search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கால் தடை நீடிப்பு: குற்றாலம் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் படையெடுப்பு
    X

    குற்றாலம் மெயினருவியில் ஆர்ப்பரித்துக்கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

    ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கால் தடை நீடிப்பு: குற்றாலம் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் படையெடுப்பு

    • மெயின் அருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
    • ஐந்தருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு இருப்பதால் அங்கு குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக சீசன்களை கட்டும். அப்போது குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

    மலைகளில் உள்ள மூலிகை செடிகளின் வழியாக வரும் இந்த தண்ணீரில் குளிப்பதற்காக உள்ளூர், வெளியூர் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள். இதனால் அருவிக்கரையோரம் வியாபாரிகள் கடை அமைத்து வியாபரத்தில் ஈடுபடுவார்கள். கேராளாவில் இருந்து சீசன் பழங்கள் விற்பனைக்கு வரும். இந்நிலையில் கடந்த மாதம் தொடங்க வேண்டிய சீசன் மிகவும் தாமதமாக தொடங்கியது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பரவலாக பெய்தது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் மெயின் அருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு இருப்பதால் அங்கு குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம், பழைய குற்றாலம் மற்றும் சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளுக்கும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால் குற்றாலத்தில் ரம்மியமான சூழ்நிலை நிலவி வருகிறது. குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் தென்காசி நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    Next Story
    ×