகுமார் சத்தியநாராயணா தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலம் சேனைத் தலைவர் விடுதியில் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வே.புதியவன் தலைமை தாங்கினார். தென்காசி எம்.முத்துசாமி முன்னிலை வகித்தார். குருவிகுளம் ஆர். தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் கிருஷ்ண குமார் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில், தமிழக அரசு திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரை மாற்றி கலைஞரால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர் என்ற பெயரை சூட்ட வேண்டும், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் அந்தந்த மாதத்திலேயே கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால்வசந்தகுமார் சத்தியநாராயணா தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற்று மக்கள் நலப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நிரந்தர பணி வழங்க வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களின் கோரிக்கையை வென்றெடுக்க தொடர் போராட்டம் நடத்த மாநில மையத்தை இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது உள்ளிட்ட தீர்மான ங்கள் நிறைவேற்றப் பட்டது.

    தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் . அதன்படி தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் தலைவராக வாசுதேவநல்லூர் எஸ்.முருகன், மாவட்ட செயலாளராக தென்காசி எம். முத்துசாமி, மாவட்ட பொருளாளராக கீழப்பாவூர் எஸ். அருணாசலம், துணைத் தலைவர்களாக மேலநீலிதநல்லூர் பி லட்சுமி, குருவிகுளம் ஆர். தர்மராஜ், துணைச் செயலாளராக ஆலங்குளம் மு திராவிட மணி, கடையநல்லூர் கருப்பசாமி, சங்கரன்கோவில் சண்முகச்சாமி ஆகியோரும் மாநில செயற்குழு உறுப்பின ர்களாக சங்கரன்கோவில் மாரியப்பன், செங்கோட்டை பண்டாரசிவன், தென்காசி அந்தோணி செல்லதுரைச்சி, கடையநல்லூர் ராஜேந்திரன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் தொடர் நடவடிக்கைகள் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பேசினார்கள். முடிவில் தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வாசுதேவநல்லூர் எஸ்.முருகன் நன்றி கூறினார்.

    • தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த திவான் மைதீன், செய்யது ஜலால், முகம்மது ஹாஜி, காஜாமுகைதீன், முகம்மது அர்சத் ஆகிய 5 வாலிபர்கள் ஒரு காரில் குற்றாலம் சென்றனர்.
    • இலஞ்சி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த திவான் மைதீன், செய்யது ஜலால், முகம்மது ஹாஜி, காஜாமுகைதீன், முகம்மது அர்சத் ஆகிய 5 வாலிபர்கள் ஒரு காரில் குற்றாலம் சென்றனர்.

    மரத்தில் கார் மோதியது

    அவர்கள் அனைவரும் அங்கு குளித்துவிட்டு மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த னர். இலஞ்சி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரில் வந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதில் செய்யது ஜலால், முகம்மது ஹாஜி ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். இதனால் அவர்கள் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • குழந்தையை மீட்டவுடனே அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.
    • விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுமியை மீட்ட வாலிபருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் லைன் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பது மகன் விஜயகுமார் (வயது24).

    இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று விஜயகுமார் தனது காரில் சவாரி ஏற்றிக்கொண்டு பழைய குற்றாலத்திற்கு சென்றார்.

    அங்கு காரை நிறுத்திவிட்டு விஜயகுமார் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தாா்.

    அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஹரிணி என்ற 4 வயது சிறுமி திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு 50 அடி பள்ளத்தில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தார்.

    அதைப் பார்த்த விஜயகுமார் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், கருங்கல் பாறை வழியாக 50 அடி பள்ளத்தில் உடனடியாக இறங்கி துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி ஹரிணியை பத்திரமாக மீட்டார்.

    குழந்தையை மீட்டவுடனே அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தையை பெற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர்.

    தன்னுடைய உயிரை பொருட்படுத்தாத 50 அடி பள்ளத்தில் உடனடியாக இறங்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை விளாத்திகுளத்தை சேர்ந்த வாலிபர் விஜயகுமார் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    மேலும் விஜயகுமாருக்கு பொது மக்களின் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

    தனது உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றிய அசாத்திய இளைஞர் விஜயகுமாரின் மன தைரியத்தை பாராட்டுகிறேன் என விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    ×