search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode"

    • கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.

    ஈரோடு:

    மதுரையைச் சேர்ந்த திருமலை செல்வனுக்கும், ஈரோடு, மாணிக்கம் பாளையம், முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சுகன்யா (வயது 23) என்பவருக்கும் திருமணம் ஆகி 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு மகனும் என 2 குழந்தைகள் உள்ளனர். சுகன்யா மதுரையில் கணவருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் திருமலை செல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு சந்தேகப்பட்டு சரண்யாவை அடித்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் சுகன்யா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு முன்பாக ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

    ஈரோட்டில் தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி இருந்த சுகன்யா சாயப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திருமலை செல்வன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக ஈரோடுக்கு வந்தார். சுகன்யாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.

    அப்போது இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த திருமலை செல்வன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் இரு குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

    இதில் சுகன்யா மற்றும் 7 வயது மகள் சுதாரித்து விலகிய நிலையில் 4 வயது மகன் மீது தீப்பிடித்தது. இதனால் மகன் வேதனையால் அலறினான்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகன்யா கூச்சிலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். அங்கு 70 சதவீத தீக் காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.

    இதுகுறித்து சுகன்யா ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திரு மலைச்செல்வனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜாமினில் வெளியே வந்தவர்களில் யாரேனும் பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
    • கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேமலைகவுண்டன் பாளையத்தில் தோட்ட வீட்டில் இருந்த தெய்வ சிகாமணி, அலமேலு, செந்தில்குமார் ஆகிய 3 பேரை நள்ளிரவில் மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்க 14-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதே சம்பவம் போல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அரச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக தோட்ட வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதிகளை கொலை செய்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் நடந்தது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு 14 பேரை ஈரோடு மாவட்ட போலீசார் சிறையில் அடைத்தனர்.

    சிறையில் இருந்த சிலர் ஜாமின் பெற்று வெளியே வந்துள்ளனர். ஜாமினில் வெளியே வந்தவர்களில் யாரேனும் பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பல்லடம் கொலை சம்பவமும், சென்னிமலை கொலை சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    திருப்பூரை ஒட்டிய ஈரோடு மாவட்டத்தில் தோட்ட வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்ப தியரை தாக்கி இதுபோல் கொலை நடக்க கூடும் என போலீசார் சந்தேகிப்பதால் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர் போன்ற பகுதிகளில் இதுபோன்று தனியாக ஏராளமான தோட்ட வீடுகள் இருக்கின்றன. இந்த வீடுகளில் வயதான தம்பதிகள் வசித்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் தனியாகவும் சாலையை ஒட்டி பகுதியில் 570 தோட்ட வீடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெருந்துறை பகுதியில் மட்டும் 270 வீடு கள் உள்ளன. இந்த 570 வீடுகளுக்கு முன்னுரிமை அளித்து இரவு நேரங்களில் அந்தந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் நேரடியாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இரவு முதல் காலை வரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதைப்போல் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சந்தேகப்படும்படி நபர்கள் யாராவது செல்கிறார்களா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஏற்காட்டில் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவி வருகிறது.
    • வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சேலம்:

    தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தொடர்ந்து நேற்று டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது.அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே பனி மூட்டம் நிலவியதுடன் சாரல் மழையும் பெய்தது.

    குறிப்பாக ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் ஏற்காட்டில் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவி வருகிறது.


    ஏற்காட்டில் நேற்று பகல் தொடங்கிய மழை இரவு முழுவதும் சாரல் மழையாக நீடித்த நிலையில் இன்று காலையும் சாரல் மழையாக பெய்தது. ஏற்காடு பஸ் நிலையம் , ரவுண்டானா, அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் முதலே பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.

    இரவு முழுவதும் விடிய விடிய சாரல் மழை பெய்த நிலையில் பனி பொழிவும் அதிக அளவில் உள்ளதால் கடும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

    ஏற்காட்டில் நிலவி வரும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக அதிக குளிர் வாட்டி வதைக்கிறது. மேலும் ஏற்காட்டில் பனி பொழிவு அதிக அளவில் உள்ளதால் அருகில் நிற்பவர்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலை உள்ளது.

    மேலும் மலைப்பாதை யில் நிலவிவரும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக வாகன ங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஊர்ந்த படி சென்று வருகின்றன. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.


    குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காபி தோட்ட தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி உள்ளதால் உள்ளூர் வாசிகளின் வருமானமும் பாதிக்கப்ப ட்டுள்ளது. குறிப்பாக காப்பி தோட்ட பணிகளும் முடங்கி உள்ளது. தொடர் மழை மற்றும் பனியால் மிளகு கொடிகள் அழுகும் நிலையில் உள்ளது.

    சேலம் மாநகரில் நேற்று மாலை பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் சற்று தூரத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட சரியாக தெரியாத நிலை இருந்தது. இதனால் 4 வழிச்சாலைகளில் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்களும் சென்றன. மேலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததுடன் கடும் குளிர் நிலவியது.

    குறிப்பாக பாதசாரிகள், வாகன ஓட்டிகள் குளிரில் நடுங்கிய படி சென்றனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு சென்று விட்டு நேற்று மாலை வீட்டிற்கு திரும்பியவர்கள் சிறு தூரலுடன் கடும் குளிர் நிலவியதால் கடும் அவதி அடைந்தனர்.

    இதே போல சேலம் மாநகரில் இன்று காலையும் பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை பனிப்பொழிவு இருந்தது. திருச்செங்கோடு, கொல்லிமலை மலை பகுதியில் பனிப்பொழிவுன் தாக்கம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சாரல் மழையும் பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, திம்பம் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்த வழியாக வந்த செல்லும் வாகனங்கள் பகல் நேரத்திலேயே முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றது.

    நாள் முழுவதும் நீடிக்கும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    நீலகிரி மாவட்டத்திலும் கடுமையான உறைபனி நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் புல்வெளிகளில் பனிபடர்ந்து காணப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் கம்பளி ஆடைகளை அணிந்தப்படி வெளியே வந்து செல்கின்றனர்.

    பனிப்பொழிவு அதிக அளவில் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளும் அவதியடைந்து வருகின்றனர். இதே போல் கோவை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று காலையும் பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது.

    திருப்பூர் மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவியது. இன்றும் பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி சென்றது.

    இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே ஈரோடு மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் வழக்கம் போல் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் மாலை 4 மணி அளவில் திடீரென லேசான காற்று மற்றும் இடியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ஈரோடு அகில்மேடு வீதியில் சின்ன மார்க்கெட் பகுதி அம்மா உணவகத்தில் மழைநீர் சூழ்ந்து வெள்ள காடாக காட்சியளித்தது. இதனால் இந்த பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இதுபோல் கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதியில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட் வளாகத்தில் வழக்கம் போல் மழைநீர் தேங்கி நின்று சேரும் சவுதியுமாக காட்சியளித்ததால் காய்கறிகள் வாங்க சென்ற பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இங்கே லேசாக மழை பெய்தாலே சேரும் சகதியுமாக காட்சியளிப்பது தொடர்கதை ஆகி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரத்தின்படி, மாவட்டத்தில் 37.40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 14.20 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

    மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் பெய்திருந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    ஈரோடு-14.20, கொடுமுடி-6, பெருந்துறை-5, சென்னிமலை-2, பவானி-1.60, குண்டேரிப்பள்ளம்-1.20, பவானிசாகர் அணை-7.40.

    • நெல், மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் புன்செய், நன்செய் பாசனத்துக்கு திறக்கப்படும்
    • எதிர்காலத்தில் அரசு விவசாயத் தொழிலை நேரடியாக செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது, போதிய விலை கிடைக்காததால் விவசாயத்தை விட்டு வெளியேறும் விவசாயிகள் போன்ற காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவது வேளாண்துறையின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.

    தமிழகத்தில் காவிரி நதி பாயும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்வது ஈரோடு மாவட்டத்தில் தான். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு கீழ்பவானி, கொடிவேரி, காலிங்கராயன் பாசன வாய்க்கால்களில் பாசனம் நடைபெறுகிறது.

    நெல், மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் புன்செய், நன்செய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நெல் சாகுபடி பரப்பு கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவது விவசாயிகள் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மைக் காலமாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த பல விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு பேசி விற்பனை செய்வதும், வேளாண் தொழிலில் போதுமான லாபம் கிடைக்காதது போன்ற காரணங்களால் நெல் சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கீழ் பவானி, கொடிவேரி, காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நன்செய், புன்செய் உள்ளிட்ட 3 சீசன்களிலும் ஒவ்வொரு சீசனுக்கும் தேவைக்கேற்ப சராசரியாக 30 முதல் 35 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

    நெல் கொள்முதல் மையம் மூலமாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை தேவைக்கேற்ப மாடர்ன் ரைஸ் மில்களுக்கு அனுப்பி அரிசி உற்பத்தி செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தனியார் நெல் கொள்முதல் செய்பவர்களிடமும் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்கின்றனர்.

    இருப்பினும் பெரும்பகுதி நெல், அரசு கொள்முதல் மையங்கள் மூலமாக அரசு நிர்ணயித்த விலைக்கு வாங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 76 ஆயிரத்து 223 ஏக்கரிலும், 2022-23ம் ஆண்டில் 75 ஆயிரத்து 608 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் 10 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி குறைந்திருந்த நிலையில் கடந்த 2023-24ம் ஆண்டில் நெல் சாகுபடி மேலும் 15 ஆயிரம் ஏக்கர் குறைந்து 60 ஆயிரத்து 198 ஏக்கர் மட்டுமே நெல் சாகுபடி ஆனதாக வேளாண் துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    அதேசமயம் கடந்த 2021-22ம் ஆண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் மையங்களில் இருந்து மொத்தம் 96 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் ஆனது. ஆனால் 2022-23ம் ஆண்டில் நெல் கொள்முதல் மையங்கள் மூலம் 71 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதலானதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    ஒரே ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் 15 ஆயிரம் மெட்டரிக் டன் நெல் கொள்முதல் குறைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு 2024-25ம் ஆண்டில் தற்போது தான் நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு நெல் நடவு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிலும் நெல் நடவு கடந்த ஆண்டை விட குறைந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    நெல் சாகுபடி பரப்பு குறைந்ததற்கான காரணம் குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் வலது கரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் விவசாய தொழில்களை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர்.

    விவசாய குடும்பத்திலேயே அடுத்த தலைமுறை விவசாயிகள் குறைந்து போவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. பலரும் நன்கு படித்து தொழிலதிபர்கள் ஆகவும் ஐ.டி., அரசுத் துறைகளில் உயர் பதவிகளுக்கு செல்கின்றனர். விவசாயத் தொழிலில் போதுமான லாபம் கிடைக்காததும் விவசாய தொழிலை கைவிட காரணமாக உள்ளது. எதிர்காலத்தில் அரசு விவசாயத் தொழிலை நேரடியாக செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்.
    • சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 15,000 மலையாளி இன மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வசிக்கும் மலையாளி இனமக்களுக்கு எஸ்.டி பட்டியலில் சாதி சான்று பெற்றுள்ளனர்.

    ஆனால் ஈரோடு மாவ ட்டத்தில் கடம்பூர், பர்கூர் மலைகளில் வசிக்கும் மலையாளி மக்களுக்கு அவ்வாறு சான்று வழங்க மறுக்கின்றனர். இதனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு, அரசு சலுகை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பல வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடம்பூர் மலை குத்தியாலத்தூர் ஊராட்சி கரளியம், கல் கடம்பூர், பெரியசாலட்டி, சின்னசாலட்டி, இருட்டிபாளையம், கிட்டாம்பாளையம், அத்தியூர் உள்பட 21 கிராமங்களில் பந்தல் அமைத்து கோரிக்கைகள் அடங்கிய பதவிகளை பிடித்து பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவர்களுடன் 21 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் விளம்பர தட்டிகள், போர்டுகளை அகற்றினர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதற்கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை என தொடர்ந்து பண்டிகை வர உள்ளதால் போக்குவரத்தை சரி செய்யும் வகையில் ஈரோடு மாநகர் பகுதியில் 2-வது கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

    கருங்கல்பாளையம் முதல் காளை மாட்டு சிலை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மீனாட்சி சுந்தரனார் சாலை வழியாக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை ஆக்கிரமிப்புகள் மற்றும் பணி தொடங்கியது.


    இதற்காக மாநகராட்சி சார்பில் பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் விளம்பர தட்டிகள், போர்டுகளை அகற்றினர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வியாபாரிகள், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நாளை ஈரோடு-மேட்டூர் ரோடு ஸ்வஸ்திக் கார்னர் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.

    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் மிக முக்கிய போக்குவரத்து சாலையாக ஈரோடு அரசு மருத்துவமனை, ஜி.எச்.ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், எல்லை மாரியம்மன் கோவில். ஈரோடு பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், கருங்கல்பாளையம் காந்தி சிலை, ஆர்.கே.வி. ரோடு, மணிக்கூண்டு, காந்திஜி ரோடு, காளைமாட்டு சிலை சாலை என பல பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலையோர ஆக்கிரமிப்பு தான். இதனையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரோடு பன்னீர்செல்வம் முதல் எல்லை மாரியம்மன் கோவில் வரையிலும், ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி.ரோடு, பஸ் நிலையம் என பல பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் மீண்டும் அதே இடங்களில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டன. இதனால் மீண்டும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின் பேரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதற்கட்டமாக பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    தற்போது இன்று 2-ம் கட்டமாக கருங்கல்பாளையம் காந்தி சிலை, ஆர்.கே.வி. ரோடு, மணிக்கூண்டு, காந்திஜி ரோடு, காளை மாட்டு சிலை சாலை வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் ஆக்கிரமிப்பு பணி அகற்றும் போது கடை உரிமையார்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் இதே சாலைகளில் கடைகளின் முன்புறம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு, அதற்கென மாநகராட்சி இடத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர், மின்சாரத்துறையினர், போலீசார், போக்குவரத்து போலீசார், தொலை தொடர்பு துறையினர், சுகாதார துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

    சாலைகளை ஆக்கிரமித்து உள்ள விளம்பர தட்டிகள், பலகைகள், கழிவுநீர் கால்வாய் மீது அத்துமீறி கட்டப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்புகளை பணியாளர்கள் அகற்றினர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து 3-ம் கட்டமாக நாளை பன்னீர்செல்வம் பூங்கா முதல் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வரை மீனாட்சி சுந்தரானார் சாலையிலும், நாளை மறுநாள் ஈரோடு சுவஸ்திக் கார்னர் ரவுண்டானா முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வரை மேட்டூர் ரோட்டிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றபட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வாகன ஓட்டிகள் அனல் காற்றால் அவதி அடைந்தனர்.
    • பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்து விட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. அதிகபட்சமாக 109 டிகிரி வரை வெயில் பதிவானதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்தனர். வாகன ஓட்டிகள் அனல் காற்றால் அவதி அடைந்தனர். அதன் பிறகு பருவமழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இதனால் ஈரோடு மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திர வெயில் தோற்றுப்போகும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்து விட்டனர்.

    தொடர்ந்து 103 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    வீடுகளில் 24 மணி நேரமும் மின்விசிறி தொடர்ந்து இயங்கினாலும் வெளியில் தாக்கத்தினால் புழுக்கம் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். வெளியே செல்லும்போது தோல் எரிவது போன்று உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இளநீர், மோர், கரும்பு, குளிர பானங்களை மக்கள் அதிக அளவில் விரும்பி பருகி வருகின்றனர். மீண்டும் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என மக்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 13 பேரை கைது செய்தனர்.
    • சேவல் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே மாரம்பாளையம், முந்திரி தோப்பு பகுதிகளில் சட்டவிரோதமாக சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் தலைமையில் சத்தியமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சிலர் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு வெட்ட வெளியில் கட்டு சேவல்களை வைத்து சூதாட்டம் நடத்தி கொண்டு இருந்தனர்.

    அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 5 சேவல்கள், ரூ.97 ஆயிரத்து 120 பணம், 11 செல்போன்கள் மற்றும் 13 இரு சக்கர வாகனங்கள், சேவல் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள்

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள்

    இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலம் உத்தண்டியூர் வீரமணிகண்டன் (33), பவானி அஜித் (26), புளியம்பட்டி பிரேம் ஆனந்த் (31), கோவை மாவட்டம் அன்னூர் சசிகுமார் (30), பவானிசாகர் ரமேஷ் (40), சுபாஷ் (24), அவினாசி மணிகண்டன் (26), அன்னூர் பிரபாகரன் (32), யுவராஜ் (32), சரவணன் (39), தினகரன் (25), லோகநாதன் (64) , ரமேஷ் குமார் (28), என்பது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 13 பேரையும் கைது செய்தனர்.

    இந்த பகுதிகளில் வெளி மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து கட்டு சேவல்களை கொண்டு வந்து சிலர் தொடர்ந்து சூதாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மது போதையில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக தோட்டம் காடுகளுக்கு செல்வதற்கு மிகவும் பயமாக உள்ளது.

    மேலும் திருட்டு சம்பவம் நடக்கிறது என பொதுமக்கள் புகார் கூறினர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பெற்றோருக்கும் இன்று ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை என குறுஞ்செய்தி பள்ளி நிர்வாகம் சார்பாக அனுப்பப்பட்டது.

    ஈரோடு:

    நாடு முழுவதும் சமீப காலமாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது புரளி என தெரிய வந்தது.

    இந்நிலையில் இன்றும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று காலை 8.15 மணிக்கு பள்ளியின் இணையதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அதில் உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் விடுதியிலும் மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டனர்.

    காலை 8.15 மணி என்பதால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து விட்டனர். பள்ளி வாகனங்களில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் அவசர அவசரமாக திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் பெற்றோருக்கும் இன்று ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை என குறுஞ்செய்தி பள்ளி நிர்வாகம் சார்பாக அனுப்பப்பட்டது.

    இதை பார்த்து குழப்பம் அடைந்த பெற்றோர் இதுகுறித்து விசாரித்தபோது பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது தெரிய வந்தது. இதனால் பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு விரைந்து வந்தனர். மாணவ, மாணவிகள் பெற்றோருடன் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விடுதியில் தங்கி படித்த மாணவ, மாணவிகள் அவசரமாக தங்களது பொருட்களுடன் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அருகே உள்ள பள்ளி மைதானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். இது குறித்து அவர்களது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவு போலீசார், அதிவிரைவு படை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு சென்றனர்.

    பள்ளியின் ஒவ்வொரு பகுதியாகவும், ஒவ்வொரு வகுப்பறையாகவும் அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு சோதனையிட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு சென்று பார்வையிட்டு பள்ளியின் வரைபடத்தையும் பார்வையிட்டார். முன்னெச்சரிக்கையாக பள்ளியின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • மேக கூட்டங்கள் சிவப்பு நிறங்களில் காட்சி அளித்தது.
    • பொதுமக்கள் பலர் பக்தி பரவசம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆரம்பித்து பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் மறைகிறது. இதனால் சுமார் 7 மணி வரை வெளிச்சம் இருந்து கொண்டே உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் சூரியன் மறையும் போது மேக கூட்டங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது.

    ஒரு சில இடங்களில் சூரியன் மறையும் நேரத்தில் மேக கூட்டங்கள் சிவப்பு நிறம் மற்றும் பல்வேறு நிறங்களில் காட்சி அளித்தது.

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஊராட்சி கோட்டை மலைப்பகுதியில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து மேக கூட்டங்களில் சிவலிங்கம் தோன்றுவது போன்று காட்சியளித்தது.

    நேரம் செல்ல, செல்ல சிவப்பு நிறத்தின் நடுவே சிவலிங்கம் இருப்பது போல் தனியாக தோன்றியது. இதனை கண்ட பொதுமக்கள் பலர் பக்தி பரவசம் அடைந்தனர். வானில் சிவபெருமான் தோன்றி காட்சி அளித்து வருகிறார் என ஒருவருக்கொருவர் பேசி கொண்டனர்.

    இந்த காட்சியை அந்த பகுதியில் உள்ளவர்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டனர். மேக மூட்டங்களில் சிவலிங்கம் தோன்றிய காட்சியை அந்த பகுதிகளில் உள்ள மக்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வெவ்வேறு பகுதிகளில் இருந்தவர்கள் அந்த படத்தை பார்த்து சிவன் நேரில் தோன்றியது போன்றே காட்சியளிக்கிறது.

    மேலும் பனிலிங்கத்தை காண்பது போன்று காட்சியும் மனதில் தோன்றுகிறது என ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×